For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பைசா ஊழல் இல்லாத, சொட்டு மது இல்லாத தமிழகத்தை அன்புமணி உருவாக்குவார்: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை புதைகுழியில் தள்ளிய திமுக, அதிமுக அரசுகள் ஊழலில் ஊறியவை என்றும், பைசா ஊழல் இல்லாத, சொட்டு மது இல்லாத தமிழகத்தை அன்புமணி உருவாக்குவார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் சிறப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்தவகையில் நேற்று வெளியான முதல் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியின் போது கல்வித்துறையில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து விளக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று பாமகவின் இரண்டாவது தேர்தல் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊழல், மது...

ஊழல், மது...

''தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் இரு தீமைகளை பட்டியலிட்டால் முதலிடத்தில் இருப்பது ஊழல், இரண்டாவது இடத்தில் இருப்பது மது ஆகும். இவ்விரு தீமைகளையும் உரம் போட்டு வளர்த்தவை தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான்.

காமராஜர் ஆட்சி...

காமராஜர் ஆட்சி...

1967&ஆம் ஆண்டில் திமு.க. ஆட்சிக்கு வரும் வரை ஊழல் என்ற வார்த்தையை தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது. அதற்கு முந்தைய ஆட்சிகள் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்ட போதும் அவை எடுபடவில்லை. 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததுடன், இரு பிரதமர்களை தேர்ந்தெடுத்தவருமான காமராஜர் உயிரிழக்கும் போது அவரிடம் இருந்தவை ரூ.100 பணமும், 10 கதர் வேட்டி சட்டைகளும் தான் என்பதிலிருந்தும், 10 ஆண்டுகள் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவரது கடைசி காலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் மக்களுடன், மக்களாக சிகிச்சை பெற்றுக் கொண்டவர் என்பதிலிருந்தும் அவர்களின் நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

விஞ்ஞான முறையில் ஊழல்...

விஞ்ஞான முறையில் ஊழல்...

அண்ணா முதலமைச்சரான பின் அவரது அமைச்சர்கள் சிலர் விதிமீறலில் ஈடுபட்டனர் என்ற போதிலும், அவர் ஊழல் புகாருக்கு ஆளாகாமலேயே பதவி வகித்து மறைந்தார். அவருக்கு பின் கலைஞர் முதல்வர் ஆனதும் ஊழலும் சிம்மாசனம் ஏறியது. அவர் மீதான 28 ஊழல் புகார்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா ஆணையம்,‘‘ அனைத்து புகார்களும் உண்மை தான். ஆனால், அவற்றுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளனர்'' என்று கூறி கலைஞரின் ஊழலை அம்பலப்படுத்தினார். அதன் பரிணாம வளர்ச்சி உலகமே வியந்த ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், ரூ.780 கோடி ஏர்செல்& மேக்சிஸ் ஊழல், 20 அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு என ஊழலின் உச்சத்தை தொட்டது. 2ஜி ஊழலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஒன்றரை ஆண்டுகளும், கலைஞரின் மகள் 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் திமுக ஊழலின் அழிக்க முடியாத சான்றுகளாகும்.

ஜெ.வின் பெருமை...

ஜெ.வின் பெருமை...

அதிமுகவின் ஊழல்கள் திமுகவுக்கு சற்றும் குறையாதவை. மாதம் ஒரு ரூபாய் ஊதியம் பெற்ற ஜெயலலிதா அன்றைய மதிப்பில் ரூ.66.65 கோடிக்கும், இன்றைய மதிப்பில் ரூ.10,000 கோடிக்கும் சொத்துக் குவித்தது ஓர் ஊழல் அதிசயம். ஜெயலலிதா முதல் 5 ஆண்டுகளில் செய்த ஊழலைவிட அடுத்த 10 ஆண்டுகளில் செய்த ஊழல் 100 மடங்கு அதிகமாகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக இருமுறை பதவி நீக்கப்பட்ட முதலமைச்சர், இருமுறை சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் கிரானைட், தாது மணல், என இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சுருக்கமாக கூறினால் ஜெயலலிதாவும், கலைஞரும் கடந்த 10 ஆண்டுகளில் செய்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.70 லட்சம் கோடிக்கும் அதிகம்.

மது அரக்கன்...

மது அரக்கன்...

