For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அணைகளை இயக்கும் அதிகாரம் தேவை- ராமதாஸ் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அணைகளை இயக்கும் அதிகாரம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் இந்த வாரியம் இன்னொரு பொம்மை அமைப்பாக இருந்துவிடக் கூடாது; காவிரி சிக்கலை நிரந்தமாக தீர்க்கும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகங்கள் மட்டுமே பரிசாக கிடைத்து வருவதால், அனைத்து நடவடிக்கைகளையுமே ஐயத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று அமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து தான் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதும், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததும் இயல்பாக நடந்தவை அல்ல.

திட்டமிட்டு...

திட்டமிட்டு...

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு சாதகமான விஷயங்களும், கர்நாடகத்திற்கு பாதகமான விஷயங்களும் நடப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டவை தான் அவை. அதேபோல் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி ஆணையம் அமைப்பதிலும் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது. இதற்கான வரைவுத் திட்டத்தில், ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தாவிட்டால், அங்குள்ள அணைகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதியில், அத்தகைய எந்த அதிகாரமும் இல்லாத அரசியல் அமைப்பாகத் தான் காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

அதிகாரங்களுடன்...

அதிகாரங்களுடன்...

அதேபோன்று காவிரி மேலாண்மை வாரியமும் அதிகாரமில்லாமல் அமைந்துவிடக்கூடாது என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பும், விருப்பமும் ஆகும். அவற்றை நிறைவேற்றும் வகையில் அனைத்து அதிகாரங்களுடன் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

பக்ரா-பியாஸ் போல...

பக்ரா-பியாஸ் போல...

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆவணத்தின் ஐந்தாவது தொகுப்பில், எட்டாவது அத்தியாயத்தில் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என விரிவாக விளக்கப்பட்டுள்ளது... ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்'' என இந்த அத்தியாயத்தின் 14-ஆவது பத்தியில் கூறப்பட்டிருக்கிறது.

அதிகாரங்கள்...

அதிகாரங்கள்...

காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்'' என்று 16-ஆவது பத்தியில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கர்நாடகத்தில் உள்ள அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் அதிகாரத்துடனும், அங்குள்ள அணைகளின் நீர் வெளியேற்றத்தை முறைப்படுத்தும் அதிகாரத்துடனும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் மாதிரியில் காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் குறைந்தபட்சத் தேவையாகும். அதேநேரத்தில். நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் மிக முக்கியமானவையாகும்.

இதுதான் காரணம்...

இதுதான் காரணம்...

கடந்த கால பதிவுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்'' என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை 15 ஆண்டுகளாக கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்ற உண்மையை நடுவர் மன்ற நீதிபதிகள் நன்றாக உணர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அளித்த இந்த பரிந்துரையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

7 மாநிலங்கள்...

7 மாநிலங்கள்...

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது. இந்த வாரியம் தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது. 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்த சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது.

அணைகளை இயக்கும் அதிகாரம்

அணைகளை இயக்கும் அதிகாரம்

காவிரி பிரச்சினைக்கும் இதேபோன்ற நிரந்தரத் தீர்வு தான் தேவை. எனவே, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் மத்திய அரசு வழங்க வேண்டும். அது தான் காவிரி நடுவர் மன்றம் விரும்பியவாறு, அதன் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் அளவுக்கு அனைத்து அதிகாரங்களும் கொண்ட மேலாண்மை வாரியமாக இருக்கும்.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has urged that Cauvery management board will get more powers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X