For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தமிழ் எழுத்துலகின் கம்பீர அடையாளம் ஜெயகாந்தன்"; "சிம்மக் குரலோன் நாகூர் ஹனீபா" - சீமான் புகழஞ்சலி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் இஸ்லாமிய மற்றும் தி.மு.க. பாடகரான நாகூர் ஹனீபா ஆகியோரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஞானபீட விருது பெற்றவரான ஜெயகாந்தன் தமிழ் எழுத்துலகின் கம்பீர அடையாளம். எதற்கும் தலைவணங்கா தீரத்தையும் நேர்மையையும் நெஞ்சத்துணிவையும் ஆரம்ப காலம் தொட்டே தன் எழுத்துகளில் காட்டி, தமிழ் இலக்கிய உலகை அடுத்தகட்டத்துக்கு உயர்த்திய பெருமகன்.

Seeman condoles death of Jayakanthan

'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'கோகிலா என்ன செய்துவிட்டாள்', 'ஒவ்வொரு கூரைக்கும் கீழே', 'இல்லாதவர்கள்', 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'உன்னைப்போல் ஒருவன்' என தமிழுலகம் காலத்துக்கும் மறக்க முடியாத படைப்புகளை யதார்த்த நடையில் கொடுத்தவர் ஜெயகாந்தன். உரைநடைத் தமிழில் இருந்து பேச்சுவழக்குக்கு மாறிய தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் பெரிய அளவில் தடம் போட்டவை ஜெயகாந்தனின் படைப்புகளே.

பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளும் சடங்குகளும் தீவிரமாக இருந்த காலகட்டத்திலேயே அவற்றை உடைக்கும் விதமாக புரட்சிகரமான சிந்தனையை எழுத்துலகில் புகுத்தியவர் ஜெயகாந்தன். பெண்ணியம், சாதிய எதிர்ப்பு, தொழிலாளர் நலன் என அவர் சிந்தனை முழுக்க சமூக நோக்கங்களே விரவிக்கிடந்தன.

தனி மனிதச் சுதந்திரத்துக்கான வலியுறுத்தலும், கல்வி மற்றும் அரசியல் முறைகள் மீதான கோபமும், சமூகக் கேடுகள் மீதான ஆவேசமும் அவருடைய படைப்புகளில் எப்போதுமே தகித்துக் கிடந்தன. ஒருகட்டத்தில் 'இனி எழுத மாட்டேன்' என அவர் அறிவித்தாலும், பேச்சு, பேட்டி என தன் மனதில் பட்ட சமூக ஆதங்கங்களை வெளிக்கொட்ட கடைசிக்காலம் வரை அவர் தயங்கவேயில்லை.

ஐந்தாவது வரை மட்டுமே படித்த ஜெயகாந்தன் மண்ணோடும் மக்களோடும் பழகி அறிவதே சரியான கல்வி என்பதை உலகுக்கு உணர்த்தியவர். விவசாயியாக, செருப்பு விற்கும் தொழிலாளியாக, அலுவலக உதவியாளராக இருந்து அத்தனைத்தட்டு மக்களின் வலியையும் அறிந்தவர்.

இன்றைய பரபரப்பு உலகம் தவறவிட்ட 'முகவாசிப்பு' கலையை வாழ்நாள் முழுக்கப் பின்பற்றியவர். ஜெயகாந்தனின் எழுத்துகளில் எவருக்கும் கைவராத உண்மையும் யதார்த்தமும் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் ஒவ்வொரு மனிதர்கள் மீதும் அவர் பதித்த அழுத்தமான பார்வையும் அக்கறையும்தான்.

பொதுவுடமைக் கோட்பாடுகளிலும் சமூகச் சீர்திருத்தங்களிலும் ஆகச்சிறந்த படைப்பாளராக விளங்கிய ஜெயகாந்தனின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

தமிழ் எழுத்துலகின் கம்பீர அடையாளமாக இருந்த ஜெயகாந்தனை காலம் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், காலத்துக்கும் மறையாத அவருடைய எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகை எந்நாளும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.

'சிம்மக் குரலோன் நாகூர் ஹனீபா'

நாகூர் ஹனீபா மறைவு குறித்து சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் நாகூர் ஹனீபா. தந்தை பெரியாரின் பற்றாளராக அறிஞர் அண்ணாவின் வார்ப்பாக திராவிட இயக்கத்தில் காலூன்றிய ஹனீபா, தன்னுடைய தனித்த குரலால் தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

'இறைவனிடம் கையேந்துங்கள்... அவர் இல்லையென்று சொல்லுவதில்லை...', 'அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா' உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை உரக்கக் குரலில் பாடி ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் தனது கருத்தைக் கொண்டு சென்றவர் ஹனீபா.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமெடுத்த காலகட்டத்தில் தனது குரலையே ஆயுதமாகக் கொண்டு போராடியவர்.

"செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்கமாட்டோம்
ஓடிப்போ வடக்கு!"

என பாடிய உணர்ச்சிமிகு பாடலைத் தமிழுலகம் என்றைக்கும் மறக்காது. சிம்மக் குரலால் சீரிய கருத்துகளால் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த நாகூர் ஹனீபா மறைவு தமிழ் உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. நாகூர் ஹனீபா மறைந்தாலும் காற்று முழுக்கக் கலந்திருக்கும் அவருடைய கம்பீரக் குரல் என்றைக்கும் மறையாது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
The Naam Tamizhar Party leader Seeman has delivered his condolence to Legendary Tamil writer D Jayakanthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X