• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரச்சனைகளை 'அரசியலாக்குவது' பற்றி அசூயை ஏனோ? - அ.குமரேசன்

|

பொங்கல் வெளியீடாக வந்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் வரவேற்கவும் தள்ளுபடி செய்யவும் பல இடங்கள் இருக்கின்றன.இந்தக் கட்டுரையின் நோக்கம் திரைப்படத் திறனாய்வு அல்ல. படத்தில் எனக்குப் பிடித்த இடமொன்று உண்டு.கல்லூரியின் மாணவர் பேரவைக்குத் தேர்தல் நடத்தலாமா, கூடாதா என்ற விவாதம் நடக்கும். மற்றவர்கள் தேர்தல் நடத்தினால் கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் புகுந்துவிடும், மாணவர்கள் அணிகளாகப் பிரிந்து விடுவார்கள், மோதல் ஏற்படும் என்ற கோணங்களில் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். கதாநாயகனான ஆசிரியர் ஜே.டீ. மாணவர்களிடையே அரசியல் புரிதலுக்கான தொடக்கம் ஏற்படும், வாக்குரிமையைப் பயன்படுத்துகிற ஜனநாயகப் பொறுப்பு உருவாகும், அரசியல் போக்குகளை அலசுகிற பயிற்சி கிடைக்கும் என்ற கோணங்களில் தேர்தலை ஆதரிப்பார். பேரவைத் தேர்தல் தவிர்க்கப்படும் கல்லூரிகளில் அதை முறைப்படி நடத்துவதற்குப் பல மாணவர் அமைப்புகள் வலியுறுத்துவதில் இந்த அடிப்படைகளும் உள்ளன.

மசாலா, வணிகம், நட்சத்திரச் சந்தை என்ற விமர்சனங்களிலிருந்து விலக்களித்துவிட முடியாது என்றாலும், லட்சக்கணக்கணக்கான குடும்பங்களைச் சென்றடைகிற இத்தகைய ஒரு 'மாஸ்' படத்தில் அரசியல் பற்றிய இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான கருத்துகள் இடம் பெறுவது வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திரைப்படங்களில் அரசியல் பற்றிய அசூயைகளை வளர்க்கும் எதிர்மறைச் சித்தரிப்புகளே இடம் பெறுகிற பின்னணியில் இந்த மாறுதல் குறிப்பிடத்தக்கது.

Writer Kumaresan article on politicisation of Issues

அந்தச் சொல்லாடல்

அரசியல் பற்றிய அசூயைகளைச் சமூகவெளியில் வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல்தான் "அரசியலாக்குவது". அடிக்கடி இந்தச் சொல்லாடலைக் கேட்கலாம். அரசியலில் ஈடுபடாதவர்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளே கூட இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக, அரசின் ஒரு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன என்றால் உடனே ஆளுங்கட்சியினர், "பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள்," என்று சொல்வார்கள். சாக்கடைக் குழியில் நச்சுவாயுவுக்கு பலியாவது முதல் சாதி ஆணவத்தில் அரிவாளுக்குப் பலியிடப்படுவது வரையில், நிலத்தின் வளம் அழிக்கப்படுவது முதல் காற்றின் தூய்மை கெடுக்கப்படுவது வரையில் எந்தவொரு ஒரு பிரச்சினையிலும் அரசின் நடவடிக்கையோ, நடவடிக்கையின்மையோவிமர்சிக்கப்படுகிறபோது இதே சொற்கள்தான் பதிலாகச் சொல்லப்படும். சில நேரங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தவறான செயல்களும் எதிர்ப்புக்கு உள்ளாகும், அப்போது அவர்கள் தரப்பிலிருந்தும் முதலில் இந்தச் சொற்கள்தான் வரும்.ஊடக விவாதங்களில் இந்தச் சொல்லாடலைக் கேட்கலாம். பத்திரிகைகளில் எழுதுகிற அரசியல் விமர்சகர்கள், போராட்டக் களத்திற்கே வராத நடுத்தர வர்க்கத்தினர்... சற்றே கண்களை

மூடி யோசித்தால் நமக்குத் தெரிந்த பல்வேறு துறையினரும் இப்படிச் சொல்லியிருப்பது நினைவுக்கு வரும். ஏன், நாமே கூட பேசியிருப்போம் - "அரசியல் செய்கிறார்கள்," என்று.

