கேரளாவில் விபரீதம்.. வீட்டுக்கு முன் மெஸ்ஸிக்கு கட் அவுட்.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கால் பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் மீதான அதீத அன்பால், அவருக்கு வீட்டின் முன் கட் அவுட் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 பிபா உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால், உலக அளவில் இது ஒரு திருவிழாவை போல கொண்டாடப்பட்டு வருகிறது.
எப்போதும் கிரிக்கெட் மீது தீராக்காதல் கொண்ட இந்தியர்கள் கூட, இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகினறனர்.
இமாசல பிரதேசத்தில் பாஜக கஷ்டப்பட்டுதான் ஆட்சியை தக்க வைக்கும்..டஃப் கொடுக்கும் காங்கிரஸ்?

உணர்ச்சிமிக்க ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்களை ஒப்பிடும் போது, கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கூட, தோற்றுப்போன பல நாடுகளின் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை பார்க்க முடியும். இந்தியாவிலும் கேரளா, மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உணர்ச்சிமிகுந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம்தான் அவரின் உயிரையே எடுத்துள்ளது.

மெஸ்ஸியின் தீவிர ரசிகர்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இள்ளிக்கால் பகுதியைச் சேரந்தவர் அமீன். கால்பந்தாட்டத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள அவர், அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் உயிர் ரசிகர் எனக் கூறப்படுகிறது. தான் போடும் டீஷர்ட்டுகள், பைக் ஸ்டிக்கர்கள் என அனைத்திலும் மெஸ்ஸி படத்தை அமீன் வைத்திருந்தார். அந்த அளவுக்கு தீவிர ரசிகராக அவர் இருந்திருக்கிறார்.

கட் அவுட்
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மெஸ்ஸிக்கு பெரிய அளவில் கட் அவுட்டை அமீனும், அவரது நண்பர்களும் தயார் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த கட் அவுட்டை அமீன் தனது வீட்டுக்கு முன்பு வைக்க முயன்றார். இதற்காக 3 மாடி உயரத்தில் கயிறு கட்டி அவர்கள் கட் அவுட்டை கட்டிக் கொண்டிருந்தனர். அமீன் மாடியில் இருந்து அந்த கட் அவுட்டை கீழே சரியாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி
அப்போது வேகமாக காற்று அடிக்கவே, மெஸ்ஸி கட் அவுட் லேசாக சரிய தொடங்கியது. இதையடுத்து, அந்த கட் அவுட் அங்கிருந்த மின்சார கம்பியின் மீது சரிந்ததில் அந்தக் கம்பி அறுந்து அமீன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது விழுந்தது. இதில் அவர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மற்ற இருவரும் உயிர் பிழைக்க, சிகிச்சை பலனின்றி அமீன் உயிரிழந்தார்.