For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அல்சூர் முருகனுக்கு கும்பாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

Ulsoor Muruganஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில்மஹாகும்பாபிஷேகம்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் ஹலபுரி எனப்படும் மாண்டவ்ய மகரிஷி ஷேத்ரமான அல்சூரில் பழைய மெட்ராஸ் சாலையில்அமைந்திருப்பது சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 29-01-2001 திங்கள் கிழமை காலை 9.45 மணியளவில் நடைபெறஇருக்கிறது.

இந்த கோவில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் மைசூர் மகாராஜாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டதற்கான ஒருபக்தி மயமான கதைகூறப்பட்டு வருகிறது.

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மைசூர் மகாராஜா இந்த கோவில் அமைந்திருந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இந்தகோவில் அங்கு கிடையாது. மிகப் பெரிய புற்று ஒன்றுதான் இருந்தது. அந்த புற்றுக்கு மக்கள் பால் ஊற்றி சுற்றி வந்து பய பக்தியுடன் வணங்கி வந்தனர்.

இதைக் கண்ட மகாராஜா புற்றின் அருகே சென்று பார்த்தார். பாம்பு புற்று?. பாம்பென்றால் முருகனின் அம்சம். அங்கே முருகனை பிரார்த்தனை செய்தார்.

முருகா நான் கண் பார்வை சரியில்லாத என் பெரியப்பாவை காண செல்கிறேன். நான் அவரை காண செல்லும் போது அவருக்கு கண் பார்வை கிடைத்துவிட்டால் இந்த இடத்தில் உனக்கு கோவில் கட்டுகிறேன் என வேண்டிக் கொண்டார்.

மைசூர் அரண்மனை சென்று அவர் பெரியப்பாவை பார்த்தார். என்ன அதிசயம்!. அவரது பெரியப்பாவின் கண் பிரச்சனை தீர்ந்து பிரகாசமான கண்ணொளியுடன்இருந்தார். சிலிர்த்துப் போனார் மைசூர் மகாராஜா உடனே திவானை அழைத்து கட்டிய கோவில் தான் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிதிருக்கோயில்.

இன்னொரு கதை ...

இந்த கோவிலை பற்றி மற்றொரு கதையும் கூறப்படுகிறது.

Thiruthani Muruganபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலா மரங்கள் அடர்ந்த வனமாக இருந்த இந்த இடத்தில் மாண்டவ்ய முனிவர் தவமிருந்தார்.

ஒரு நாள் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது முருகன் கனவில் தோன்றி குன்றாய் விளங்கும் இந்த வனத்தில் திருக்கோயில் கொள்ள விரும்புகிறேன்.சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் திருத்தணியில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிப்பது போல் இங்கும் காட்சியளிப்பேன்.

அது போல் ஓர் உருவம் பூமிக்கு அடியில் இருக்கிறது. அந்த விக்ரகத்தை எடுத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி மறைந்தான்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். குன்றாய் இருந்த இங்கு கோவில் கொண்டதும் சரிதானே!

கோவில் வந்த கதையை அறிந்து கொண்டோம். இனி கோவிலை வலம் வருவோம்.

இந்த கோவிலுக்கு முன் முருகனின் தமையன், யானை முகத்தோன் ஆதி விநாயகர் கோவிலும் உள்ளது. அவரை வணங்கி சுப்ரமணியனை தரிசிக்க செல்வோம்.

சுப்ரமணியன் கோவிலில் நுழைந்ததும் நாம் காண்பது கோபுரத்தில் ஆறுமுகன் நம்மை வரவேற்கும் அருட் கோலம்.

எல்லா சிவஸ்தலங்களிலும் விஷ்ணு, கோவிலின் பின்புறம் இருப்பார். இந்த கோயில் முகப்பு கோபுரத்திலேயே நுழைந்தவுடன் விஷ்ணு இருப்பதை காணலாம்.

கோவிலை சுற்றி உள்ளே சென்றால் முருகன் சன்னிதிக்கு முன் நம் வலப்புறம் நவகிரகங்களின் விக்கிரகங்கள் அந்தந்த கிரகங்களுக்குரிய வண்ண வஸ்திரங்கள்அணிந்து அருள் பாலிக்கின்றன.

