அட பாவமே.. பனியில் சிக்கி உயிரோடு உறைந்துபோன மான்.. குளிரில் நடுங்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுவதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதற்கு விலங்குகளும் விலக்கில்லை என்று சொல்லும் அளவுக்கு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த மான் ஒன்று பனிமூட்டத்தில் சிக்கி அப்படியே உறைந்து போயுள்ளது. வாய் மற்றும் தலைப்பகுதி முழுவதும் அசைக்க முடியாத அளவுக்கு பனிக்கட்டியாக மாறியது.
அமெரிக்காவில் குளிர் கால புயல் இதுவரை இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க பகுதிகளிலும் கனடாவின் பல இடங்களிலும் கடுமையான குளிர் சூழல் நிலவுகிறது.

மைனஸ் 40 டிகிரி வரை வெப்ப நிலை
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதாவது ஒரு தலைமுறை காணாத வகையில் வீசுகிறது. செவ்வாய் கிரகத்தில் காணப்படும் குளிர்ச்சிக்கு நிகர் என்று சொல்லும் அளவுக்கு மைனஸ் 40 டிகிரி வரை வெப்ப நிலை இருப்பதால் அங்கு குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. வட அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால் மின் தடுப்பாடு ஏற்பட்ட பல லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

தாங்க முடியாத குளிரால்..
கடுமையான பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களும் தவித்து வருகின்றன. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 60 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். கடுமையான பனி மற்றும் குளிரால் எங்கு பார்த்தாலும் பனிப் படலமாகத்தான் காட்சி அளிக்கின்றன இப்படி குளிரின் துயரம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. தாங்க முடியாத குளிரால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். விலங்குகளின் நிலையோ சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு குளிரால் படாத பாடு படுகின்றன.

பனிக்கட்டியால் உறைந்து போன மான்
குளிரால் விலங்குகள் எந்த அளவுக்கு அவஸ்தை படுகின்றன என்பதை கண்முன்னே காட்டும் வகையில் ஒரு படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. கடுமையான பனிப்புயலால் மான் ஒன்று வாய் மற்றும் முகத்தின் பாதிப்பகுதிகள் அப்படியே பனிக்கட்டிகளுடன் உறைந்து காணப்படும் ஒரு பதிவு ஒன்று பரவி வருகிறது. இந்த காட்சியை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த காட்சி எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.

எப்படி சிக்கிக் கொண்டது?
பனிக்கட்டியுடன் உறைந்து அவஸ்தை படும் அந்த மானை மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்த இருவர் மீட்டுள்ளனர். பனிக்கட்டிகளுக்கு கீழே தனது இரையை தேட முயற்சித்த போது இந்த மான் உறைபனியில் சிக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இது தொடர்பான டீடியோ ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனாலும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை. அதேவேளையில் பனிக்கட்டிகளுக்குள் மானின் முகம் எப்படி சிக்கிக் கொண்டது என்பது குறித்தும் தெளிவாக தெரியவில்லை.

பனிப்புயலுக்கு விலங்குகளும் பாதிப்பு
மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்த இருவர் மானை நெருங்கியதும் பனிக்கட்டிகளில் சிக்கியிருந்த மான் அச்சத்தில் அங்கிருந்து ஓடுகிறது. எனினும், மானை பிடித்து அதன் முகப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகளை அந்த இருவரும் அகற்றி விடுகின்றனர். இதனால், நிம்மதி பெருமூச்சு விட்ட படி அந்த மான் துள்ளிக்குதித்து ஓடுகிறது. ரெட்டிட் சமூக வலைத்தளத்தில், பலரும் இந்த மானின் பரிதாப நிலை குறித்தும் அதற்கு உதவி செய்த இருவரையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், மனிதன் மட்டும் இல்லை.. விலங்குகளும் கடுமையான பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications