For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் தனியார் பள்ளி... நிர்வாகத்தை அரசு ஏற்குமா? - ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது போல கூடுதல் கல்விக்கட்டணம், மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் சென்னை பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளியில் கல்விக் கட்டணத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் பள்ளி நிர்வாகியின் ஊழலைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

Take over Bala Vidya Mandir School : Ramadoss urges TN Govt

பால வித்யா மந்திர் பள்ளியில் 1400-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாரம்பரியமான இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லாப நோக்கமின்றி நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக்காலமாக இப்பள்ளி நிர்வாகம் கல்வியை கடைச் சரக்காக்கி விற்பனை செய்து வருகிறது.

இந்தப் பள்ளியில் ஆண்டுக்கு இரு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தவாறு ஆண்டுக்கு ரூ. 32,000 முதல் ரூ.39,000 வரை கட்டணம் செலுத்துபவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.

அதேநேரத்தில் பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த ரூ.54,000 முதல் ரூ.69,000 வரை கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு கேண்டீன் சேவை, மருத்துவ ஆய்வு உள்ளிட்ட 60 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக மாணவர்களும், பெற்றோர்களும் போராடுகின்றனர்.

மற்றொரு புறம், பெற்றோர்களுக்கு ஆதரவாகவும், பள்ளி நிர்வாகத்தின் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும் பள்ளியில் முதன்மை நிர்வாக அதிகாரியும், முதல்வரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து முதன்மை நிர்வாக அதிகாரி நாதனை பணி நீக்கம் செய்ததுடன், முதல்வர் சீனிவாசராகவனை பணியிடமாற்றம் செய்து பள்ளி நிர்வாகம் ஆணையிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை கண்டித்து பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.

கட்டாயம் ஏன்?

இந்த பள்ளியில் 4 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவரும் ரோபாட்டிக்ஸ் பயிற்சியில் சேரும்படி கட்டாயப் படுத்தப்படுவதாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 8,000 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் வசூல்

அதுமட்டுமின்றி, மெரிட்டஸ் என்ற பெயரில் உயர்கல்விக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ.70,000 முதல் ரூ.90,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கொள்ளைக்கும்பல்

ஒருவேளை பயிற்சியிலிருந்து இடையில் விலகுவதற்கு மாணவர் விரும்பினால் அவர் 3 ஆண்டுகளுக்கான பணத்தை மொத்தமாக கட்டினால் தான் விலக முடியும்.

நிர்வாக அதிகாரி நீக்கம் ஏன்?

இந்த பயிற்சிக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை; பள்ளியின் நிர்வாகி ரமணபிரசாத் குடும்பம் தான் இப்பயிற்சி வகுப்புகளை நடத்தி அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயை எடுத்துக் கொள்கிறது என்ற உண்மையை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதால் தான் முதன்மை நிர்வாக அதிகாரி நாதன் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பாகுபாடு காட்டுவதா?

ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் சீருடை உள்ளிட்ட சமச்சீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகத்தின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

ஒரே குடும்ப நிர்வாகிகள்

அதுமட்டுமின்றி, பள்ளியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கட்டாய வகுப்பு நடத்தி, அதன் மூலம் பள்ளியின் வருமானத்தை விட அதிக வருமானத்தை ஒரு தனிநபர் ஈட்டுவது பெரிய மோசடியாகும். அதுமட்டுமின்றி, பள்ளியை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இருப்பது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் விதிகளுக்கு எதிரானதாகும்.

அரசே ஏற்கவேண்டும்

மாணவர்களிடமிருந்து இருவகையான கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயக் குழு வரும் 11-ஆம் தேதி விசாரணை நடத்தவிருக்கும் போதிலும், அந்த குழுவுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது.

எனவே, மாணவர்களிடையே பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கவும், அங்கு பயிலும் அனைத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யவும் வசதியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது போல பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகத்தையும் அரசே ஏற்க வேண்டும்.

தனி அதிகாரி நியமனம்

இப்போதைய நிர்வாகத்தின் பணி நீக்கம், பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், பள்ளியை நிர்வகிக்க நேர்மையான ஒருவரை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK leader and former Dr Ramadoss today urged the Tamil Nadu government to take over the Bala Vidya Mandir (BVM) School (BVM) in the city, which was caught in an eye of a storm for charging differential fee structure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X