ராமநாதபுரத்தில் காவல்துறை அத்துமீறல்.- அப்பாவி முஸ்லீம்கள் மீது தடியடி: எஸ்.டி.பி.ஐ கண்டனம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்கள் மீது தடியடி நடத்தி, அவர்களைக் கைது செய்த போலீஸாருக்கு எஸ்.டிபி.ஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, முஸ்லீம்கள் அதிகம் வாழுகின்ற பகுதியான சின்னக்கடை பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த சில சமூக விரோதிகள், உறங்கி கொண்டிருந்த முஸ்லீம்களின் வீடுகளை கற்களாலும் கம்பிகளாலும் உடைத்துள்ளனர். அவசர சிகிச்சைக்கு பயன்படுத்துகின்ற ஆம்புலன்ஸ் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக, அன்று இரவு படம் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்த 3 முஸ்லீம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற காவல் துறையினர் நடந்த சம்பவத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இம்மூவர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
செய்தியறிந்து நியாயம் கேட்க நேற்று (03.02.2014) கேணிக்கரை காவல் நிலையம் சென்ற அவர்களது உறவினர்கள் மீது சார்பு ஆய்வாளர் ஜெயபால் தலைமையிலான காவல்துறையினர் தடியடி நடத்தி மேலும் 7 நபர்களை கைது செய்துள்ளனர். பெண்கள் மீதும் தடியடி நடத்தபட்டுள்ளது.
சட்டத்தை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்பதை மறந்து சட்டத்திற்கு புறம்பாக, உண்மை குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து ஒரு தலைப்பட்சமாக ராமநாதபுரம் காவல்துறை செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல.எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
எனவே தமிழக முதல்வர் இவ்விசயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.மேலும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட கேணிக்கரை சார்பு ஆய்வாளர் ஜெயபால் மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.