செஞ்சி அருகே பௌத்த கோயில் குறித்து கூறும் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
செஞ்சி: செஞ்சி அருகே இளமங்கலத்தில் பௌத்த கோவில் எடுப்பித்த செய்தியை கூறும் அரிய பல்லவர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா , வெடால் விஜயன் இணைந்து திண்டிவனம் வட்டம் வல்லம் பகுதியில் உள்ள தொல் அடையாளங்களைக் கள ஆய்வு செய்த பொழுது வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட இளமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவ்வூரில் சுமார் 30 அடி உயரமுடைய தட்டையான பாறையின் மீது சமீபத்தில் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அதனை உச்சி பிள்ளையார் கோவில் என்று அவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். அக்கோவிலின் படிக்கட்டு அருகே 10 அடி உயரமுள்ள சதுரமான பலகை கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரி கல்வெட்டு இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீகோவிசைய என்று தொடங்கும் இக்கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் பதினான்காவது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். அதாவது கி.பி 745 ம் வருடம் சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றளி எடுப்பித்து , அத்தளிக்கு நந்தவனம் செய்து தந்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அருவாரையர் காடடிகன் மகன் கல்லறையோன் என்பவர் செய்ததாகவும் , இத்தருமத்தைக் காப்பவர்களின் பாதத்தை தன் முடிமேல் வைத்துத் தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாகக் கோவிலுக்கு தானம் வழங்கினால் அக்கோவில் உள்ள இறைவன் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவர். ஆனால் இக்கல்வெட்டில் பயின்று வரும் "திருவடிகள்" என்ற வார்த்தையும் அத்திருவடிக்குக் கற்கோவில் எடுப்பித்த செய்தியும் அது எந்த சமயம் என்று நேரடி தகவலைத் தரவில்லை. பாதங்களை வணங்கும் வழக்கம் சமணம் , பௌத்தம் மற்றும் வைணவம் ஆகிய மூன்று சமயங்களிலும் உள்ளது.

இவ்வூரில் 1987 ம் வருடத்தில் கட்டிய பஜனை கோவில் என்ற பெருமாள் கோவிலைத் தவிர வைணவம் சார்ந்த தரவுகள் சுற்று வட்டாரத்தில் இல்லை என்பதால் வைணவமாகக் கருத வாய்ப்பில்லை. அதேபோல் சமணத்தில் பாத வழிபாடுகள் இருந்த பொழுதிலும் இவ்வூரில் உள்ள அனந்தநாதர் கோவில் மிகவும் பிற்காலத்தவையே. அவ்வூருக்கு 1976 ம் வருடம் வருகைபுரிந்த ஹரிராஜ் முனிகள் நினைவாகப் பாதம் வைத்து வழிபடுகின்றனர். எனவே சமணமாகக் கருதும் வாய்ப்பு குறைவே.
இவ்வூரின் ஏரிக்கரையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் மற்றும் லிங்க ஆவுடை சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 9ம் நூற்றாண்டாகக் கருதலாம். இதன் மூலம் இவ்வூரில் ஒரு பிரமாண்ட சிவன் கோவில் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிவதோடு , சைவ சமயத்தில் சக்கரம் மற்றும் திருவடிகளை வணங்கும் வழக்கம் இல்லையாதலால் சைவமாகக் கருதவும் இயலாது.

கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் "பௌத்தம்" சமயம் சார்ந்ததாகத் தான் உள்ளது. இக்கல்வெட்டில் காட்டப்பட்டுள்ள சக்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்தூபியில் உள்ள தர்மசக்கரத்தை ஒத்து உள்ளதோடு , இதே போன்ற சக்கர ஸ்தூபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள தேசூரிலும் , சென்னை அருகே உள்ள திருவிற்கோலத்தில் இருப்பது குறிப்பிடதகுந்தது. பௌத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இவ்வூருக்கு மிக அருகாமையில் பள்ளிகுளம் , இந்திரசன்குப்பம் என்ற பௌத்த சொல்லாடல் உடைய ஊர்ப்பெயர்கள் உள்ளது.
பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக 7 மற்றும் 8 நூற்றாண்டில் காஞ்சியிலும் , நாகையிலும் பௌத்தம் சிறப்புற்று விளங்கிய ஏராளமான சான்றுகள் உள்ளது. குறிப்பாகச் சீன பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரம் பகுதியிலிருந்த பௌத்த விகார்களை பற்றி தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள் வணிக தொடர்பு உடையவர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து சோழ நாட்டுக்குச் செல்லும் ராஜபாட்டை அமைந்த பகுதிகளில் ஆங்காங்கே பௌத்த தடையங்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இவ்வூரும் அந்த ராஜபாட்டையை ஒட்டி அமைந்த ஊராகும்.
இங்கே கிடைத்த தரவுகளை வைத்துப் பார்க்கையில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தானமானது பௌத்த கோவிலுக்கு தந்த தானமாகவே கருத முடியும்.இதன் மூலம் இரண்டாம் நந்திவர்மன் காலம் வரையிலும் பௌத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்துள்ளதை அறியமுடிகிறது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை பௌத்தம் சார்ந்து புத்தர் சிலை , தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , பௌத்த கோவில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிக்கபட்டுள்ள முதல் கல்வெட்டு இதுவாகும்.

அவ்வூரை சேர்ந்த மணிகண்டன் அளித்த தகவலின் பெயரில் , தர்மகர்த்தா சாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபாட்டில் உள்ளது அறியப்பட்டது. மாந்தன் மாந்தியுடன் காணப்படும் இச்சிற்பத்தில் தவ்வையின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது சிறப்பான செய்தியாகும். இச்சிற்ப அமைதியை வைத்து இதன் காலமும் 8ம் நூற்றாண்டாகக் கருதலாம். அதுமட்டுமல்லாமல் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக எட்டு கரங்களுடன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் பல்லவர் காலத்திய கொற்றவை காளி அம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டையும் சிலைகளையும் தொல்லியல் துறை பாதுகாக்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.