கரிசல் காட்டு கதை சொல்லி எழுத்தாளர் கழனியூரன் காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கரிசல் காட்டு கதை சொல்லி, முதுபெரும் எழுத்தாளர் கி.ராவின் இலக்கிய வாரிசு எனப் புகழப்பட்ட எழுத்தாளர் கழனியூரன் (வயது 63) இன்று காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் கழுநீர்குளத்தில் 1954ஆம் ஆண்டு பிறந்தவர் கழனியூரன். இவரது இயற்பெயர் அப்துல்காதர்.

Writer Kalaniyuran passes away

கழனியூரான் ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதுபெரும் எழுத்தாளர் கி.ராவை ஆசிரியராகவும் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் கதை சொல்லி இதழின் பொறுப்பாசிரியராக கழனியூரான் பணிபுரிந்து வந்தார்.

தாய்வேர், கதைசொல்லியின்கதை, நெல்லை நாடோடிக் கதைகள், மண்மணக்கும்மனுஷங்க, நாட்டுப்புறநீதிக்கதைகள், பன்னாட்டு சிறுவர் நாடோடிக் கதைகள், மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நூல்களை கழனியூரான் எழுதியுள்ளார். http://kazhaneeyuran.blogspot.in எனும் வலைதளத்தில் தீவிரமாக எழுதியும் வந்தார்.

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை கழுநீர் குளத்தில் நடைபெற உள்ளது. கழனியூரான் மறைவுக்கு எழுத்தாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே.எஸ்.ராதாகிருஷணன்

கழனியூரான் மறைவு தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இன்று (27.6.2017) எனது ஆருயிர் நண்பரும், எங்களின் கதைசொல்லி இதழின் பொறுப்பு ஆசிரியரும், கரிசல்காட்டு கதைசொல்லி கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் அவர்கள் இன்னுயிரை இன்று காலை சுமார் 10.47 மணியளவில் இயற்கை பறித்துக் கொண்டது.

நேற்றிரவு கூட கி.ரா. 95 நிகழ்வு குறித்து எங்களிடம் விவாதித்து கொண்டிருந்தார். அவரது மகன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருநெல்வேலி சென்றிருக்கிறார்.

இந்நிலையில் சந்தோசபுரத்தில் உள்ள தனது மகனின் இல்லத்தில் வழக்கம் போல் இன்றைய பணிகளை செய்து கொண்டிருந்தார். காலை உணவாக கஞ்சி மட்டுமே அருந்தியுள்ளார்.

பின் திடீரென தனது உடல்நிலை ஏதோ போல இருந்ததால் அருகிலிருந்த தனது நண்பரான நெல்லையை சேர்ந்த வேம்புவை அழைத்துள்ளார். அவர் உடனடியாக அருகில் இருந்தவர்களுடன் கால் டாக்ஸி மூலம் சோழிங்கநல்லூரில் உள்ள Global Hospital - Chennai மருத்துவமனைக்கு 10.30 மணியளவில் கொண்டு சென்றனர்.

வீட்டில் இருந்து அவரை வெளியே அழைத்து வரும்போதே நாடித்துடிப்பு குறைந்து அவரால் நடக்க இயலாததாக இருந்துள்ளார். சுமார் 10.47 அளவில் மருத்துவமனையில் பரிசோதனை செய்கையில் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் இன்னுடலை விட்டு உயிர் பிரியும் தருவாயில் கூட நண்பர்களான எங்களால் உடன் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான் வேதனையாக எங்களை வாட்டுகிறது. அவருடைய திருவுடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு அவரின் இறுதிச் சடங்குகள் நாளை பிறபகல் 3 மணியளவில் குடும்பத்தார் சார்பில் நடைபெற உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil writer Kalaniyuran, died in native place Kazhuneerkulam on Tuesday. He was 63.
Please Wait while comments are loading...