'நான் யாரையும் நம்ப மாட்டேன்.. ஆப்கன் விவகாரத்தில் நான் செய்ததே சரியானது..' அடம்பிடிக்கும் பைடன்
வாஷிங்டன்: ஆப்கனில் தாலிபான்கள் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பைடன், தான் ஒருபோதும் யாரையும் முழுவதுமாக நம்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசைத் தாலிபான்கள் கழித்த பின்னரும்கூட, இன்னும் அங்கு அமைதி திரும்பவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் தாலிபான்களால் ஆப்கனில் ஆட்சி அமைக்க முடியவில்லை.
அதேபோல ஆப்கனை ஒட்டுமொத்தமாகத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், காபூல் விமான நிலையம் இன்னும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அங்குள்ள அமெரிக்கர்களையும் இதர நட்பு நாட்டினரையும் வெளியேற்றும் பணிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

அதிபர் பைடன்
இந்த நேரத்தில் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டது மிக மிகத் தவறான முடிவு என அதிபர் பைடனை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்ப பைடன் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாகப் பொதுமக்களிடையே அவருக்கான ஆதரவு 50% கீழ் குறைந்துள்ளது. இருப்பினும் கூட, தான் எடுத்தது சரியானதொரு முடிவு என்றே அதிபர் பைடன் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.

உதவி தேவை
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், "ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தாலிபான்கள் நல்லதொரு ஆட்சியை வழங்க வேண்டும் என முயன்றால், அவர்களுக்குப் பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் உதவி தேவைப்படும். ஆப்கன் மக்களுக்கு நல்லாட்சி தருவோம் எனத் தாலிபான்கள் கூறுகின்றனர். உண்மையில் தருவார்களா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்றார்.

நம்ப மாட்டேன்
மேலும், தாலிபான்களை நம்புகிறீர்களா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அதிபர் பைடன், "நான் யாரையும் நம்ப மாட்டேன். தாலிபான்கள் அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க வேண்டும். 100 ஆண்டுகளாக எந்த ஒரு அமைப்பாலும் ஆப்கானிஸ்தானின் மக்களை ஒன்றிணைத்து நல்லாட்சி வழங்க முடியவில்லை. அதைத் தாலிபான்கள் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர். அதைச் செய்ய, சர்வதேச பொருளாதார உதவி, வர்த்தக கூட்டு முயற்சி ஆகியவற்றில் உதவி தேவைப்படும்.

நடவடிக்கை இல்லை
தாலிபான் ஆட்சியை மற்ற நாடுகள் அங்கீகரிக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். சர்வதேச நாடுகளுடன் தொடரும் ராஜதந்திர உறவை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை எனத் தாலிபான்கள் உலக நாடுகளிடம் தெரிவித்துள்ளனர். எங்களிடமும் அதையே தான் கூறியுள்ளனர். தற்போது வரை அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் தாலிபான்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

காலம் பதில் சொல்லும்
ஆப்கனில் தாலிபான்கள் இந்தளவு பலமாக இருக்கும்போது அமெரிக்கப் படைகளை வெளியேற உத்தரவிட்டதே தவறு எனப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அது குறித்து பைடன் கூறுகையில், "இப்போது எனது முடிவை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஆனால் ஆப்கன் விவகாரத்தில் நான் இப்போது எடுத்துள்ள முடிவு தான் மிகச் சரியான ஒன்று என்பதை வரலாறு உங்களுக்குக் கூறும்" என்று அவர் கூறினார். மேலும், ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை வெளியே கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காபூலை சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்கப் படைகள் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications