பதறியடித்து ஓடும் சசி உறவுகள்... காலியாகும் போயஸ் கார்டன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் லேண்ட் மார்க்காக இருந்த ஜெ. குடி இருந்த போயஸ் கார்டன் வீடு எங்களுக்கு வேண்டவே வேண்டாம் எனக் கூறி, சசிகலா உறவினர்கள், பதறியடித்து ஓடுகிறார்கள்.

இந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்த பின்தான், ஜெயலலிதாவின் வாழ்க்கை உச்சம்பெற்றது. அதேபோல, சாதாரண நிலையில் இருந்த சசிகலா கூட ஜெயலலிதாவுடன் சேர்ந்து போயஸ் தோட்டத்திலேயே தங்க ஆரம்பித்த பிறகுதான், அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல சசி குடும்பத்தினர் பலருடைய வாழ்க்கையிலும் வசந்தம் வீச ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவும், சசிகலாவும் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியேதான், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். கட்சியும் இருவரது கரங்களிலும் கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அதற்கு காரணம், போயஸ் தோட்டம் என்ற அதிர்ஷ்டம் தான் என்றும், சசிகலா அடிக்கடி சொல்லி வந்தார்.

Sasikala relatives leave Poes Grden house

அதனால்தான் ஜெயலலிதா காலமான பிறகும் ஜெயலலிதா உறவு என சொல்லிக் கொண்டு போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை போயஸ் தோட்டம் பக்கம் வராமலேயே செய்து ஆக்கிரமித்துக் கொண்டார் சசிகலா. ஆனால் ஜெயலலிதாவை சிலர் சேர்ந்து கொன்று விட்டனர் என செய்தி பரவியதும், போயஸ் தோட்டத்து பக்கம் யார் சென்றாலும் அவர்களுக்கு கெட்ட விஷயங்களே நிறைய நடக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக சசிகலா குடும்பத்தில் நிறைய துர் சம்பவங்கள் வரிசையாக நடக்கத் துவங்கி விட்டன.

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கிய சசிகலா, தன்னை கட்சியின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டு முதல்வராகத் துடித்தார். இதையெல்லாம் எதிர்க்கத் துவங்கிய பன்னீர்செல்வம், தனி அணியாக இயங்கத் துவங்கினார். சசிகலாவை முதல்வராக விடாமல், கவர்னர் மூலம் தடுத்தார். அடுத்ததாக, போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்காண்டு தண்டனையுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சுதாகரனும் சேர்த்து அடைக்கப்பட்டார்.

டிடிவி தினகரன், ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தேர்தலே ரத்து செய்யப்பட்டது. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர். அடுத்தப்படியாக, தற்போது தினகரன், சசிகலாவை எதிர்த்து, அதிமுக உள்ளேயே மூத்த நிர்வாகிகள் பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் மீதான பெரா வழக்கு விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவர் எந்நேரமும் சிறைசெல்லவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இப்படி அனைத்துமே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்று வருவதால், போயஸ் தோட்டத்தின் சென்டிமெண்டே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா இருக்கும் வரை, அந்த வீடு ராசியானதாக இருந்தநிலையில், தற்போது அவரது மறைவிற்குப் பின், அது துரதிர்ஷ்டமாக மாறிவிட்டதாக, சசிகலா தரப்பினர் கருதுகின்றனர்.

இதனால் அடிக்கடி போயஸ் தோட்டம் வந்துசென்ற சசிகலா உறவினர்கள் தற்போது அங்கு வருவதையே நிறுத்தி விட்டார்களாம். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் மட்டுமே தற்போது தினமும் வந்துசெல்கிறார். மேலும் பணியாட்களும் மிகச் சிலரே உள்ளனர். சசிகலா உறவினர்கள் யாரேனும் போயஸ் வீட்டை பார்த்துக் கொள்ள அனுப்பி வைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களிலேயே, ஆளை விட்டால் போதும் என பதறியடித்து ஓடுகிறார்களாம். போயஸ் தோட்டம், தற்போது பேய் வீடு போல களையிழந்து காணப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-ஆர்ஜி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All of Sasikala's relatives are almost left Jayalalithaa's Poes Garden house due to fear.
Please Wait while comments are loading...