For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்றைக்கு ஒரு சுல்தான் துக்ளக்... இன்றைக்கு ஒரு பிரதமர் மோடி!

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர் மணி

நவம்பர் 8 ம் தேதி இரவு 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாதென்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பின்னர் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமை அசாதரணமானதாக இருந்து கொண்டிருக்கிறது. 'சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொது வாழ்க்கையில் இன்று தடங்கல் ஏற்பட்டிருக்கிறது' என்கிறார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு பலமுறை வந்து போய்க் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னணி ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஒருவர்.

மக்கள் படும் துயரம் சொல்லி மாளாதது. சிறிதளவு இரக்கமுள்ளவர்களின் கண்களில் இருந்தும் இது கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து 4,000 ரூபாயை மாற்றினால் கையில் வருவதோ வெறும் இரண்டு 2,000 ரூபாய் தாள்கள். அதனை சில்லறையாய் மாற்ற மேலும் சில மணி நேரம் தெருத்தெருவாய், கடை கடையாய் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது.

Thuglak and Modi

இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு மக்களின் கைகளில் இருந்த பணத்தின் (நாணயத்தின்) மதிப்பு செல்லாதென்று அறிவித்தது 14 ம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது. டில்லி சுல்தானாக வட இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட முஹம்மது பின் துக்ளக் தலை நகரத்தை டில்லியிலிருந்து தற்போதய மஹாராஷ்டிரத்தில் உள்ள தௌலாதாபாத்துக்கு மாற்றினார். இது பொது மக்களை மிகக் கடுமையாகவே பாதித்தது. ஆனாலும் மன்னர் அசரவில்லை. இதனால்தான் 'துக்ளக் தர்பார்' என்ற பெயரே வந்தது.

ஆனால் இதனை விட முக்கியமாக ஒரு மோசமான காரியத்தை துக்ளக் செய்தார். அது, அவரே அறிமுகப்படுத்திய மக்கள் பயன்படுத்திய, தற்போதய ரூபாய் நோட்டுக்கு இணையான நாணயத்தை செல்லாதென்று அறிவித்ததும், பின்னர் அதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தில் அவரது சாமாராஜ்யமே சரிந்து சின்னாபின்னமானதும்.

கி.பி. 1329 ல் தலைநகரை தௌலாதாபாத்துக்கு மாற்றியவுடன் 'டங்கா' எனப்படும் அடையாளப் பணத்தை (representative or token money) துக்ளக் அறிமுகப்படுத்தினார். இது செம்பு மற்றும் பித்தளையால் ஆனது. இதனைப் பயன்படுத்தி மக்கள் குறிப்பிட்ட அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளியை டில்லி சுல்தானின் நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் போலி 'டங்கா' வை தயாரிப்பது எளிதானதாக இருந்ததால் சந்தையில் ஏராளமான போலிகள் 'டங்கா'க்கள் வந்து விட்டன. சுல்தான் விழி பிதுங்கி நின்றார். ஒவ்வோர் வீட்டிலும் 'டங்கா'க்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் இந்த திட்டத்தை வாபஸ் வாங்கிய மன்னர் துக்ளக் அதற்குப் பதிலாக மக்களுக்கு நிவாரணமாக, 'உண்மையான டங்கா' வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தையும், வெள்ளியையும் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் போலி 'டங்கா' க்கள் அதிகமாக இருந்ததால் வாக்குறுதியை மன்னர் துக்ளக்கால் காப்பாற்ற முடியவில்லை. இதன் காரணமாக பெரு மலை போல 'டங்கா' க்கள் தவுலாதாபாத் கோட்டைக்கு எதிரில் பல ஆண்டுகள் குவிந்து கிடந்தன.

இதனால் ஏற்பட்ட அளவிட முடியாத பொருளாதார குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும்தான் சுல்தான் துக்ளக்கின் வீழ்ச்சிக்கு வழி கோழியதாக முன்னணி வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். கி.பி. 1351 ல் துக்ளக் இறந்த சமயத்தில் அவரது சாமராஜ்யம் சிதைந்து சின்னபின்னமாகக் கிடந்தது.

