For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவைப் பார்க்க படையெடுக்கிறார்களே தவிர, நீட் தேர்வு பற்றி கவலைப்படவில்லை - ஸ்டாலின் விளாசல்

அமைச்சர்களுக்கு குற்றவாளி சசிகலாவை பார்க்கத்தான் நேரம் உள்ளது என்றும் கிராமப்புற மாணவர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர் நலன் கருதி தமிழக அரசின் நடவடிக்கை உடனடியாக தேவை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர்களுக்கு குற்றவாளி சசிகலாவை பார்க்கத்தான் நேரம் உள்ளது என்றும் கிராமப்புற மாணவர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு நடக்கும் மே 7-க்கு முன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 1.3.2017 அன்று முடிந்து விட்டது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு வருகின்ற மே மாதம் 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வின் அடிப்படையில்தான் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களிலும், தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று, இந்த தேர்வை நடத்தும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

மாணவர்கள் அச்சம்

மாணவர்கள் அச்சம்

அதுமட்டுமல்ல, இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாத மாணவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்கக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது. தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறுவதற்கு மூன்று முறை மட்டுமே ஒரு மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அடுக்கடுக்கான நிபந்தனைகளால் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்புறத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பே இனி கிடைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தர விலக்கு வேண்டும்

நிரந்தர விலக்கு வேண்டும்

இப்படியொரு அச்சத்தின் விளைவாகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் நலனை பாதுகாக்கும் எண்ணத்தில் தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு 2007-ல் தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்வதற்கு என தனியாக சட்டம் இயற்றி, முறைப்படி குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெற்று, பிறகு அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் திறமையாக வாதாடி, நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்டம் செல்லும் என்ற தீர்ப்பு கழக ஆட்சியில்தான் வழங்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவு

மசோதாவுக்கு ஆதரவு

இந்நிலையில் அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் தேர்வுமுறை நீடிக்கும் வகையிலும், நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்களிக்கும் வகையிலும் கடந்த 31-01-2017 அன்று சட்டமன்றத்தில் மசோதாவை கொண்டு வந்த போது அதை திராவிட முன்னேற்றக் கழகம் திறந்த மனதுடன் வரவேற்று, ஆதரித்து, வாக்களித்தது.

பிரதமருக்கு கடிதம் எழுதினேன்

பிரதமருக்கு கடிதம் எழுதினேன்

அதன் பிறகு எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு 11-02-2017 அன்று கடிதம் எழுதி, நீட் தேர்வு நெருங்கி வரும் சூழலில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கடிதத்தின் நகலை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களிடமும் நேரடியாக வழங்கச் செய்தேன்.

கூவத்தூரில் ஆட்டம்போடதான் நேரமிருக்கு

கூவத்தூரில் ஆட்டம்போடதான் நேரமிருக்கு

ஆனால் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலில் பெறுவதில் அதிமுக அரசு எவ்வித அவசரமோ, அக்கறையோ காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு "கூவத்தூரில்" கொண்டாட்டம் நடத்த நேரமிருந்ததே தவிர, மார்ச் 1 ஆம் தேதி "நீட் தேர்வுக்கு" விண்ணப்பிக்க இறுதி நாள் என்ற நிலையிலும் கூட போர்க்கால நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளுக்கு ஒரு தினத்திற்கு முன்பு 27.2.2017 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீட் சட்டத்திற்கு விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருமாறு கோரியிருக்கிறார்.

கண்தடைப்பு நாடகம்

கண்தடைப்பு நாடகம்


நாங்களும் பிரதமரிடம் முறையிட்டோம் என்ற ஒரு கண்துடைப்பு நாடகத்திற்குத்தான் பிரதமருடனான சந்திப்பை அதிமுக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே தவிர, லட்சக்கணக்கான மாணவர்களின் நலனைக் காப்பாற்றுவதில் எந்த ஆர்வமும் இல்லை. குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மன அழுத்தத்துடன் மாணவர்கள்

மன அழுத்தத்துடன் மாணவர்கள்

இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், பலரும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். மருத்துவராகும் அனைத்து மாணவர்களின் எதிர்காலக்கனவு தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகி இருக்கிறது. நீட் தேர்வு பற்றிய நிலை என்ன என்பது தெரியாமல் தேர்வு நடைபெறும் மே 7 ஆம் தேதியை எதிர்நோக்கி ஒருவிதமான மன அழுத்தத்துடனும், குழப்பத்துடனும் லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அதைவிட அதிகமான மன அழுத்தத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

சசிகலாவை பார்க்கத்தான் நேரம் உள்ளது

சசிகலாவை பார்க்கத்தான் நேரம் உள்ளது

பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளி திருமதி சசிகலாவைப் பார்க்க அமைச்சர்கள் படையெடுக்கிறார்களே தவிர, நீட் தேர்வு பற்றி கவலைப்படவில்லை. அதிலும் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்த கேள்விக்கு மாணவர்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருப்பது பெங்களூருக்கு ஓடோடிச் சென்று குற்றவாளி சசிகலாவை பார்ப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் குற்றவாளியின் பினாமி ஆட்சி நடத்தும் இந்த விளையாட்டு பேராபத்து என்பதை அதிமுக அரசும், கல்வி அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் போன்றவர்களும் உணர மறுப்பது வேதனையாக இருக்கிறது.

துளி கூட அக்கறை இல்லை

துளி கூட அக்கறை இல்லை

கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க மருத்துவர்கள் நிச்சயம் தேவை, என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைக் கூட மத்திய அரசும், அதிமுக அரசும் கண்டுகொள்ள மறுப்பது கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்புற ஏழை மாணவர்கள் மீது துளி கூட அக்கறை இல்லை என்ற அலட்சிய மனப்பான்மையைக் காட்டுகிறது.

மே 7க்கு முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மே 7க்கு முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஆகவே இனிமேலும் மாணவர்களின் நலனுடன் விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எச்சரிக்க விரும்புகிறேன். அதேவேளையில் மாநில அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி, நீட் தேர்வு எழுதும் மே 7 ஆம் தேதிக்கு முன்பாவது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் மசோதாவிற்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசும் தாமதம் செய்யாமல் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிப்பதற்கு மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Stalin says that Tamil nadu government and ministers not bothering about NEET Exam. They are interested to see Sasikala in Bengaluru jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X