For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவுக்காக உளவு பார்த்தாரா கூடங்குளம் உதயகுமார்?

By Mathi
Google Oneindia Tamil News

Udayakumar Joins Issue with IB Report, Claims Threat to Him
திருநெல்வேலி: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துக்காக பணம் பெற்றுக் கொண்டு இந்திய அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிக்கைகளைக் கொடுத்து வந்தாக உளவு அமைப்பான ஐ.பி. குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் உளவு அமைப்பின் இந்த புகாரை திட்டவட்டமாக கூடங்குளம் உதயகுமார் மறுத்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்கு உளவு அமைப்பான ஐ.பி. அண்மையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் கூடங்குளம் போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சுப. உதயகுமாரின் பெயரை இரண்டு இடங்களில் குறிப்பிட்டு உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.பி. அறிக்கையில் "அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதயகுமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் செயல்படும் கிர்வான் இன்ஸ்டியூட் நிறுவனத்திடம் பணி ஒப்பந்தம் ஒன்றை உதயகுமார் பெற்றார். அந்நிறுவனமானது உதயகுமாருக்கு 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 21, 120 அமெரிக்க டாலர் தொகையை வழங்கி வந்தது. இது உதயகுமாரின் பெயரில் உள்ள அமெரிக்க வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு ஒப்பந்த பணி மூலம் அடிக்கடி அறிக்கைகள் அனுப்பி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 17,600 அமெரிக்க டாலர் பணம் பெற்றிருக்கிறார்.

ஜெர்மனியைச் சேர்ந்த ராய்னர் என்பவர் சென்னையில் இருந்து 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி நாடு கடத்தப்பட்டார். அவரது லேப்டாப்பில் இந்தியாவின் 16 அணுசக்தி நிலையங்கள், 5 யுரேனியம் சுரங்கங்கள் உள்ள வரைபடம் இருந்தது. இவை உதயகுமார் உட்பட 5 அணுசக்தி திட்ட எதிர்ப்பாளர்களுக்கு அனுப்பி இ மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

உதயகுமார் மறுப்பு

இதை கூடங்குளம் உதயகுமார் திட்டவட்டமாக மறுத்து தமது முகநூல் பக்கத்தில் விரிவான மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!" என்ற தலைப்பில் உதயகுமார் வெளியிட்டுள்ள மறுப்பு விவரம்:

இந்திய உளவுத் துறை (IB) பிரதமர் அலுவலகத்துக்கு ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறார்களாம். அதாவது தொண்டு நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு குறுக்கே நிற்கிறார்கள், மதமாற்றத்துக்கு வழி வகுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியிருக்கிறார்களாம்.

இரண்டு இடங்களில் எனது பெயரைக் குறிப்பிட்டு, அமெரிக்காவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தோடு எனக்குத் தொடர்பு இருந்ததாகவும், நான் அவர்களுக்கு தொடர்ந்து அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தவறாக எழுதியிருக்கிறார்கள். ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் (Ohio State University, Columbus, OH) இயங்கிய கிர்வான் ஆய்வு நிலையத்தின் (Kirwan Institute for the Study of Race and Ethnicity) சர்வதேச ஆய்வு வல்லுனராக (Research Fellow) நான் பணி புரிந்தேன்.

இந்தியாவிலிருந்தபடியே உலகமயமாதல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன். இந்தியாவின் அணுசக்தி பற்றியோ, வளர்ச்சி பற்றியோ நாங்கள் எந்த ஆய்வும் செய்யவில்லை.

நான் அமெரிக்காவில் 1997 முதல் 2001 வரை மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் Institute on Race and Poverty, University of Minnesota எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் தலைவராக செயல்பட்ட பேராசிரியர் ஜான் பவல் கிர்வான் ஆய்வு நிலையத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றபோது, என்னை அவரது புதிய முயற்சிக்கு உதவும்படிக் கேட்டுக் கொண்டார்.

வேலை செய்த நேரத்துக்கு ஏற்ற மாதிரி சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் IB ஆட்கள் வேறுமாதிரி திரித்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ராய்னர் தனது மடிக்கணினியில் இந்தியாவின் அணுசக்தி நிறுவனங்களை ஒரு வரைபடத்தில் குறித்து வைத்திருந்தாராம், அதை நான் உட்பட பலருக்கு அனுப்பிக் கொடுத்தாராம். இப்படியெல்லாம் IB தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

இவர் ஹிப்பி போன்று உலகம் சுற்றித் திரிபவர். நாகர்கோவிலில் சந்தித்த பிறகு, எங்கள் நிகழ்வுக்கு வருவார். வேறு எந்தத் தொடர்பும் இருந்தது இல்லை. பிப்ருவரி 27, 2012 அன்று இந்தியாவை விட்டு அவர் வெளியேற்றப்பட்டபோதே நான் கேட்டேன். அவர் தவறு செய்திருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்காமல் அவசரம் அவசரமாக வெளியேற்றுகிறீர்கள் என்று. இப்போது புதிய கதை சொல்லுகிறார்கள்.

உளவுத் துறையும், மத்திய அரசும் ஒரு சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்:

[1] சாதாரண மக்களான மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் தெரியும். தங்கள் மண்ணில் ஓர் அழிவுத் திட்டம் வரும்போது, அதை எதிர்த்து ஒரு நிலைப்பாடு எடுக்கவும் அவர்களுக்குத் தெரியும்.

[2] அந்த சக்தியற்ற மக்களின் மண்ணையும், நீரையும், காற்றையும், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும், வருங்காலத்தையும் மீட்பதற்காக எங்களில் சிலர் எழுந்து நிற்கும்போது, எங்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள், கடத்தல்காரர்கள், ஹவாலாப் பேர்வழிகள் என்று கொச்சைப்படுத்துவது மிகவும் தவறு. இந்த மக்களையும், இந்த நாட்டையும் நேசிப்பதால்தான் நாங்கள் இதனைச் செய்கிறோம்.

[3] நேர்மையான, பொறுப்பான, சட்டத்தை மதிக்கும் எங்களை இப்படி அசிங்கப்படுத்தினால், அது நமது இளைஞர்களுக்கு தவறான செய்தியைக் கொடுக்கும்; அவர்கள் வன்முறையிலும், தீவிரவாதத்திலும் நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

உளவுத் துறையின் இந்த பாசிச நோக்கும், போக்கும் என்னைப் போன்ற தனிநபர்கள், குழுக்கள், மக்கள் இயக்கங்கள், சிறுபான்மையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்று நினைக்கிறேன். எனது பெயரைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தார் பாதுகாப்புக்கும் ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன்.

நான் நேர்மையானவன், வெளிநாடுகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டுப் போராடவில்லை என்று எத்தனயோ முறை சொல்லிவிட்டேன்.

சீதாப்பிராட்டிப் போல தீயிலாக் குதிக்க முடியும் இனி? பாரதியார் சொல்வது போல, "சிந்தையொன்று இனியிலை, எது சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டேன்."

சிறையோ, சாவோ, எதுவோ வரட்டும்!

இவ்வாறு உதயகுமார் தமது மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
PMANE coordinator SP Udayakumar posted on Facebook onWednesday that he feared a threat to his and family's life after an online news report on Monday claimed that he had received money from foreign institutions to stall developmental projects in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X