சனிப் பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு , கேது பெயர்ச்சி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இடப்பக்கம் விநாயகர் சன்னிதி. இவரை பிரார்த்தித்துஉளளே செல்கிறோம். அருள் மிகு சுப்ரமணிய சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.இந்த முருகன் திருத்தணி முருகன் போல் இருப்பது மற்றொருசிறப்பு அம்சமாகும்.

முருகனின் வலது திருக்கரத்தில் வேலுடனும், வஜ்ராயுதத்துடனும், இடது திருக்கரத்தில் சேவற்கொடியுடனும் அருள் பாலிக்கிறார். சன்னிதி முழுவதும் பளிங்குகற்களால் இழைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள். உள்பிரகாரத்தில், மூலஸ்தானத்தின் நுழைவு வாயிலில் துவார பாலகர்களை காண்கிறோம். சன்னிதியை வலம்வரும்போது, நம் இடப்பக்கம் நவ வீரர்களை காண்கிறோம். இவர்கள் சூர சம்ஹாரத்தின் போது முருகனோடு போரிட்டனர் என கூறப்படுகிறது.

Swamimalai Muruganஅடுத்தபடியாக வடக்கு நோக்கி இருக்கும் உத்ர கணபதியை காண்கிறோம். மேலும் நாம் சன்னதியை வலம் வரும் போது கிழக்கு நோக்கி இருக்கும்வள்ளிக்கான தனி சன்னிதியையும், அதையடுத்து அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியையும், அதையடுத்து துர்காபரமேஸ்வரியின் சன்னிதியையும் காண்கிறோம்.இந்ததுர்கை சன்னிதியில் ராகுகால பூஜை நடைபெறுவது விசேஷமாகும்.

இங்கு வாயுகணபதி சன்னிதியை காண்கிறோம்.இதையடுத்து தேவசேனா (தெய்வானை) வின் சன்னிதியை காண்கிறோம்.

அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியும் கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டுள்ளது. மற்ற சன்னிதிகள் பளிங்குக் கல்லின் பளபளப்பில் ஜொலிக்கின்றன.

மேலும் சன்னிதிகளில் சண்டிகேஸ்வரர் சன்னிதியைக் காண்கிறோம். உற்சவ மூர்த்தி சண்முக ஸ்வாமி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சன்னிதிக்கு நேர் நுழைவு வாயிலும் இடபக்கம் ஒரு நுழைவு வாயிலும் உள்ளது. இப்போது திருவிழா நாட்களில் பக்தர்கள் வருவதற்கு ஒரு வாயிலும்செல்வதற்கு ஒரு வாயிலுமாக ஏற்பாடு செய்ய மேலும் ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் மணி மண்டபம் கட்டப்பட்டு மணி ஒன்றும் கட்டப்பட இருக்கிறது.

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் இந்த கோவிலின் சுற்று கோபுரங்களில் அறுபடை வீடுதவிர 16 முருகனின் திருஉருவங்கள் சிலைகளாகவடிக்கப்பட்டுள்ளன. இவை எங்குமே காணக் கிடைக்காத காட்சி.இந்த காட்சியை கோவிலின் இரண்டாவது பிரகாரமான வெளி பிரகாரத்தில்காணலாம்.

மேலும், எல்லா முருகன் திருத்தலங்களிலும், முருகன் சன்னிதிக்கு எதிரே முருகனின் வாகனமான மயில்தான் காணப்படும். இந்த கோவிலின்வெளிப்பிரகாரத்தில் யானை காணப்படுகிறது.

வள்ளியை மணக்க முருகன் நடத்திய திருவிளையாடலில் யானைக்கு முக்கிய பங்கு உண்டு. யானையைக் கண்டு பயந்த வள்ளி, கிழவன் ரூபத்தில் இருந்த முருகனைஅணைத்துக் கொண்டாள். அப்போது எம் பெருமான் தன் திருக்கோலத்தை வெளிப்படுத்தினார். தன் மனதில் கணவனாக வரித்திருந்த முருகனைக் கண்டுமகிழ்ந்தாள் வள்ளி.

