For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.. ஏழைகள், வணிகர்கள் பாதிக்காமல் செயல்படுத்த கருணாநிதி கோரிக்கை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் இதனை செயல்படுத்த திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு எடுத்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை, ஏழை எளிய மக்கள், சிறுவணிகர் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு நன்கு சிந்தனை செய்து, ஏழையெளிய நடுத்தர மக்களும், சிறு வணிகர்களும், இதன் காரணமாக பாதிக்கப்படாமல் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போல் நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

Poor and small vendors affected for 500 note abolished: Karunanidhi

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது; கறுப்புப் பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளது என்றும் காரணம் கூறியிருக்கிறார். வரவேற்கத் தக்க அறிவிப்பு இது என்ற போதிலும், இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும் தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான நிலையில், தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம் பெறும் ஏழை எளிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது? நான் கூறிய அந்த ஏழையெளிய உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும், நடுத்தரக் குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது. வங்கிகளிலே கோடிக் கணக்கில், இலட்சக் கணக்கில் பணம் வைத்திருப்போர் - சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது போக, தங்களிடம் எஞ்சி உள்ள ஒரு சில கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால் வரவேற்கலாம். எனினும், பெரிய பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதை விட, சாதாரண, நடுத்தர ஏழையெளிய மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

80 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து, இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் வரவு வைப்போம் - என்று 2014 நாடாளு மன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டதை மறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட முடியாது.

கறுப்புப் பணத்தை ஒழித்திடும் நோக்கில் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனதா ஆட்சிக் காலத்தின் போது 1000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக எந்த அளவுக்கு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Poor and small vendors have affected for 500 and 1000 notes abolished by central government said DMK leader Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X