என்ன செய்தோம் இன்னொரு தாய்க்கு? #internationalgirlchildday

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னொரு தாயாக, மற்றொரு சகோதரியாக, தோள் கொடுக்கும் தோழியாக.. என, ஒரு தந்தைக்கு எக்காலத்திலும் உறுதுணையாக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கான நாள் இன்று.

பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது முதல், வல்லூறுகளால் இரையாகுவது வரை பல அநியாயங்களை பார்த்த பிறகு தீர்க்கமாக எடுக்கப்பட்ட முடிவுதான், பெண் பிள்ளைகளுக்காக ஒரு தினம் வேண்டும் என்பது.

ஐநா சபை, 2012 முதல் அக்டோபர் 11ம் தேதியை பெண் பிள்ளைகளுக்கான நாளாக அறிவித்தது. இந்த வருடம் நாம் 6வது ஆண்டாக பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். இணையத்தின் வசதியால் இந்த தினம் இப்போது கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

பொது சமூகம் அணி திரள வேண்டும்

பொது சமூகம் அணி திரள வேண்டும்

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்" என்ற பாரதியின் கோபத்திற்கு இணங்க, பெண் பிள்ளைகளை படிக்க வைக்காமல் கூலி வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு எதிராகவும், படிக்க போக இடத்தில் தொல்லை செய்து படிப்பை கெடுக்கும் திரை பிம்ப வாழ்க்கையை நம்பும் மூட இளைஞர்களுக்கும் எதிராக பொதுச் சமூகம் அணி திரளவே இந்த நாள்.

அரசின் ஈடுபாடு

அரசின் ஈடுபாடு

தொடர் விழிப்புணர்வால், கள்ளிப்பால் கொடுமை தமிழகத்தில் ஓய்ந்துள்ளது. இப்போதுதான் விழித்துள்ளன வட மாநிலங்கள். 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' என்று கோஷமிட்டு மக்களை பெண்குழந்தைகளின் சாதனைகளை புரிந்துகொள்ள வைக்க முயல்கிறது மத்திய அரசு. டிவிகளில் தொடர் விளம்பரங்கள் செய்கிறது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், அதிக வட்டித் தொகையை கொடுத்து, பெண் பிள்ளைகளை காக்க ஊக்கம் கொடுக்கிறது அரசு. இன்னும், ஒன் ஸ்டாப் சென்டர் திட்டம், மகிளா இ-ஹாட் என பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தும் வேகம் ஒன்றே சாட்சி, நமது நாட்டில் பெண் பிள்ளைகளை பாரமாக பார்க்கும் பெற்றோர் இன்னும் குறையவில்லை என்பதற்கு.

எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள்

எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள்

இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரச்சினை இல்லை. பெண் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகை அத்துமீறல்கள். கென்யா முதல் வாஷிங்டன் வரை, பாகிஸ்தான் முதல் பாரீஸ் வரை பெண் குழந்தைகள் தினம் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தை கல்வி இந்த தினத்தின் முக்கிய கோஷமாக உள்ளது.

வேகமான நடவடிக்கைகள்

வேகமான நடவடிக்கைகள்

பெண் குழந்தைகள் தினம் இன்னும் பல மலாலாக்களை உருவாக்கும் என்பது ஐநாவின் எண்ணம். இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாகவே உள்ளது. கருவிலேயே பெண் பிள்ளைகளை கண்டறிய விடாமல் ஸ்கேன் சென்டர்கள் கடும் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன, வரதட்சணை என்பது சட்டப்படி தவறு என அறிவித்தாகிவிட்டது, இதன் காரணமாக காஸ் ஸ்டவ் வெடிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டன. தமிழகத்தின் தொட்டில் குழந்தை திட்டம், 1990களில் மோசமான வளர்ச்சியில் இருந்த கள்ளிப்பால் கொலைகளையும், தெருவில் வீசிச் செல்லப்படும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையையும் குறைத்தது.

சூளுரைக்க வாருங்கள்

சூளுரைக்க வாருங்கள்

இக்கால சமூக பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள கல்வி அறிவு, விழிப்புணர்வு போன்றவை மகன்களுக்கு ஈடானவர்கள் மகள்கள் என்பதை புரிய வைத்துள்ளது. பல பெற்றோர் , மகள்களே மகன்களைவிடவும் சிறப்பாக தங்களை கவனித்துக்கொள்வதாக கூறும் அளவுக்கு சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்னமும் கூட பட்டாசு தொழிற்சாலைகளில் கண் மறைவில் பெண் குழந்தைகள் கூலிக்காக பயன்படுத்தப்படுகிறார்கள், இன்னமும் குக்கிராமங்களில் வயதுக்கு வந்ததும் பெண் குழந்தைகளின் படிப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது. இன்னமும் பக்கத்து வீட்டு 'மாமாக்களால்' பிஞ்சுகள் நசுக்கப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு எதிராக வெகு ஜன மக்கள் சூளுரை செய்ய இந்த நாள் ஒரு தொடக்கமாக அமையட்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
International Day of the Girl Child is an international observance day declared by the United Nations; it is also called the Day of the Girl and the International Day of the Girl. October 11, 2012, was the first Day of the Girl.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற