திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1 ஓட்டு வித்தியாசத்தில் கன்னியம்மாளை ஜெயித்த கடல்மணி - விஜய் ரசிகரும் 1 ஓட்டில் வெற்றி

திருச்சியில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர் ஆனார். காந்தி நகர் 1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார

Google Oneindia Tamil News

திருச்சி: சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில் கடல்மணி 424 வாக்குகள் பெற்று ஊராட்சி மன்ற தலைவர் ஆனார். காஞ்சிபுரம் மாவட்டம் கருப்படித்தட்டை காந்தி நகர் 1-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

Trichi: Kadalmani, who won by a margin of 1 vote, became the panchayat president

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஸ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி் வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஸ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவானது.

இதில் கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கடல்மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் பூவாளூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான பி. குணசேகரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய கடல்மணி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பேன் என்றார். அரசின் சலுகைகள் கிராமத்திற்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை கிடைக்கப்பெற்று அந்த பணியை செவ்வனே செய்வேன் என்றும் தெரிவித்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இதே போல காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் M.பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேட்டுப்பாளையம், பெள்ளாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் வாக்கு எண்ணிக்கையில் ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் 4 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் செல்லாத ஓட்டுக்களை மீண்டும் சரிபார்க்க சொல்லி திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். வாக்கு என்னும் மையத்திற்குள் செல்ல முயன்ற திமுக நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் நன்னிலத்தில் விசலூர் 5வது ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ராஜசேகரன் வெற்றிபெற்றுள்ளார். நன்னிலம் 3வது ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் சங்கர் வெற்றிபெற்றுள்ளார். பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தலில் சுபஸ்ரீ வெற்றிபெற்றுள்ளார்.

திருவாரூர் ஆலங்காடு 6வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கலையரசன் வெற்றிபெற்றுள்ளார். மாங்குடி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் மைதிலி வெற்றி பெற்றுள்ளார். வங்க நகர் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார்.

பெரம்பலுர் வாலிகண்டபுரம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் உதயமன்னன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். பிரம்மதேசம் வார்டு உறுப்பினர் தேர்தலில் சந்தியா மற்றும் சு.ஆடுதுறையில் பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் கணவாய்பட்டி 4வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியப்பன் வெற்றி பெற்றுள்ளார். வத்தலக்குண்டு செக்காப்பட்டி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாரதி வெற்றிபெற்றுள்ளார்.

140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 16 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. 1,381 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக 45 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வெற்றி நிலவரங்கள் இன்று மாலைக்குள் தெரியவரும்.

English summary
Kadalmani has won the by-election for the post of Sirumarudur Panchayat President by a margin of one vote. Kanniyammal got 423 votes while Kadalmani got 424 votes and became the Panchayat President.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X