Thuglak and Modi

துக்ளக் தர்பாருக்கு பின்னர் சம கால வரலாற்றில் நமக்கு கிடைக்கும் ஒரு பாடம். மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக, தொழிற் வளர்ச்சி என்ற பெயரில் நிலத்தை பிடுங்கிய சிபிஎம் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதி. 1977 ல் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த சிபிஎம் 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாநிலத்தை ஆண்டது. இதற்கு முக்கியமான காரணம் சிபிஎம் முதலமைச்சர் ஜோதிபாசு அரசின் நிலச் சீர்த்திருத்தங்கள். ஏழை மக்களுக்கு, நிலத்தைப் பகிர்ந்து அளித்தல். ஆனால் எந்த நிலத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்களோ அதே நிலத்தை மக்களிடமிருந்து பிடுங்கிய காரணத்தால் 2011 தேர்தலில் தோற்ற சிபிஎம் மால், 2016 தேர்தலிலும் தலையெடுக்க முடியவில்லை.

மோடி அரசின் பண ஒழிப்புக்கு வருவோம். இன்று நிலைமை எந்தளவக்கு அபாயகரமான கட்டத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றால் இன்று உச்ச நீதிமன்றம் நேரடியாகவே தன்னுடைய அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறது.

Thuglak and Modi

"இது சர்ஜிகல் ஸ்டிரைக்' என்று சொல்லுகிறீர்கள். ஆனால் சாமானிய மனிதன் பாதிக்கப் படக்கூடாது. மக்கள் இன்று அச்சத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்,'' என்று கூறினார் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர்.

அப்போது குறிக்கிட்ட காங்கிரஸ் எம் பி யும் வழக்கறிஞருமான கபில் சிபல் இது 'சர்ஜிகல் ஸ்டிரைக்' கிடையாது. மாறாக சாமானியன் மீது தொடுக்கப் பட்ட 'கார்பெட் பாமிங்' (அதாவது 'மானாவாரியாக தொடுக்கப் பட்ட தாக்குதல்') என்றார். "இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நாங்கள் தலையிட முடியாது," என்று கூறிய நீதிபதிகள், அரசின் உத்திரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மோடியின் முடிவால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது, பாதிக்கப்படப் போவது, அமைப்பு சாரா தொழிலாளர்களும், கிராம மக்களும்தான். ஆம். ஒட்டு மொத்த அமைப்பு சாரா வர்த்தகத்தையும் வங்கிப் பரிவர்த்தனைகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மோடியின் முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இது தவறான கருத்து என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. அமைப்பு சாரா தொழில்களில்தான் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பணப் பரிவர்த்தனை என்பது பல்லாண்டுகளாக இருந்து கொண்டிருக்கும் மரபு சாரா ஒரு முறை. இதில் திடீரென்று மாற்றம் செய்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது.

2. இந்திய கிராமங்களின் எண்ணிக்கை 6,38,596. இருக்கும் வங்கிக் கிளைகளோ 50, 421 (இது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்).

ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால் தான் நிலைமையின் அபாயம் புரியும். இன்று 12 கிராமங்களுக்கு ஒரு வங்கி இருக்கிறது. எப்படி ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு இரவில் வங்கி பரிவர்த்தனைக்குள் கொண்டு வந்து விட முடியும்? அமைப்பு சாரா தொழிலாளர்கள் - கட்டடத் தொழில், விவசாயம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, சிறு வணிகர்கள், சிறிய அளவிலான ஆடை உற்பத்தியாளர்கள், எண்ணற்ற சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் - என்ற துறைகளில் கோடானு கோடி மனிதர்கள் இன்று கூலி வாங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனை ஏதோ வங்கிகளிலும், ஏஎடிஎம் களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் போய் சேர்ந்தவுடன் தீரப் போவதில்லை. இந்த தடங்கலின் விளைவு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று பொருளாதார நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.

நூற்றாண்டுகளாய் இருந்த பொருளாதார கண்ணி அறுக்கப் பட்டிருக்கிறது. மறுபடியும் இணைப்பது சுலபமான பணி கிடையாது. இந்த பிரச்சனையின் மறு பக்கம் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் புதிய, புதிய வழிகளில் தங்களது கரன்சியை வெள்ளையாக்கிக் கொண்டிருப்பது. ஆகவே இதில் மோடி அரசு சாதிப்பதற்கு வேறு ஏதோ பெரியாதாக இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

மக்களிடமிருந்து மண்ணையும், பொன்னையும் (பணத்தையும்தான்) பிடுங்கிய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது வரலாறு. 'துக்ளக் தர்பார்' என்ற சொல்லாடலுக்கு இணையாக அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு 'மோடி தர்பார்' பேசப்படும். இது இன்னுமொரு மோசமான வரலாற்று நிகழ்வாகப் போகிற நடவடிக்கை!

English summary
Columnist R Mani has narrated PM Modi's demonitisation is an historic error and compared this with 13th Centuries Mohammad Bin Thuglak's demonitisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X