For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி சோனாலி உடல் தகனம்.. மக்கள் கண்ணீர் அஞ்சலி

Google Oneindia Tamil News

மதுரை: கரூரில் கல்லூரி வகுப்பறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி சோனாலியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு மதுரை மாவட்டம் மேலமடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சோனாலியின் மரணத்தால் அவரது தாயாரின் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கொலையான மாணவி சோனாலியின் தந்தை கண்ணன், தாய் தனலட்சுமி. இவர்களுக்கு சொந்த ஊர் மதுரை மானகிரி. கண்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மதுரை அருள்மலர் பள்ளியில் பிளஸ் 2 முடித்த சோனாலி, கரூர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

Sonali's body Cremated in Native village

குடும்ப வறுமையிலும் பெற்றோர் தன் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளனர். இதுவரை நடந்த தேர்வுகளில் சோனாலி 85 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணன் 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். அதன்பின் மகளை மானாமதுரையில் உள்ள தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு, மகளை படிக்க வைப்பதற்காகவே தனலெட்சுமி சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

தாயார் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்ததால் உதயகுமார் கொடுத்த காதல் தொந்தரவை வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்திலே சொல்லாமல் தவிர்த்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உதயகுமாரின் ஒருதலைக் காதல் நெருக்கடி அதிகமானதால் சக மாணவிகளிடம் சொல்லி புலம்பியுள்ளார். அவர்கள் கொடுத்த தைரியத்தில் கல்லூரி நிர்வாகத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளார்.

சோனாலி கொடூர கொலை

கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் தான் உதயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் கல்லூரிக்குள் அத்துமீறி வகுப்பறைக்குள் நுழைந்து மற்ற மாணவர்கள், பேராசிரியர் முன்னிலையில் கொலை செய்யும் அளவுக்கு விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. சோனாலி இறந்தது பற்றி தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் மதுரை மருத்துவமனையில் திரண்டனர். கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்தனர். கல்லூரி நிர்வாகம் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இரண்டாவது நாளான நேற்று காலை மாணவியின் தாயார் தனலட்சுமி மதுரை தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோனாலி இறந்த காரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

கரூர் போலீஸ் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் செழியன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை 9 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேசினர். கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார் முன்னிலையில் கல்லூரி நிர்வாகத்துடன் பேசப்படும் என்றும் பிரேதப் பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

பிரேத பரிசோதனை

மாணவி யின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் காலை 11.30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சோனாலியின் தாயார் தனலட்சுமி மகள் தன்னை விட்டு சென்றதை நினைத்து அழுது புரண்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர். மேலும் கல்லூரியில் இருந்தும் சோனாலியின் உடலை பார்க்க உடன் படித்த மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் சோகத்துடன் பிரேத பரிசோதனை அறை முன்பு அமர்ந்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்தாலும் உடலை வாங்கமாட்டோம் என்று கூறினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வருவாய் கோட்டாசியர் செந்தில்குமாரி முன்னிலையில் பொறியியல் கல்லூரி நிறுவனர், அவரது மகன், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் சோனாலியின் உறவினர்கள் மற்றும் அவரது சித்தப்பா ராஜேஸ்கண்ணா உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் சோனாலியின் உடலை வாங்குவதாக ஒப்புதல் அளித்தனர்.

உடல் தகனம்

அதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் சோனாலி உடல் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் மேலமடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதுகுறித்து சோனாலியின் சித்தப்பா ராஜேஷ்கண்ணா கூறும் போது, கல்லூரி நிர்வாகம் இறந்த சோனாலியின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தது. அதை தொடர்ந்து நாங்கள் உடலை பெற்று கொள்வதாக தெரிவித்தோம் என்றார்.

கிராமத்தினர் சோகம்

சோனாலி கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அவரது தாயார் தனலட்சுமியின் ஊரான மானாமதுரை அருகே உள்ள ஏனாதிக்கோட்டை கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். சோனாலி ஒழுக்கமான பெண். பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கு பாடம் எல்லாம் சொல்லிக் கொடுப்பாள். நன்றாக படித்து பெரிய ஆளாக வருவாள் என்ற நம்பிக்கையோடு கரூரில் கல்லூரியில் சேர்த்துவிட்டனர். அவள் கொலை செய்யப்பட்டது மிகவும் வேதனையாக உள்ளது என்று கிராம மக்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

குடும்ப வறுமையிலும் நன்றாக படித்த மாணவியின் உயிர் ஒருதலைக்காதலால் அநியாயமாக பறிக்கப்பட்டு விட்டது என்பதுதான் சோகம்.

English summary
Sonali's body Cremated at her Native Village. a third-year civil engineering student of the Karur Engineering College was brutally murdered on Tuesday inside a classroom by her senior in college whose advances she reportedly spurned. Her funeral function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X