மதுவை எடுத்துக் கொண்டால், 1948 ஆம் ஆண்டில் ஓமந்தூரார் அவர்களால் விரட்டியக்கப்பட்ட மது அரக்கனை 23 ஆண்டுகளுக்கு பிறகு அழைத்து வந்து விருந்து வைத்ததன் மூலம், ஒரு தலைமுறையாக மதுவைப் பார்க்காத இளைஞர்களை சீரழித்தவர் கலைஞர். ஜெயலலிதாவோ இன்னும் ஒருபடி மேலேபோய் மதுக்கடைகளை அரசுடைமையாக்கி, அரசே மதுவிற்கும் அவலத்தை உருவாக்கியவர். ஊருக்கு ஊர் விதவைகளை உருவாக்கி, இந்தியாவில் அதிக இளம் விதவைகள் கொண்ட மாநிலம் என்ற அவப்பெயரை தேடித்தந்தது இவர்கள் தான். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பு, ரூ.2.20 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு என வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் தமிழகத்தை கடைசி இடத்திற்கு தள்ளியவர்களும் இவர்களே.

புதிய செயல்திட்டங்கள்...

புதிய செயல்திட்டங்கள்...

தமிழகத்தை புதைகுழியில் தள்ளிய இந்த இரு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழக மக்களை மீட்பதற்கு உன்னதமான செயல்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும், பொது சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஊழல் செய்வதாக தெரியவந்தால் யாருடைய அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்ற அளவுக்கு லோக் அயுக்தா அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்துதல், மின் ஆளுமை முறையில் அரசு அலுவலகங்களை இணைத்தல், மாவட்ட அளவிலும், துறைகள் அளவிலும் ஊழல் ஒழிப்பு அதிகாரிகளை நியமித்தல், ஊழலுக்கு அதிக வாய்ப்புள்ள பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்களாக அப்பழுக்கற்றவர்களை நியமித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஊழலை அடியோடு ஒழிக்கும். மேலும், ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என்பதன் மூலம் ஊழல் ஒழிப்பு பணியில் பொதுமக்களுக்கும் அதிகாரம் அளித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி.

முதல் கையெழுத்து...

முதல் கையெழுத்து...

முதலமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதவியேற்றதும் அவரது முதல் கையெழுத்தே மது ஒழிப்புக்கான ஆணையில் தான் இருக்கும். தமிழகத்தில் அனைத்து மது ஆலைகளும் மூடப்படும். மதுக்கடைகள் மூடப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட சிறப்புத்திட்டங்கள், மது அடிமைகளை மீட்க போதை மீட்பு மருத்துவம் அளிக்கப்படும், மதுக்கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று அரசு வேலை வழங்கப்படும் என மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் பாட்டாளி மக்கள் கட்சியால் வகுக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப் பட்டிருப்பது மட்டுமின்றி, குடிப்பழக்கத்தால் கணவரை இழந்த பெண்கள் சுயதொழில் தொடங்க அரசு உதவி வழங்கும் என்ற பா.ம.க.வின் அறிவிப்பும் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்முறை வாக்களிப்போர்...

முதல்முறை வாக்களிப்போர்...

மதுவையும், ஊழலையும் ஒழிக்க இவற்றைவிட சிறந்த திட்டத்தை எவராலும் உருவாக்க முடியாது. இந்த செயல்திட்டங்களை உருவாக்கத் தேவையான மாற்றத்தை வழங்க இளைஞர்கள், படித்தவர்கள், படித்த பெண்கள், 20% நடுநிலையாளர்கள், அரசியல் சாக்கடை என்று கருதி இதுவரை வாக்களிக்காமல் இருந்து முதல்முறையாக வாக்களிப்போர் உள்ளிட்ட உங்களால் தான் முடியும். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். எனது கனவும், மது இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் உள்ளிட்ட அனைவரின் கனவும் நிறைவேற வேண்டுமானால் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முதலமைச்சர் ஆனால் தான் முடியும். ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்; ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களால் தான் முடியும். எனவே, தமிழ்நாட்டிற்கு வசந்தம் வீசும் எதிர்காலத்தை உருவாக்க மருத்துவர் அன்புமணியை முதலமைச்சராக்க வேண்டும். அதற்காக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK leader Ramadoss said that there is a PMK wave in this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X