ராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய கோரிய தமிழக அரசின் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்பதால் மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க முடியும். ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது.
இதனிடையே 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றே ஜனாதிபதி இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!