
சென்னை: தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2.57 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.
குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

தலைமை செயலகத்தில்...
சென்னை சேப்பாக்கத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியபோது அரசு கவுரவம் பார்க்காமல் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர்
சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

கவுரவம் பார்க்கவில்லை
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம்.
பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள்தான் கவுரவம் பார்க்கிறார்கள்.

15 ஆண்டுகால பிரச்சினை
தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது. தொழிலாளர்களின் ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள்.

2.57 சதவீதம் அளவுக்கு உயர்வு
மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் போட முடியாது. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டில் இவர்களது சம்பளம் 2.57 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆட்களை நியமனம் செய்வோம்
நாங்கள் இந்த ஆண்டு 2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!