உண்மையிலே இவருக்கு ஆயுள் கெட்டிதான்! 720 டிகிரி செல்சியஸ் தொட்டியில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம்
வாஷிங்டன்: அலுமினிய தொழிற்சாலையில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்குவதற்காக சென்ற எலக்ட்ரீஷியன் ஒருவர் அங்குள்ள 720 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட தொட்டிக்குள் விழுந்து உயிர் தப்பியுள்ள சம்பவம் ஸ்விட்சர்லாந்தில் நடந்துள்ளது.
நீரின் கொதிநிலையான 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையே மனித உடலால் தாங்க முடியாது.
ஏன் வெயில் காலத்தில் சூரியனில் இருந்து விழும் வெப்பம் கூட மனிதனுக்கு கடும் களைப்பை ஏற்படுத்தும்.

அலுமினிய தொட்டியில் விழுந்த நபர்
100 டிகிரி செல்சியஸ் போன்ற அதீத வெப்பத்தை எல்லாம் மனிதனால் தாங்கவே முடியாது என்பதே எதார்த்த உண்மை. ஆனால் மெடிக்கல் மிராகிள் என்பது போல சுவிட்சர்லாந்தில் 720 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருந்த அலுமினிய தொட்டி ஒன்றில் தவறி விழுந்த நபர் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது. இந்த சம்பவம் பற்றி சுவிட்சர்லாந்து போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது:-

25 வயது இளைஞர்
சுவிட்சர்லாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்து இருக்கும் செயிண்ட் கல்லேன் என்ற நகரத்தில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் உலை ஒன்றில் பழுது ஏற்பட்டது. இதனால், பழுதை நீக்குவதற்காக இரண்டு எலக்ட்ரிஷியன்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 25-வயது மதிக்கத்தக்க இளைஞரான எலக்ட்ரிஷியன் உலையின் மேல் அமர்ந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

தொட்டிக்குள் விழுந்த நபர்
அப்போது எதிர்பாராத விதமாக அந்த உலையின் திறந்த பகுதி வழியாக உள்ளே தவறி விழுந்து விட்டார். 720 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட அலுமினியங்கள் நிறைந்த அந்த தொட்டிக்குள் அந்த இளைஞர் விழுந்ததும் ஒரு நிமிடம் அங்கு இருந்த ஊழியர்கள் பதறிப்போகினர். அவசர அவசரமாக அந்த நபரை மீட்கும் பணி நடைபெற்றது. இறுதியில் அதீத வெப்பத்தால் ஏற்பட்ட காயங்களுடன் அந்த இளைஞர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டார்.

முழுமையாக குணம் அடைந்து விடுவார்
720 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருந்த அந்த தொட்டிக்குள் விழுந்த இளைஞர் உடல் உருக்குலைந்து இறந்து விடுவார் என்று பலரும் அஞ்சிய நிலையில், உயிருடன் மீட்கப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. உடனடியாக அவசர சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான காயங்கள் இருந்தாலும் முழுமையாக குணம் அடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றன்றனராம்.

தீக்காயங்கள் உருகிய அலுமினியத்தால்தான்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உலோகங்களால் அதிகம் ஏற்படும் இதுபோன்ற தீக்காயங்கள் உருகிய அலுமினியத்தால்தான் ஏற்படுவதாக 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான இத்தகைய காயங்களுக்கு உருகிய அலுமினியங்களே காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தோராயமாக 660 டிகிரி செல்சியசிஸ் வெப்பம் அலுமினியங்கள் உருக தேவைப்படுகின்றன.












Click it and Unblock the Notifications