கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு கொரோனா...நலமுடன் உள்ளதாக தகவல்
திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது உடல்ரீதியாக பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல் 6 ம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பிணராயி விஜயனின் மகள் வீணாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கேரள முதல்வருக்கு கொரோனா
இவரைத் தொடர்ந்து பிணராயி விஜயனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிணராயி விஜயன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கேராளாவில் அதிகரிக்கும் கொரோனா
கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவிற்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 1955 பேர் டிஸ்சார்ஜ்
இதுவரை கேரளாவில் 11,44,594 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 4710 ஐ கடந்துள்ளது.
அதே சமயம் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 1955 பேர் மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தனிமை வார்டுகளில் 4928 பேர்
இதுவரை மொத்தமாக 11,08,078 பேர் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 31,493 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 1,52,136 பேர் மருத்துவ கண்காணிப்பிலும், 4928 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.