• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருவமழை லேட்... அனலுக்கு ரெஸ்ட்! பற்றாக்குறை அச்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அப்பாடா... மூன்று மாத காலமாக கொளுத்திய வெயிலுக்கு சற்றே இதமாக தென் இந்தியாவில் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வெயில் 2ஆயிரத்து 300 பேரை காவு கொண்டது. கொளுத்திய வெப்பத்தை சமாளிக்க குடையார் கை கொடுத்தார் ஆனாலும் புழுக்கத்தை தாங்காமல் புழுங்கியவர்கள்தான் அதிகம். ஏனெனில் இந்த ஆண்டு பல மாநிலங்களில் 114 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் கொளுத்தியது.

rain

4 நாள் தாமதமாக இந்த ஆண்டு பருவமழை கேரளாவில் தொடங்கியது. வெயிலை தணிக்க வந்த பருவமழையை வரவேற்காமல் எங்கு பார்த்தாலும் பருவமழை பற்றாக்குறை என்பது பற்றித்தான் ஓரே பேச்சாக உள்ளது. பிரதமர் முதல் மத்திய அமைச்சர்களும் இந்த பருவமழை பற்றாக்குறையை பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். பற்றாக்குறையால் ஏற்படும் சவால்களை சந்திக்க இப்போது தயாராகி வருகிறது மத்திய அரசு.

சவாலும் வாய்ப்பும்

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். ஜூன் மாதத்தின் முதல் தேதியில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக கடந்த 5ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக இருக்கும். இதனால் நாட்டின் சில பகுதிகளில் வறட்சி ஏற்படும் என மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால், இதனை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பருவமழை பற்றாக்குறை

ஏப்ரல் மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு பருவமழையின் சராசரி பொழிவு 93 சதவீதமாக இருக்கும் எனக் கணித்தது. இது சராசரியைவிட குறைவு என்கிற பிரிவில் வருகிறது. அதேசமயம் தற்போது திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 88 சதவீதம் பொழியும் என கணித்துள்ளது. இது பற்றாக்குறை என்கிற பிரிவில் வருகிறது.

தென்மேற்குப் பருவமழை

இந்தியாவை பொறுத்தவரை தென்மேற்கு பருவ காலத்தில் தான் அதிக மழை பெய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் தலைவிதியை தீர்மானிப்பது தென்மேற்கு பருவமழைதான். ஒரு நல்ல பருவ மழைதான் விவசாயியை உற்சாகம் கொள்ள வைக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவமழையை நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், அதைச் சார்ந்து பொருளாதார வளர்ச்சியும் இருக்கிறது. மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக 600 மாவட்டங்களில் மழை குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க திட்டம் வகுத்துள்ளது.

வேளாண்துறையில்

இதன் மூலம் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் விலை உயர்வதைக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு உறுதியாகக் கருதுகிறது. குறுகிய கால விதைகள் அளிக்க மத்திய வேளாண் ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. மேலும் வறட்சியைத் தாங்கி நிற்கும் பயிர் வகைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி

இந்தாண்டு வழக்கத்தை விட மழை குறையும் என்பதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மின் பற்றாக்குறையை சமாளிக்க நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அரசு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய மின்சார, நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பியுஷ் கோயல், இந்தாண்டு பருவமழை குறையும் என்ற செய்தி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நிலக்கரி பற்றாக்குறை

தற்போது நாட்டில் உள்ள 13 சதவிகித அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக தென்மேற்குப் பருவமழையை நம்பி உள்ள இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உள்ள 36 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 7 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பே குறைந்த அளவே உள்ளது.

உற்பத்தி அதிகம்

எனவே நிலைமையை சமாளிக்க இந்திய நிலக்கரி நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிதியாண்டில் (2015-16) முதல் இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி சென்ற ஆண்டை விட 12 சதவிகிதம் அதிகரித்து 83 மில்லியன் டன்களாக உள்ளது சற்று ஆறுதலான விஷயம் என்று கூறியுள்ளார்.

அச்சுறுத்தும் எல் நினோ

எல் நினோவின் தாக்கத்தால் பருவமழை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் 85 சதவீத மழையும், மத்திய மாநிலங்களில் 90 சதவீத மழையும் பெய்யும். தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் 92 சதவீத மழையும், வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீத மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.

நீர்தேக்கங்கள் கண்காணிப்பு

இதனிடையே நீர் தேக்கங்களில் பாசனத்துக்கு தேவைப்படும் நீரை தொடர்ந்து கண்காணிக்க மத்திய நீர் ஆதார அமைச்சகம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் காலத்தில் கூடுதலாக எரிவாயு விநியோகம் மூலம் 14 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய மின் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயத்துக்கு மின் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தி

விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதில் அவகாசம் அளிக்கவும் நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வேளாண் உற்பத்தி குறையும்பட்சத்தில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய தொகுப்பிலிருந்து கோதுமை, அரிசியை விடுவிக்க உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை 100 நாட்களுக்கும் மேலாக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மழை

இதனிடையே இந்த ஆண்டு பருவமழை காலத்தில் விசாகப்பட்டினத்தில் குறைவான அளவே மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆந்திராவில் வெப்பத்திற்கு அதிக அளவில் பலியானார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் தவித்து வந்த மக்களுக்கு பருவமழை சற்றே ஆறுதலைத் தரும் என்று கூறியுள்ளார் வானிலை ஆய்வு மைய அதிகாரி.. கடலோர ஆந்திராவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடலோர ஆந்திராவில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆறுதல் செய்தி

இதனிடையே வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முக்கிய நகரங்களில் மழை பெய்துள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தமட்டில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

English summary
Southern states of Kerala, Andra Pradesh have received substantial rainfall with the arrival of monsoon, thus giving respite to people from sweltering heat. Heat waves have killed more than 2,200 people throughout the country with temperatures rising past 46 Celsius (114 Fahrenheit) in some states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X