பாலில் கலப்படம் இல்லையென்றால் அமைச்சர் விலகுவாரா? பால் முகவர்கள் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். மேலும், 'தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயார்' என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 The milk agents association have urges milk Minister Rajendra Balaji should resign

இந்நிலையில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், பாலில் கலப்படம் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் 19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் நேற்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'கடந்த 2011 ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் முதல் 2017 மே வரை தமிழகம் முழுவதும் சுமார் 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில், 187 பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டது தெரியவந்தது. எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளரின் பதில் மனு உறுதி செய்துள்ளது. மேலும், தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இனியாவது ஆதாரமற்ற தகவல்களை பொத்தம் பொதுவாக பேசாமல் தனது பொறுப்பை உணர்ந்து அவர் பேச வேண்டும். இவ்வாறு பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Food Safety Department has stated that no milk is mixed or substandard. The milk agents association have urges milk Minister Rajendra Balaji should resign
Please Wait while comments are loading...