வேதனை! ‘பிள்ளைகளை போல வளர்த்தேன்’.. பூவோடும் குரும்பையோடும் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய விவசாயி!
தஞ்சாவூர் : தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மனமுடைந்த விவசாயி, 2 ஏக்கர் தோப்பில் இருந்த தனது தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார்.
தேங்காய் விலை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. சில மாதங்களாக கடுமையாக வீழ்ந்துள்ள தேங்காய் விலை, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அத்தனையையும் வெட்டி, மரக்கடைக்கு விற்றுள்ளார்.

தேங்காய் விலை வீழ்ச்சி
தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தேங்காய் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் சிலர் விலை கூடும்போது குடோனுக்கு அனுப்பலாம் என தேங்காய்களை இருப்பு வைத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து விலை அதிகரிக்காததால் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக நாட்களுக்கு தேங்காய்களை இருப்பு வைத்தாலும், அவை அழுகி பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

கடுமையான வீழ்ச்சி
விவசாயிகளிடம் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து தேங்காய் வாங்கிய வியாபாரிகள் தற்போது 5 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை மட்டுமே கொடுத்து வாங்கி வருகின்றனர். இதேபோல் ரூ.120க்கு விற்கப்பட்ட கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 82 ஆக குறைந்துள்ளது. 105 ரூபாயாக அரசு ஆதார விலை நிர்ணயித்து இருந்தாலும் கூட வெளிச்சந்தையில் 82 ரூபாய்க்கு தான் வாங்கப்படுகிறது. கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் சிறு குறு விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை. இதனால் சிறு விவசாயிகள் 82 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெட்டி அழிக்கும் விவசாயி
இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது தென்னை மரங்களை குரும்பையோடும், காயோடும் வெட்டி வீழ்த்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பூந்துருந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் (57). இவர் கண்டியூரில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு வைத்திருந்தார். தேங்காய் விலை தொடர் வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராமலிங்கம், கண்டியூரில் உள்ள 2 ஏக்கர் தோப்பில் இருந்த, 143 தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கட்டுப்படியாகவில்லை
இதுதொடர்பாக விவசாயி ராமலிங்கம் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை வெறும் ரூ.5-க்குத்தான் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது ரூ.40-ம், வெட்டிய தேங்காயை அள்ள அரைநாள் சம்பளமாக ரூ.300-ம் கொடுக்க வேண்டியுள்ளது. பராமரிப்புச் செலவும் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை சாகுபடியில் நஷ்டம் ஏற்படுகிறது.

பிள்ளை போல வளர்த்த தென்னைகள்
தேங்காய் விற்கும் விலைக்கு தென்னை மரம் வைத்திருந்து பலன் இல்லை என்பதால், இவற்றை வெட்டி அழித்துவிட்டு வாழை, கத்தரி, கீரை போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த மரங்கள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டவை. பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்களை வெட்டி, அவற்றை மரக்கடைக்கு அனுப்புவது வேதனையாக இருக்கிறது. ஒரு மரம் ரூ.1,500 என விலை வைத்து வியாபாரியிடம் விற்றுவிட்டேன். 2 நாட்களாக மரங்கள் வெட்டப்படுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் மரங்கள் அனைத்தும் வெட்டப்படும்" என வேதனையோடு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications