For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கைஆழ்வாருக்கு தரிசனம்..திருநாங்கூரில் தங்க கருடவாகனத்தில் உலா வந்த 11 பெருமாள்கள்

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் தை அமாவாசைக்கு மறுநாளன்று நடைபெற்ற 11 கருட சேவை உற்சவத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. ஒரு கருட சேவை என்றாலே சிறப்பு அதுவும் 11 கருட வாகனங்களில் எழுந்தரும் 11 பெருமாளையும் காண இரண்டு கண்கள் போதாது.

ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார். அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள்.

Thirunagoor Divya Desam Eleven Garuda Sevai Festival on 22nd January 2023

சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது, திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து, பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார். அதனால் தான் இன்றும் திருநாங்கூரில் 11 பெருமாள் கோயில்களும், அவற்றுக்கு இணையாக 11 சிவன் கோயில்களும் உள்ளன.

திருமங்கையாழ்வார் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கலியன் ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் திருமங்கை நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார்.

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவ சமயத்தை அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் உணவு இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் இழந்தார்.

கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் திருடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் பகல்பத்து - ராப்பத்து உற்வசவங்களை திருமங்கையாழ்வார் நடத்தி வைத்தார். அது நிறைவடைந்த பின், தைமாதம் அமாவாசை அன்று திருநாங்கூரில் கோயில் கொண்டிருக்கும் பதினொரு பெருமாள்களையும் இனிய தமிழ்ப் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்வதற்காகத் திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு வருகிறார். அப்பாசுரங்களைப் பெறும் ஆர்வத்தில் பதினொரு பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் வந்து காட்சி கொடுத்து, ஆழ்வாரிடம் பாடல்களை ஏற்றுச் செல்கிறார்கள். இந்நிகழ்ச்சியை நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுவது தான் திருநாங்கூர் பதினொரு கருட சேவை.

ஒவ்வொரு வருடமும் இந்தப் பெருமாள்களைப் பாடத் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு நேரே வருவதாக ஐதீகம். இந்தக் கருட சேவைக்கு முந்தைய நாள் நள்ளிரவில், திருநாங்கூர் வயல் வெளிகளில் காற்றினால் நெற்பயிர்கள் சலசலவென ஓசையிடும். இந்த ஓசையைக் கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் நுழைந்துவிட்டதாக மக்கள் புரிந்து கொள்வார்கள். திருமங்கையாழ்வாரின் ஸ்பரிசம் பட்ட வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்படும் என்பது அவ்வூர் விவசாயிகளின் நம்பிக்கை.

இந்த ஆண்டு திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவம் மூன்று நாள் உற்சவமாக நடைபெற்றது. தை அமாவாசை அன்று திருமங்கை ஆழ்வாரின் திருமஞ்சனம், தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் பதினொரு கருட சேவை. அதற்கு மறுநாள் பெருமாள்களும் ஆழ்வாரும் தத்தம் திருக்கோயில்களுக்குத் திரும்புதல் என 3 நாட்கள் உற்சவம் நடைபெற்றது.

தை அமாவாசைக்கு மறுநாள் மணிமாடக் கோயிலில் எழுந்தருளியிந்த திருமங்கையாழ்வாரிடம் மங்களாசாசனம் பெற்றுக் கொள்வதற்காக, வைகுந்த விண்ணகரத்தின் வைகுந்தநாதப் பெருமாள், அரிமேய விண்ணகரத்தின் குடமாடு கூத்தர், திருத்தேவனார்தொகையின் மாதவப்பெருமாள், திருவண்புருடோத்தமத்தின் புருஷோத்தமப் பெருமாள், செம்பொன்செய்கோவிலின் செம்பொன் அரங்கர், திருத்தெற்றியம்பலத்தின் செங்கண்மால், திருமணிக்கூடத்தின் வரதராஜப் பெருமாள், திருக்காவளம்பாடியின் கோபாலகிருஷ்ணன், திருவெள்ளக்குளத்தின் அண்ணன் பெருமாள், திருப்பார்த்தன்பள்ளியின் தாமரையாள் கேள்வன் ஆகிய பத்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் நாங்கூர் மணிமாடக் கோயிலை நோக்கிப் பல்லக்குகளில் அலங்காரமாக எழுந்தருளினர். அவர்களுடன் மணிமாடக் கோவில் பெருமாளும் இணைந்து கொண்டார்.

ஒவ்வொரு பெருமாளும் வந்து ஆழ்வாருக்குக் காட்சியளிக்க, அந்தப் பெருமாளைத் தமது பாசுரங்களால் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார்.

அதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசத்துப் பெருமாள்களுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து தங்க கருடன் மீதேறி வந்து திருமங்கை ஆழ்வாருக்கு 11 பெருமாள்களும் காட்சி அளித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. ஹம்ச வாகனத்தில், குமுதவல்லி நாச்சியாரோடு திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி 11 பெருமாள்களையும் தரிசனம் செய்தார். இந்த காட்சியை விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து பதினோரு பெருமாள்களும் விசேஷ அலங்காரங்களோடு தங்கக் கருட வாகனங்களில் திருநாங்கூர் மணிமாடக் கோயிலில் இருந்து புறப்படுவார்கள்.

மணிமாடக் கோயிலிலிருந்து வரிசையாக வெளியே வரும் ஒவ்வொரு பெருமாளுக்கும் கோயில் வாசலில் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. கருட வாகனத்தில் வீதியுலா செல்லும் பெருமாள்களைப் பின்தொடர்ந்து, ஹம்ஸ வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் பயணம் செய்தார்.

இந்த 11 கருட சேவையைத் தரிசிக்கும் அடியார்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பதினோரு திவ்ய தேசங்களைத் தரிசித்த பலன் கிட்டும் என்பது பெரியோர்களின் வாக்கு. 11 கருட சேவை உற்சவம் நடைபெற்றபின் இன்று காலை, மணிமாடக் கோயிலிலிருந்து புறப்பட்டு அந்தந்தப் பெருமாள்கள் தத்தம் திருத்தலங்களுக்கு சென்றனர்.

ஆழ்வார், பெருமாள்களின் அழகைக் கண்டு தங்களுக்கும் திருநாங்கூர் செல்ல வேண்டும் என்று ஆவல் எழுகின்றதா?
அடுத்த தை அமாவாசை வரை காத்திருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

English summary
Thirunangur Garuda Sevai festival: Devotees thronged the Thirunangur Divyadesa Temple to witness the 11Golden Garuda Vakana Sevai Festival on day after Thai Amavasai on 22nd January 2023.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X