For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத் தமிழருக்கு அதிகாரம் வழங்கும் 13வது அரசியல் சாசன திருத்தம்... கருணாநிதி வரவேற்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: இந்தியா - இலங்கை இடையே 1987ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவுற்று, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசியல் சட்டத்தில், 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் அங்கே வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்கப்படும் என்பதற்கு அந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.

Srilanka's 13th amendment: Karunanidhi welcomes Ranil's announcement

மேலும், சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாக அங்கீகரிப்பதற்கும், மாகாண வாரியாக உயர் நீதிமன்றங்களை அமைப்பதற்கும் அந்தச் சட்டத் திருத்தம் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதற்குப் பிறகு பொறுப்புக்கு வந்த இலங்கை அரசுகள் அந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த இலங்கை உச்ச நீதி மன்றம், 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதனால், மாகாணங்களுக்கு அங்கே இதுவரை அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை. எனவே இந்த 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்திய அரசு இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்தப் பிரச்சினையில்தான் தற்போது இலங்கையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சிறிசேன அவர்களின் அரசில் பிரதமர் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே அவர்கள் நேற்றைய தினம் முதல் முறையாக கூடிய நாடாளுமன்றத்திலே 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

அவர் பேசும்போது, "மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவோம். ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படையிலும் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை எட்டுவதற்காகவும் இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போகிறோம்" என்றெல்லாம் கூறியிருப்பது, இலங்கைத் தமிழர்கள்பால் அக்கறை கொண்ட உலகத் தமிழர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிறீசேனாவின் அரசு இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டு மென்றும், இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையானவற்றை பேச்சுவார்த்தை மூலம் விரைவிலே தீர்வு காண முன் வர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
The Sri Lankan government will implement the 13th Amendment to its Constitution within a unitary state, Prime Minister Ranil Wickramasinghe has said. DMK chief Karunanidhi welcomes this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X