முருகன் வள்ளியை மணந்தார். யானையின் மூலம் வள்ளி திருமணம் நடந்ததால் இங்கு வெளி பிரகாரத்தில் யானை சிலை காணப்படுகிறது.

இந்த திருக்கோவிலுக்கு 1982-ம் வருடம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெறுகிறது.

இந்த கோவிலின் கிழக்கு கோபுரம் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்தகோவிலில் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட கல்யாண மண்டபத்துடன் 15 ஆண்டுகளுக்கு முன் மேலும் ஒரு மண்டபம் இணைத்து பெரிதாக கல்யாணமண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் சுவர்களில் அறுபடை வீடு முருகனின் திருக்கோலங்களை காணுகிறோம்.

இத்திருக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு இங்கு நடந்து வரும் பஜனைகள். இந்த கோவிலில் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முருக அகண்ட நாமபஜனை நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சம் அன்றைய தினம் 24 மணி நேரம் தொடர்ந்து பஜனை நடைபெறுவதாகும். ஓம் முருகா என்ற மந்திரம்விதம் விதமான ராகங்களில் 24 மணி நேரமும் ஜபிக்கப்படும்.

Thiruchendur Muruganஇந்த கோவிலின் பஜனைகளை அனந்த நாராயணனும், ராமமூர்த்தி குழுவினரும் 30 வருடங்களுக்கும் மேலாக செய்து, கோவிலில் பக்தி மணத்தை பரப்பிவருகிறார்கள்.

இக்கோவிலின் ஸ்தலவிருட்சம் பலா மரம்.

தைப்பூசம்

இந்த கோவிலின் சிறப்பு விழாக்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச திருவிழா 3 நாட்கள் நடைபெறும்.

தெப்பத் திருவிழா கோவிலில் இருக்கும் கல்யாணி புஷ்கரணியில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பெங்களூரில் இந்த கோவிலில் மட்டும்தான்தெப்பத் திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு நடக்கும் முக்கியத் திருவிழாக்கள்:

  • ஏபரல் - மே மாதங்களில் நடக்கும் தேர்த்திருவிழா

  • ஏப்ரல் மாதம் நடக்கும் பூப் பல்லக்கு உற்சவம்

  • ஆடி கிருத்திகை.(அன்றைய தினம் அன்ன தானமும் வழங்கப்படும்).

  • கார்த்திகை தீபத் திருவிழா

  • பங்குனி உத்திரம். (இந்த தினத்தன்று முருகனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெறும்.)

    இந்த கோவலில் சைவாகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.

    இந்த கோவிலின் பிரதான அர்ச்சகர்கள் சுந்தர தீட்சிதர், லட்சுமி நாராயண தீட்சிதர், சண்முக தீட்சிதர்,லோக நாத தீட்சிதர் ஆகியோர் ஆவர். பிரதானஅர்ச்கர்கள் ஆதி காலம் முதல் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதவி அர்ச்சகர் சுரேஷ் தீட்சிதர்ஆவார்.

    இந்த கோவிலில் ராஜகோபுரம், கல்யாண மண்டபமும் கட்டப்பட உள்ளது.வெள்ளி ரதம் செய்யும் உத்தேசமும் உள்ளது.

    இந்த கும்பாபிஷேகத் திருவிழா திருப்பணிகள் கர்நாடக அறநிலையத்துறை கமிஷனர் சீதாராம், விசேஷ மாவட்ட அதிகாரி நாகராஜ், துணை கமிஷனர்புட்டஸ்வாமி (பொருளாளர்), தலைவர் பிள்ளப்பா, செயலாளர் கோவிந்தராஜ், எக்சிகியூட்டிவ் ஆபீசர் கேசவ நாயக், மூர்த்தி(பாருபத்தேதாரர்), கமிட்டிஉறுப்பினர்கள், சந்திர சேகர் ஞானசாகரம், நந்தகோபால், ஜானகிராம ரெட்டி, கிருஷ்ணப்பா, நவராஜன், ஆனந்தகோபால், சூர்யநாராயண சிங், சுவாமிநாதன் ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பாக நடந்து செவ்வனே நிறைவு பெற்றுள்ளன.

    29-ம் தேதி கும்பாபிஷேகத்தை தரிசித்து அருட்கடலின் அளவிலா அருள் பெறுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X