போதையில் மலைப்பாம்பை கழுத்தில் போட்டு 'ஸ்டைல்'.. அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்! ஷாக் வீடியோ
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதியவர் ஒருவர் மது போதையில் விபரீதம் அறியாமல் மலைப்பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுள்ளார். இதில் மலைப்பாம்பு கழுத்தை நெரித்ததால் பாம்பிடம் இருந்து தப்பிக்க அவர் போராடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்று எழுதி வைத்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் அசால்டாக அட்டித்து விட்டு சில மது பிரியர்கள் செய்யும் ரகளைகளை எளிதில் சொல்லிவிட முடியாது.
போதையில் வருகிறவர் போகிறவர் என அனைவரையும் வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக்கொள்வது, சாலையில் படுத்து தூங்குவது.. ஓடுகிற பஸ்சை குறுக்கே சென்று மறிப்பது என போதையில் மதுப்பிரியர்கள் செய்யும் அழிச்சாட்டியங்கள் அளவே இல்லாதது.

போதையில் பாம்பை கழுத்தில் போட்ட..
இப்படி மதுப்பிரியர்கள் செய்யும் சேட்டைகளையும் அட்டகாசங்களையும் பற்றி சொல்ல வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். அதேபோல் போதையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் கண்டதையும் செய்து விட்டு போதை தெளிந்ததும் நானா இப்படி செய்தேன் என்று புலம்பும் ஒரு ரகத்தினரும் இருக்கிறார்கள். அதேபோலத்தான் ஜார்க்கண்ட்டில் குடிமகன் ஒருவர் போதையில், மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

இணையத்தில் பரவும் வீடியோ
ஆனால், பாம்பு கழுத்தை நெறித்து வலியை உணர்ந்த பிறகே தான் எதிலோ சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்து கூப்பாடு போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் வீடியோவை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 50 நொடிகளே ஓடக்கூடிய அந்த வீடியோவில், வயதான ஒருவர் கழுத்தில் மலைப்பாம்பு இறுக சுற்றியுள்ளது.

2 சிறுவர்களின் உதவியால்
அதை தனி ஆளாக விடுவிக்க முடியாமல் தவிக்கும் அந்த முதியவர் உதவிக்கு அருகில் உள்ளவர்களை அழைக்கிறார். அதைப்பார்த்த இரண்டு சிறுவர்கள், முதியவரின் கழுத்தில் சுற்றியுள்ள பாம்பை பிடிக்க கடும் முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியின் போது முதியவரும் தலைக்குப்புற கீழே விழுகிறார். பின்னர் ஒரு வழியாக பாம்பின் பிடியில் இருந்து முதியவரை மீட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுபோதையில் பாம்பு
இந்த வீடியோவில் இடம் பிடித்து இருந்த முதியவர், மதுபோதையில் விபரீதம் அறியாமல் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். பாம்பும் தானாக சிக்கியவை விட்டு விடுமா என்ன? கழுத்தை இறுகப்பற்றிக்கொண்டது. அப்போதுதான் நிலைமையை அந்த வயதான குடிகாரர் உணர்ந்து கூச்சலிட்டு இருக்கிறார். ஜார்க்கண்டின் பரிஹராகா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிடோசஓடி குர்த் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாம்பிடம் வீராவேசம் காட்டி சிக்கிய முதியவர் பெயர் பிர்ஜ்லால் ராம் புயன் என்பதாகும்.

லேசான காயம்
பாம்பு கழுத்தை இறுக்கி சுற்றிக்கொண்டதில் லேசான காயமும் பிர்ஜ்லாள் ராம் புயனுக்கு ஏற்பட்டுள்ளது. சுய மருத்துவத்திலேயே இந்த காயத்தை பிர்ஜ்லால் ராம் புயன் குணப்படுத்திகொண்டதாக கூறப்படுகிறது. சில திரைப்படங்களில் பெல்ட் என நினைத்து பாம்பை இடுப்பில் கட்டிக்கொள்வது.. புடலங்காய் என நினைத்து பாம்பை கையில் எடுப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டு நமக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

சினிமா காட்சிகளை நினைவுப்படுத்தும் வகையில்..
தற்போது மதுபோதையில், பாம்பு எனத்தெரியாமல் கழுத்தில் சுற்றிக்கொண்டு, பின்னர் அதில் இருந்து தப்பிக்க கடும் போராட்டம் நடத்திய இந்த முதியவர் செயல், சினிமா காட்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசகள் காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications