For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுக்கோட்டையில் ஒரு ‘பருப்பு பஞ்சாயத்து’!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

பருப்பு வகைகளின் விலை நாடு முழுவதிலும், ஏன் உலகம் முழுவதிலுமே கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் புதுமையானதோர் வேளாண் முறை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது. 'பருப்பு பஞ்சாயத்து' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய நடைமுறை புதுக்கோட்டையின் இடையப்பட்டி, எண்ணைய், கதலப்பட்டி, தளிஞ்சி மற்றும் ஈஸ்வரன்கோயில் கிராமங்களில் தற்போது இருந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முன் முயற்சிதான் இந்த 'பருப்பு பஞ்சாயத்து'.

Pulse Panchayat at Puthukkottai

'பருப்பு பஞ்சாயத்து' என்பது ஒரு கருத்துறு (concept). இது ஒரு இன்ஸ்டிடியூஷன் அல்ல. புதிய வகை விதைகளை (வெம்பன் 4 & 6), புதிய இயந்திரங்களை பயன்படுத்துதல். தொழில்நுட்ப ரீதியில் அமைந்த இந்த புதிய முறைமையின் மூலம் கூடுதல் பருப்பு விளைச்சலை உறுதிப்படுத்துதல். மேலும் உற்பத்தியாகும் பருப்பு வகைகளை சந்தைப்படுத்த பிரத்தியேகமான ஒரு வேளாண் கம்பெனியை சம்மந்தப்பட்ட விவசாயிகளே உருவாக்குதல், இவற்றை உணர்த்துவதுதான் 'பருப்பு பஞ்சாயத்து' என்கிறார் இழுப்பூர் வேளாண் உற்பத்தி கம்பெணி லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான தட்சிணாமூர்த்தி கிருஷ்ணன். இந்த கம்பெணிதான் 'பருப்பு பஞ்சாயத்தில்' உற்பத்தியாகும் பருப்பு வகைகளை சந்தைக்கு கொண்டு சென்று விற்று விவசாயிகளுக்கு பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. 180 விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். 2013 ம் ஆண்டு விவசாயிகளுக்கான பிரத்தியேகமான உற்பத்தியாளர் கம்பெணி சட்டப்படி இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டு கொண்டிருக்கின்றன. உற்பத்தியாகும் பருப்பு வகைகளை சந்தைக்கு எடுத்துச் செல்லுவதற்கு முன்பே அவற்றை மில்லில் அரைக்க வேண்டியிருக்கும். இதற்காக பிரத்தியேகமான ஒரு மில்லும் இந்த விவசாயிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. 2013 ல் இடையப்பட்டி பஞ்சாயத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் 'பருப்பு பஞ்சாயத்துக்கான' அடித்தளம் போடப் பட்டது.

Pulse Panchayat at Puthukkottai

'இது இரண்டு தரப்புக்கும் அதாவது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனளிக்க கூடிய முயற்சியாகும். மூன்று வகையான பருப்பு வகைகளை உற்பத்தி செய்கிறோம் - உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பச்சைப் பயிறு - தாங்கள் உற்பத்தி செய்யும் பருப்பு வகைகளை விவசாயிகள் தாங்களே பங்குதாரர்களாக இருக்கும் கம்பெனியில் மற்றவர்களிடம் விற்பதை விட சற்றே கூடுதலான விலைக்கு விற்கின்றனர். இதில் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம். சந்தையில் இது பொது மக்களுக்கு மார்கெட் விலையை விட சற்றே குறைவாக, அதாவது ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் குறைவாக விற்கப் படுகிறது. இதனால் பொது மக்களுக்கும் இதில் லாபம். இடைத் தரகர்கள் இல்லாததும், வயலிலிருந்து வரும் பருப்பை மில்லில் அரைப்பதற்கு தொலைதூரத்தில் வேறிடங்களுக்கு கொண்டு செல்லாததும், போக்குவரத்து செலவினங்கள் குறைந்து இருப்பதும், இந்த நிலைமைக்கு காரணங்கள். ஆகவே இது இரண்டு தரப்புக்கும் லாபகரமான விஷயமாகும்,'' என்கிறார் தட்சிணாமூர்த்தி.

2020 ம் ஆண்டுக்கான இலக்காக சம்மந்தப்பட்ட விவசாயிகளால் நிர்ணயிக்கப் பட்டிருப்பது:

1.குறைந்தது 1,000 ஏக்கர் பரப்பளவில் இந்த முறையில் பருப்பு பயிரடலை விரிவுபடுத்துவது.

2. பருப்பு உற்பத்தியை குறைந்தது 200 டன்களாக உயர்த்துவது.

3. 'பருப்பு பஞ்சாயத்தில்' தற்போது துணைத் தொழில்களாக இருக்கும் காய்கறிகள் பயிரிடுதல், கோழி வளர்ப்பு, பால்கொடுக்கும் மாடுகளை பராமரித்தல் போன்றவற்றை மேலும் விரிவுபடுத்துதல்.

"2013 ம் ஆண்டு வரையில் சிரமத்தில் இருந்தேன். தற்போது 'பருப்பு பஞ்சாயத்து' மூலம் விவசாயத்தை மேற்கொள்ளுவதால் அதிக லாபம் பார்க்கிறேன். புதியவகை, செயற்கை உரங்கள் கலக்காத, வீரிய விதைகளைப் பயன்படுத்தியதால் கூடுதலாக 20,000 ரூபாய் இந்த முறையில் லாபம் பார்த்திருக்கிறேன். என்னுடைய ஒரு ஏக்கரில் வழக்கமாக 130 கிலோ வரையில் பருப்பு வகைகள் உற்பத்தி தரும். இந்த முறை அது 230 கிலோ உற்பத்தியை தந்தது. திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் கூலி வேலைக்கு சென்றிருந்த என் மகன், மனம் மாறி தற்போது இடையப்பட்டியில் என்னுடனேயே வந்து தங்கி விட்டான்,'' என்று ஒன் இந்தியாவிடம் கூறினார் இடையப்பட்டி விவசாயி ஆர்.ஐ. பழனிசாமி.

Pulse Panchayat at Puthukkottai

புதுக்கோட்டையின் இந்த ஐந்து கிராமங்களை தாண்டி வேறெந்த இடத்திலும் தடம் பதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்கிறார் தட்சிணாமூர்த்தி. 'பருப்பு பஞ்சாயத்தை புதுக்கோட்டையின் இந்த ஐந்து கிராமங்களில் நன்றாக காலூன்ற செய்து, ஒரு வலுவான முன்மாதிரியாக மாற்றுவதுதான் எங்களது நோக்கம். இந்த இடத்தை தாண்டி வேறு புதிய பகுதிகளில் போய் 'பருப்பு பஞ்சாயத்து' முறைமையை, கருத்துருவை பரப்ப நாங்கள் முயற்சிக்க மாட்டோம். இந்த இடத்தில் இருக்கும் வலுவான முன் மாதிரியை பார்த்து மற்றவர்கள் அவரவரது பகுதிகளில், தமிழகம் முழுவதிலும், இந்தியா முழுவதிலும், 'பருப்பு பஞ்சாய்த்தை' நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கனவே நாடு முழுவதிலும் இருந்து 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுக்கோட்டைக்கு வந்த இந்த புதிய முயற்சியை பற்றி தெரிந்து கொண்டு போயிருப்பது முக்கியமான நிகழ்வு,'' என்று மேலும் கூறுகிறார் தட்சிணாமூர்த்தி.

'பருப்பு பஞ்சாயத்து' என்பது இந்தியாவுக்கும், வட ஆப்பிரிக்கு நாடான மொரோக்கோவுக்கும் இடையிலான உணவு பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்தும் ஒப் பந்தத்தின் ஒரு அங்கமாகும். ஆண்டு தோறும் பருப்பு இறக்குமதிக்காக சில ஆயிரங் கோடி ரூபாய்களை இந்தியா செலவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு மியான்மாரிலிருந்து பருப்பு இறக்குமதியாகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து பருப்பு இறக்குமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. மொசாம்பிக் நாட்டுடன் பருப்பு இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இதற்கு கை மாறாக மொசாம்பிக் நாட்டுக்கு இந்தியா ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான உயர்தர மருந்துகளை கொடுக்க இருக்கிறது.

கடந்த நிதியாண்டில் 58 லட்சம் டன் பருப்பு வகைகளை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்தளவுக்கான இறக்குமதியை தக்க வைப்பது கடினமானதாகவே பார்க்கப் படுகின்றது. இதற்கான பல ஆயிரங்கோடி ரூபாய் அந்நிய செலாவணி செலவழிப்பு இந்தியாவின் தற்போதய பொருளாதார சூழலில் கடினமானதாக கணிக்கப் படுகின்றது. இந்தப் பின்னணியில் தான் 'பருப்பு பஞ்சாயத்து' போன்ற விஷயங்கள் அறிமுகாமாகியிருக்கின்றன. வரும் காலங்களில் இந்த நடைமுறை மேலும் விரிந்து பெருகுமா அல்லது தேய்ந்து சுருங்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

English summary
5 Villages at Puthukkottai district adopting a pulse cultivating system in the name of Pulse Panchayat to increase the production of pulses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X