For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை அச்சுறுத்தும் மழைக்கால நோய்கள்.... வந்த பின் தப்பிப்பது எப்படி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை வராத அளவிற்கு கொட்டித்தீர்த்து விட்டது மழை. ஏரி, குளங்கள் நிரம்பி வழிய, திறந்துவிடப்படும் உபரி நீரினால் குடியிருப்புகள் மூழ்கி இப்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

மழை நின்று வீடுகளில் வெள்ளம் வடிந்த பின்னரும் சென்னையிலும், புறநகரிலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் தாக்கத் தொடங்கும். அதோடு தண்ணீரில் அடித்து வரப்பட்ட கால்நடைகள் ஆங்காங்கே செத்து மிதக்க அதனாலும் நோய்கள் தாக்கத் தொடங்கி பாதிப்பு அதிகரிக்கும். காய்ச்சல், சளி என மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுப்பது ஒருபுறம் இருக்க, மழைக்கால நோய்கள் என்னென்ன? எப்படி பாதுகாப்பது என்று தொலைக்காட்சிகளில் மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்ச்சியோடு உற்சாமடையும் மக்களே... அது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து அதனை ஃபில்டர் செய்து குடிக்கவேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

மலைக்கால நோய்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்...

எலிக் காய்ச்சல்

எலிக் காய்ச்சல்

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் ‘எலிக் காய்ச்சல்' எனப்படும் ‘லெப்டோபைரோசிஸ்' நோய் வரும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்துகொள்வதும் வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும். இதைவிட முக்கியம், குளத்துநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் பாக்டீரியா/வைரஸ் கிருமிகள் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. இந்த நோயாளிகள் அதிகளவில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காய்ச்சி ஆறவைத்த சுத்தமான குடிநீர் குடிக்கவேண்டும். உப்புக் கரைசல் நீர்/ 'எலெக்ட்ரால்' நீரை அடிக்கடி குடிக்க வேண்டும் அல்லது சலைன் ஏற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீரிழப்பு சரியாகும்.

பாதுகாப்பது எப்படி

பாதுகாப்பது எப்படி

இந்த நோய்களைத் தடுக்க, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரைக் குறைந்தது பத்து நிமிடம் கொதிக்க வைத்து, ஆறவைத்துக் குடிப்பது நல்லது. குடிநீர் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம்.

சீதபேதி

சீதபேதி

தெருக்கள், குளக்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது, மலத்தில் வெளியாகும் இக்கிருமிகளின் முட்டைகள், மழைக் காலத்தில் சாக்கடைநீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். இவை நம் குடலை அடைந்ததும் கிருமியாக வளரும். அப்போது சீதபேதி ஏற்படும். அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் சீதபேதிக்குக் காரணம்.

சுத்தம், சுகாதாரம்

சுத்தம், சுகாதாரம்

காய்ச்சல், அடிவயிற்றுவலி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்துபோவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். சீதபேதியைத் தடுக்க சுயத் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, குடிநீர்த் தூய்மை, உணவுத் தூய்மை ஆகியவை மிக அவசியம். முக்கியமாக, தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல்

‘ஃபுளு' எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற பிரதான நோய். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் தொல்லை கொடுக்கும். இந்த வைரஸ் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க 'பாரசிட்டமால்' மாத்திரை உதவும்.குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், நல்ல காற்றோட்டமான அறையில் படுக்க வைக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
திரவ உணவுகளை அடிக்கடி தர வேண்டும். இக்காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. நான்கு வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் சாதாரணத் தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

நிமோனியா காய்ச்சல்

நிமோனியா காய்ச்சல்

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் எரிச்சல் ஏற்படும். இதனால், தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம். காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி'. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

'அடினோ வைரஸ்' கிருமிகளின் தாக்குதலால் இது வருகிறது. அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. கண் சிவந்து கண்ணீர்வடிதல், எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள். இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி சொட்டு மருந்தைத் தேர்வு செய்வது நல்லது. இந்த நோய் வராமல் தவிர்க்க, கண்நோய் வந்தவர் கண்ணைக் கசக்கக் கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

சுத்தம் ரொம்ப அவசியம்

சுத்தம் ரொம்ப அவசியம்

மழைக்காலத்தில் முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் இரண்டுமுறை வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அதிக சூடும் ஆபத்து. நன்கு தேய்த்துக் குளிக்கும்போது, நம் உடல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் அறிவுரையின் பேரில் தாராளமாகத் தலைக்குக் குளிக்கலாம். தலைக்குக் குளித்ததும் உடனடியாக நன்றாகக் காயவைப்பது அவசியம். காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் இருப்பவர்களைத் தவிர, அனைவரும் கண்டிப்பாகக் குளிக்க வேண்டும். ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
The rainy season is coming, the perfect breeding ground for germs and bacteria which in turn lead to water borne diseases that affects a lot of people, that's exactly the reason why you see very few people in office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X