For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளனை கால்நூற்றாண்டு காலம் சிறைக்குள் தள்ளிய அந்த ஜூன் 11....

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகாலம் சிறைக் கொட்டடியில் வாடிவரும் 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை வேலூரில் இருந்து தலைமைச் செயலகமான சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வரையில் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கத்தின் சார்பில் மாபெரும் வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இந்த வாகனப் பேரணிக்கு பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், திரைப்படக் கலைஞர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்தில் தடை செய்யப்படாத இயக்கம். இதனால் விடுதலைப் புலிகளுடன் பல்வேறு அரசியல் கட்சியினர், திராவிடர் கழகத்தினர் தொடர்புகள் வைத்திருந்தனர். பலரை தங்களது வீடுகளில் தங்கவும் வைத்திருந்தனர்.

Perarivalan completes 25 years in Prison

இந்த நிலையில் திடீரென ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்படுகிறார்....தொடக்கத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகள்தான் இந்த படுகொலையின் சூத்ரதாரிகள் என செய்திகள் வெளியாகின... இதனால் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் கலவரமடைந்தனர்... போலீசாரும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் தங்கியிருந்த போது அவர்களுடன் நெருக்கமாக இருந்த பலரையும் அடுத்தடுத்து கைது செய்து விசாரித்தது...

இதனால் 24 மணிநேரமும் சிபிஐ-ன் மல்லிகை சிறப்பு இல்லம் இயங்கிக் கொண்டே இருந்தது... தற்போது சிறையில் இருக்கும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம்மாளின் வரிகளில் சொல்வதானால், "அதிகாரம் கொண்டவங்களத் தப்பவைக்க அப்பாவியான என் மகன் போன்றவங்களை குற்றவாளியாக்கி வழக்கை முடிச்சுட்டாங்கனு சம்பந்தப்பட்ட அதிகாரிங்களே ஒத்துக்கறாங்க".

விடுதலைப் புலிகளுடன் மிக நெருக்கமாக இருந்த பலரும் சிபிஐ-ன் மல்லிகைக்குப் போய் சேதாரத்துடனும் சேதாரமில்லாமலும் திரும்பிய கதைகள் ஏராளம்....இப்படி பலரும் விசாரிக்கப்பட்ட நிலையில்தான் 19 வயதான பேரறிவாளன் பெயரும் அங்கே சிலரால் உச்சரிக்கப்படுகிறது... பேரறிவாளனைத் தேடி சிபிஐ அதிகாரிகள் சொந்த ஊரான சோலையார்பேட்டை போனது.... அங்கே அவர் இல்லை...

பின்னர் சிபிஐ அதிகாரிகளுடன் 'பேச்சுவார்த்தை' நடத்தி 1991-ம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி பேரறிவாளன் பெரியார் திடலில் வைத்து 'விசாரணைக்காக' ஒப்படைக்கப்பட்டார்.... அவ்வளவுதான் பேரறிவாளனின் எதிர்காலம் அன்றுடன் முடிந்து போன அத்தியாயமானது...

சிபிஐ-ன் மல்லிகை அலுவலகத்தில் 57 நாட்கள் கஸ்டடியில். வழக்கறிஞர் ஆலோசனைப்படி ஆவணங்களில் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார் பேரறிவாளவன்..

ராஜிவ் கொலை வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் 19 வயதான பேரறிவாளன்... "எலக்ட்ரானிக்ஸ் படிப்பு படித்தவர்; பேட்டரி வாங்கிக் கொடுத்த ரசீது இருக்கிறது; ஆக ராஜிவை கொல்வதற்கான வெடிகுண்டு தயாரித்தது பேரறிவாளன்" எனக் கூறி தடா நீதிமன்றம் மரண தண்டனையும் விதித்துவிட்டது... பின்னர் நீதிமன்றப் படிகள், கருணை மனுக்கள்... தூக்கு தண்டனைக்கான நாள் குறிப்பு என கண்டங்கள் பலவற்றை தாண்டி உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தீர்ப்பால் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறார் பேரறிவாளவன்...

இப்போது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 4-வது குற்றவாளி பேரறிவாளவன்.... அந்த 19 வயது இளைஞன் பேரறிவாளவன் அன்று கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி எழுதிவிட்டேன் என இப்போது பிராயச்சித்தம் தேடுகிறார் சி.பி.ஐ. எஸ்.பி.யாக இருந்த தியாகராஜன்....

இவ்வளவுக்கும் மேல் ராஜிவ் காந்தி கொலை சதியின் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவும் கால் நூற்றாண்டுகாலமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது... அது என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ன செய்தது? எதைக் கண்டுபிடித்தது? யாரிடம் விசாரித்தது? ஏதேனும் தகவல் கிடைத்ததா? என்ற எந்த ஒரு கேள்விக்கும் விடை ஏதும் இல்லை...

ஆனால் 7 தமிழர்கள் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.... இவர்களை மாநில அரசு தமக்கே உரிய அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 2-ந் தேதி அளித்த தீர்ப்பில் தெளிவாக சொல்லுகிறது....

இருந்தபோதும் அந்த விடுதலை இதுவரை கிடைக்கவில்லை. இந் நிலையில் தான் பேரறிவாளவன் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட ஜூன் 11-ந் தேதியான நாளை 7 தமிழரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூரில் இருந்து சென்னை தலைமைச் செயலகமான கோட்டை வரை ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கத்தின் சார்பாக வாகனப் பேரணி நடத்தப்படுகிறது...

7 தமிழரை விடுதலை செய்ய முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலான வாகனப் பேரணி... பெருந்திரளான இயக்கங்கள், கட்சிகள், திரை உலக நட்சத்திரங்கள் கை கோர்த்து ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்..

English summary
Tamil Movements will take out a motorcycle rally to mark Perarivalan completing 25 years in prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X