பம்பை ஆற்றில் புகுந்த "பாக்டீரியா".. சபரிமலை பக்தர்களுக்கு ஆபத்தா? கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவின் பம்பை ஆற்றில் அபாயகரமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த பாக்டீரியா அதிகம் இருக்கும் நீர் நிலைகளில் குளித்தால் மலேரியா, டைபாய்டு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய தற்போது பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இவர்கள் பெரு வழி எனப்படும் எரிமேலி வன பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பாதையானது பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை, உடும்பாறை, முக்குழி, கரிவலம் தோடு, கரிமலை, பெரிய யானை வட்டம், சிறிய யானை வட்டம் ஆகிய இடங்கள் வழியாக பம்பை ஆற்றுக்கு வந்து சேருகிறது.
இங்கிருந்து மட்டுமல்லாது, கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளும் இடம்தான் பம்மை ஆற்றங்கரை. இந்த நதிக்கரையில் நீராடிய பிறகுதான் பக்தர்கள் சபரிமலையில் ஏறுகின்றனர். இங்கிருந்து சபரிமலை 5 மைல் தொலைவில் இருக்கும். இந்த ஆற்றில் ராமன் நீராடியாதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்த ஆற்றில் பக்தர்கள் நீராடிவிட்டுதான் சபரிமலையை நோக்கி நகர்வார்கள்.

ஆய்வு
மட்டுமல்லாது இங்கு நீராடுவதன் மூலம் தங்கள் களைப்பையும் போக்கிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது இந்த ஆற்றில் ஆபத்தான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப்பகுதியில் தொடங்கும் இந்த ஆறு பத்தினம்திட்டா, ஆழப்புழா வழியாக பாய்ந்தோடி வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் வரும் காலகட்டங்களில் இந்த ஆற்றின் நிலைமை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்டீரியா
அதாவது, இந்த ஆற்றில் 'கோலிபார்ம் பாக்டீரியாக்களின்' எண்ணிக்கை அதிக அளவு இருக்கிறது. நீர் நிலைகளில் இந்த பாக்டீரியாக்கள் அதிக அளவு இருக்கும். இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 500க்கும் மேல் இருந்தால் அந்த நீரை குளிக்க உபயோகப்படுத்தக் கூடாது. ஆனால் தற்போது பம்பையில் இந்த பாக்டீரியாக்கள் 6,000க்கும் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் குளித்தால் மலேரியா, டைபாய்டு, கடுமையான வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும். எனவே சபரிமலை நோக்கி பக்தர்கள் பணயத்தை தொடர முடியாது.

அறிவுறுத்தல்
இதற்கு பிரதான காரணம் ரசாயன பயன்பாடுதான். குளிக்க வருபவர்கள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. மட்டுமல்லாது குளித்து முடித்தபின்னர் டவல்களை நீர் நிலையிலேயே விட்டு விட்டு செல்வது போன்றவற்றால் நீர் கடுமையாக மாசடைகிறது. எனவே பக்தர் இதுபோன்று செய்ய வேண்டாம் என்றும் தங்கள் உடைமைகளை எக்காரணத்தை கொண்டும் நீரில் விட்டு செல்ல வேண்டாம் எனவும் கோயில் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாக்டீரியாக்களை அகற்ற குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நடை அடைப்பு
வரும் 20ம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அப்போது வரை நீரில் பாக்டீரியாவின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 1 மணி நேரம் கூடுதலாக தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்கள் சுமார் 8-10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 20ம் தேதியன்று பந்தளம் ராஜ குடும்பத்தினரின் பிரதி நிதிகளின் தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications