For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஸ்ரீரங்கத்து தேவதை'களின் நாயகன் சுஜாதா

Google Oneindia Tamil News

Writer Sujatha’s commemoration day today….
சென்னை: சுஜாதா.....ஸ்ரீரங்கத்தின் எழுத்து நாயகன் இவர். பிரபலமான எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான சுஜாதாவின் நினைவு தினம் இன்று.

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பொறியியல் கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்த அவர் டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993 ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்க முக்கியக் காரணமே இவர்தான். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.

இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு "வாஸ்விக் விருது" வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான சுஜாதாவைத் தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் "கடைசிப் பக்கங்கள் "எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி இதே பிப்ரவரி 27, 2008 ஆம் ஆண்டு மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

English summary
The Famous Writer Sujatha’s commemoration day today. He died in February 27th 2008 in Apollo hospital Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X