
ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் அவதரித்த திருச்சானூர் பத்மாவதி..ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள்
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயாரின் வீதியுலாவும், இரவு கருட சேவையும் நடைபெற்றன. பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 20ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ஆம் திருநாளான கஜ வாகன சேவையின் போது திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.
இதில், 6ஆம் நாளான நேற்று காலை வெண்ணெய் குடத்துடன் கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார்சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. இதில் ஜீயர் சுவாமிகள் குழுவினர், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கருடவாகன சேவை
கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். ஏழுமலையானின் வாகனம் கருடன். ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் 5ஆம் நாள் கருட சேவை நடைபெறும். இறைவனை சுமக்கும் கருடன் தாயாரையும் பிரம்மோற்சவ நாளில் சுமந்து அருள் பாலித்தார். கருட சேவையை முன்னிட்டு, நேற்று திருமலையில் இருந்து ஏழுமலையானின் தங்க பாதங்கள் திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பாதங்களுடன் கருட சேவை சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தங்க பாதங்கள் அணிந்த தயார்
திருச்சானூரில் உள்ள பசப்பு மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்ட தங்கப் பாதங்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க பத்மாவதி தாயார் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் பத்மாவதி தாயாருக்கு தங்கப்பாதங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

பத்மாவதி தாயார் அவதாரம்
வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன். மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.

அலர்மேல்மங்கை
தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள். தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

சுகங்களைத் தரும் தாயார்
பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல் மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏழுமலையானின் பிறந்தநாள் பரிசு
பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம்.

பஞ்சமி தீர்த்தவாரி
கார்த்திகை பிரம்மோற்சவ விழா, 28ஆம் தேதி பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சமி தீர்த்தத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, இந்த முறை பக்தர்களுக்கு சிறப்பு காம்பார்ட்மெண்டுகள் மற்றும் ஜெர்மன் ஷெட்டுகள் அமைத்துத்தரப்படும். கோவிலில் இருந்து திருச்சானூர் செல்லும் வழித்தடங்களில் தேவையான சாலைகளை சீரமைத்துக் கொள்ளலாம். போக்குவரத்துப் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராட செல்லும்போது, அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பஞ்சமி தீர்த்தம் அன்று 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.