For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிடப்பில் கிடக்கும் 4,400 கோடி ரூபாய்; சீரழியும் தமிழக பள்ளிகள் - ராமதாஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை சீரமைப்பதற்காக வழங்கப்பட்ட ரூபாய் 4400 கோடி கிடப்பில் கிடப்பதால் சரியான கட்டிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழக கல்வித்துறை சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாட்டில் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளை சீரமைக்கவும் வழங்கப்பட்ட ரூபாய் 4400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ramadoss

மாணவிகளுக்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஒருங்கிணைந்த தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கான ஆண்டு பணித் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த திட்ட ஒப்புதல் வாரியத்தின் 46 ஆவது கூட்டத்தில் தான் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன.
தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்தில் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் 200 புதிய பள்ளிகளையும், 2010-11 ஆம் ஆண்டில் 344 புதிய பள்ளிகளையும், 2011-12 ஆம் ஆண்டில் 552 புதிய பள்ளிகளையும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி 2009 முதல் 2012 வரையிலான 3 ஆண்டுகளில் மொத்தம் 1096 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2009-10 ஆண்டு முதல் இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன.
மேலும் 75 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. அதாவது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையவில்லை. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல் ஏற்கனவே செயல்பட்டு வரும் 2033 பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.
மாணவிகள் தங்கிப் படிப்பதற்காக 44 விடுதிகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன. 5265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மீதமுள்ள 4345 பள்ளிகளில் இதற்கான எந்தப் பணியும் இன்று வரை தொடங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி 1616 அறிவியல் ஆய்வகங்கள் 1504 கணினி அறைகள் 1873 நூலகங்கள் 1990 கலை மற்றும் கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கும் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளை தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.
இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியின் அளவு மட்டும் ரூபாய் 4400 கோடி ஆகும். தில்லியில் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலர் பிருந்தா சரூப் மாணவ, மாணவியரின் கல்வி சார்ந்த பணிகளில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார். மத்திய அரசு செயலாளர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா 2010-11 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட வேண்டிய 344 பள்ளிக்கட்டிடங்களை வரும் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை என்ற போதிலும் அப்பள்ளிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. கட்டிடங்கள் இல்லாத நிலையில் அவை மரத்தடிகளிலும் பாழடைந்த பழைய கட்டிடங்களிலும் தான் செயல்படுகின்றன. தமிழகத்தை உலகின் உயர்கல்வி மையமாக மாற்றுவோம் என்று கூறியவர்களின் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் மரத்தடிகளில் நடப்பது சோகத்திலும் சோகமான விஷயமாகும். ரூ.4400 கோடி என்பது மிகப்பெரிய தொகையாகும். இதைக் கொண்டு அரசு பள்ளிகளை சிறப்பான முறையில் மேம்படுத்தமுடியும். ஆனால் கிடைத்த பணத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிக மோசமான சூழலில் கல்வி பயிலும் நிலைக்கு மாணவர்களைத் தமிழக அரசு தள்ளியுள்ளது. தமிழக அரசின் இந்த அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். இதற்கு தக்க நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss released a statement about the schools development projects amount of 4,400 crores, which is in not use mode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X