For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லைகா தயாரித்த கத்தி திரைப்படத்தைத் திரையிடக் கூடாது- தொல்.திருமாவளவன் எச்சரிக்கை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான லைகா தயாரித்த கத்தி திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொல். திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பிலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்திலும் உருவான 'கத்தி' எனும் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாகத் தெரிய வருகிறது. இத்திரைப்படம் லைகா மொபைல் நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

VCK protest against Kathi movie

இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் என்பவர் தமிழீழத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பா உள்ளிட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் உலகத் தமிழர்களுக்கிடையே இந்நிறுவனம் சிம் கார்டு உற்பத்தியில் முன்னணி நிறுவனம்.

தற்போது தமிழகத் திரைத் துறையில் அடியெடுத்து வைத்துள்ள இந்நிறுவனம் உலகத் தமிழர்களிடையே கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏனெனில், லைகா மொபைல் உரிமையாளரும் சிங்கள இனவெறியர் இராஜபக்சேவின் மகனும் இணைந்து தொழில் செய்து வருவதாக தமிழ்ச் சமூகத்தினரிடையே வலுவான கருத்து பரவியுள்ளது.

இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவோடு தொழில்ரீதியாக நட்புறவு கொண்டுள்ள சுபாஷ்கரன் தமிழ்த் திரையுலகத்தில் முதலீடு செய்வது தமிழ் மக்களிடையே பெரும் அய்யத்தை உருவாக்கியுள்ளது. இராஜபக்சே திட்டமிட்டு திரையுலகத்தின் மூலம் தமிழக அரசியலில் ஊடுருவ முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இளைய தலைமுறையினர் சிங்கள இனவெறிக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்றும் இளைஞர்களின் போர்க் குணத்தை மழுங்கச் செய்யும் வகையிலும் இராஜபக்சே கும்பல் திட்டமிட்டு திரைத்துறையின் மூலம் ஊடுருவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எனவேதான், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பாக அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அக்கூட்டமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பு இயக்கமாக இடம்பெறவில்லையென்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனைகளில் ஒத்துழைப்பு எனும் அடிப்படையில், அக்கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் 24 அன்று நடத்திய பேரணியில் கலந்துகொண்டது. அத்துடன், 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, இராஜபக்சேவின் பினாமி நிறுவனம் என்று சந்தேகத்திற்குள்ளாகியிருக்கிற லைகா நிறுவனத் தயாரிப்பில் 'கத்தி' திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிடக் கூடாது என்னும் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகளும் வலியுறுத்துகிறது. இது, நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை ஆகாது.

தமிழின எதிரி இனவெறியன் இராஜபக்சேவுக்கு எதிரான கோரிக்கை என்பதை புரிந்துகொண்டு திரைப்பட வெளியீட்டாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் 'கத்தி' திரைப்படத்திற்கு எதிரான எமது கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Viduthalai Chiruthaigal leader Thol. Thirumavalavan protest against Lyca's Kathi movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X