மனைவி அமமுக வேட்பாளர்.. 'குட்டு' வாங்கிய 'என்கவுன்ட்டர்' ஸ்பெஷலிஸ்ட்.. இவருக்கா இந்த நிலை?
நெல்லை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் வெள்ளதுரை மனைவி போட்டியிடுவதால், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருபவர் வெள்ளத்துரை. சந்தனமர கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்றதில் முக்கிய பங்கு வகித்தவரான வெள்ளதுரை, 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்படுகிறார்.

அதுமட்டுமின்றி, வெள்ளதுரை, தனது மனைவி ராணி ரஞ்சிதம் பெயரில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதன்மூலம், மக்களுக்கு இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதனால், டிபார்ட்மெண்ட்டிலும், மக்கள் மத்தியிலும் இவருக்கென நல்ல பெயர் இருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், கூடுதல் ஆணையர் வெள்ளதுரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதியில், அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். மனைவி போட்டியிடும் தொகுதியில் வெள்ளதுரை பணியாற்றுவதால், இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.