கசப்பான காட்சிகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள், கூச்சமே இல்லாத மோசடிகள், நடைமுறையில் அங்கீகரிக்கப்படுகிற ஊழல்கள், கண்ணுக்கு முன்பாகவே குவிக்கப்படுகிற செல்வங்கள், கைவிடப்பட்டதால் விளையும் துயரங்கள்... இப்படியான அனுபவங்களிலிருந்து ஏற்பட்ட வெறுப்புதான் பலரையும் இவ்வாறு அரசியல்வாதிகளை ஒதுக்க வைக்கிறது. அரசியலிலிருந்து ஒதுங்க வைக்கிறது.

அந்தப் பலரும் புரிந்துகொள்ளத் தவறுகிற ஓர் உண்மை:அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்குவதுதான் அரசியலும் பல அரசியல்வாதிகளும் ஒழுங்காக இல்லாததற்குக் காரணம். ஏன் ஒதுங்குகிறார்கள் என்று கேட்டால், சொந்தப் பணிகள், சொந்தக் குடும்பம், நேரமின்மை போன்ற காரணங்களைச் சொல்வார்கள். எல்லாக் கட்சிகளும் பொய் சொல்கின்றன, எல்லா அரசியல்வாதிகளும் சூது செய்கிறார்கள், அவர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்று சொல்வார்கள்.கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்ட வேண்டிய தொழிலாக அரசியல் மாறிவிட்டது, நம்மால் அது முடியாது என்று சொல்வார்கள்.

Writer Kumaresan article on politicisation of Issues

இந்த நிலைமைகள் மறுக்க முடியாதவைதான். அரசியல் பங்கேற்பு ஒரு சமூகக் கடமை, ஜனநாயக உரிமை என்ற ஆக்கப்பூர்வமான கருத்து செல்வாக்குப் பெறுவதை அதிகாரப் போட்டிகளும், அவற்றுக்குப் பின்புலமாக இருக்கிற சுரண்டல் வேட்டைகளும் தடுத்துவந்துள்ளன. நாளைய வாழ்க்கை பற்றிய நம்பிக்கைச் சூழலைத் தழைக்கவிடாததால், இன்றைய வாய்ப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்புணர்வு மேலோங்கியிருக்கிறது.

ஆனாலும், உள்நுழைந்து புலனாய்வு செய்தால் அடிப்படையான வேறொரு காரணம் இருப்பது தெரியவரும்.சுயநலம்தான் அந்தக் காரணம். தன் வாழ்வு, தன் வீடு, தன் சொந்தங்கள் நன்றாக இருந்தால் போதும், அரசியலில் இறங்கினால் வசதிகளை இழக்க வேண்டிவரும், பிரச்சினைகளில் தலையிட வேண்டியிருக்கும், தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணம் ஊறிப்போயிருக்கும். ஆகவே அரசியல்வாதிகளை ஏதோ இதற்கென்றே படைக்கப்பட்ட தனிப்பிறவிகள் என்று பார்க்கிறார்கள், அவர்கள் பொறுப்பாக, நேர்மையாக, அறிவாளிகளாக, துணிவானவர்களாக, நாயகர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சரி, சில அரசியல்வாதிகள் மேற்படி பொறுப்பு, நேர்மை, அறிவு, துணிவு, தலைமைப்பண்பு ஆகிய தகுதிகளோடு இருக்கிறார்களே, அவர்களை ஏன் ஆதரிப்பதில்லை? இதைக் கேட்டால், "அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்," என்பார்கள்! நீங்களெல்லாம் ஆதரித்தால்தானே வெற்றிபெறுவார்கள் என்று கேட்டால், "அவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள்," என்பார்கள்!பதவிகளைத் தேடாத, பணம் ஈட்டாத, சாதி பலத்தை நாடாத, மத நம்பிக்கைகளைத் தீட்டாத அரசியலாளர்களுக்கு ஒரு அடையாளப் பெயரே இருக்கிறது - "பிழைக்கத் தெரியாதவர்கள்."

நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறவர்கள்

பிழைக்கத் தெரிந்தவர்களைப் பிழைத்துக்கொண்டே இருக்கவிட்டு, பிழைக்கத் தெரியாதவர்களைக் கைவிட்டு வசதியாக ஒதுங்கிக்கொள்கிற பொதுப்புத்தி பராமரிக்கப்பட்டு வந்திருப்பதில் "அரசியலாக்குகிறார்கள்" என்ற சொல்லாடலுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது.அரசியல்வாதிகள் மீதும் ஏற்பட்ட அசூயை உணர்வு, பிரச்சினைகளை அரசியலாக்குகிற செயல்பாடுகள் மீதும் ஏற்பட்டிருக்கிறது.சொல்லப்போனால், இந்த அசூயை உணர்வு என்ற நெருப்பை வளர்த்துவிட்டு அதிலே, ஆசூயைக்கு உரியவர்கள் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். முதலிலேயே குறிப்பிட்டது போல, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆன்மீகவாதிகள் எல்லோருமே அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றக் கைநீட்டுகிறார்கள்.

நெருப்பை அணைப்பதற்கான தண்ணீராகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், அரசியலாக்குவது தவறல்ல, அது தேவையானது என்ற அடிப்படையைத்தான்.அரசியல் அக்கறை என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், அதற்கான அணிகளில் இணைந்து செயல்படுவதும் அல்ல. மக்கள் நலனில் அக்கறை, அதற்கு இடையூறாக வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறை, அந்தப் பிரச்சினைகளில் அரசின் கவனத்தைக் கோருவதில் அக்கறை, எல்லாவற்றையும் விட மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் அக்கறை... இவைகளெல்லாம் கலந்திருப்பதே அரசியல் அக்கறை. அரசியல் என்பது புகழ் பெறுவதற்கான படிக்கட்டல்ல, மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கான பாதை.அறிவியல் சார்ந்த இன்றைய புரிதல்களை இதில் பொருத்திப் பார்த்தால், இயற்கைச் சமநிலை, சுற்றுச் சூழல், பிற உயிரினங்களின் உரிமைகள் என புவி சார் கவலைகளும் அரசியல் அக்கறைதான்.

இந்த அக்கறைகள் சார்ந்த பிரச்சினைகள் எழுகிறபோது அவற்றில் தலையிடுவதையும், அலட்சியங்களை விமர்சிப்பதையும், எதிர்ப்புத் தெரிவிப்பதையும், மக்களின் விழிப்புக்கு வேண்டுகோள் விடுப்பதையும்தான் "அரசியலாக்குகிறார்கள்" என்று தள்ளுபடி செய்கிற முயற்சி நடக்கிறது. விவசாயிகள் தங்களின் நலன்கள் கைவிடப்படுவதாகக் கொந்தளிக்கிறார்கள் என்றால், அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கின்றன என்றால் ஆள்வோர் தரப்பிலிருந்து முதலில் வருகிற எதிர்வினை, "பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள்," என்பதாகவே இருக்கிறது. மக்கள் மீது மறைமுக வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுவதால் நசுங்கும் குறு/சிறு/நடு தொழில்முனைவோர் குமுறுகிறார்கள் என்றால், அதற்கு ஆதரவாகக் குரல்கள் ஒலிக்கின்றன என்றால் அப்போதும் "பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள்," என்ற எதிர்வினையே வருகிறது. கல்விக் கொள்கை பிரச்சினைகளில் மாணவர்களின் நலன்களுக்காக, மொழிக் கொள்கைப் பிரச்சினைகளில் அனைத்து மொழிகளின் சமத்துவத்திற்காக, வளர்ச்சிக்கானவை என்பதாகக் கொண்டுவரப்படும் திட்டங்களால் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்புக்காக என்று பல்வேறு தளங்களிலும் எழுகிற குரல்களுக்குச் செவிமடுப்பதற்கு மாறாக, "அரசியலாக்கப்படுகிறது" என்ற வசனம்தான் எதிர்வினையாகிறது.

அன்றும் இன்றும் இதே உத்தி

இப்போதல்ல, எப்போதுமே இந்த உத்திதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதார் அட்டை பதிவுக்காகக் குடிமக்களைப் பதறி அலையவிட்ட அந்த நாளிலும், குடியுரிமை தொடர்பாகப் பதற்றம் ஏற்படுத்தப்பட்ட இந்த நாளிலும்,இவை போன்ற எல்லாப் பிரச்சினைகளிலும் எதிர்ப்புக் குரல்களுக்கு இதுவே பதிலாகத் தரப்படுகிறது.

"ஆம், பிரச்சினையை அரசியலாக்குவது தவறுதான்" என்று மௌனமாக ஏற்றுக்கொள்கிறவர்கள், அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான நடவடிக்கைகளிலும் அரசியல் இருப்பதைக் காண மறுக்கிறார்கள். ஒரு தரப்பினரின் ஆதாயங்களுக்காக அதிகார வாய்ப்புகள் பயன்படுத்தப்படுவதும், அது நியாயப்படுத்தப்படுவதும் கூட அரசியலாக்குகிற செயல்தான் என்று சொன்னால், காதுகளை மூடிக்கொள்கிறார்கள்.அரசின் செயல்தான் மூலம், அதைத்தான் அரசியலாக்குகிற செயல் பின்தொடர்கிறது.அரசின் செயலை எதிர்ப்பது அரசியலாக்குகிற வேலை என்றால், ஆதரிப்பதும் அரசியலாக்குகிற வேலைதானே?

அரசியலாக்குவது என்றால் என்ன?அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினை பற்றிப் பேசுவதும், தீர்வு காண வலியுறுத்துவதும் அரசியலாக்குகிற செயல்பாட்டில் ஒரு பகுதி மட்டுமே. அந்தப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது என ஆராய்வது, அதைத் தீர்க்கும் வழியை விவாதிப்பது, அதற்காக மக்கள் விழிப்புணர்வு கொள்ளத் தூண்டுவது, அதில் ஊடகங்கள் கவனம் செலுத்த வைப்பது, பிரச்சினை மறக்கப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது, இறுதியில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வைப்பது ... இவையெல்லாம் அரசியலாக்குகிற செயல்பாட்டிற்குள் அடங்குகின்றன.

குப்பைக்குளத்து அரசியல்

ஒரு சிறு எடுத்துக்காட்டாக, ஒரு குளம் குப்பைக் கிடங்காக மாற்றப்படுவதாக வைத்துக்கொள்வோம்.ஒப்பந்ததாரர்கள் கழிவுகளைக் கொட்டுவதற்கு வசதியான இடமாக அந்தக் குளத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.குளம் தூர்ந்துபோகிறது.நிலத்தடி நீரின் தன்மைபாதிக்கப்படுகிறது.குடிநீரின் தரம் பாழ்படுகிறது, பயிர்களுக்கான நீரும் நஞ்சாகிறது.வட்டாரத்தின் காற்று வெளி மாசடைகிறது. தொடக்கத்தில் இதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறபோது அதிகாரிகளின் அலட்சியம், வன்முறைத் தாக்குதல் எனப் பல வகைகளில் ஒடுக்கப்படுகிறது.ஒரு கட்டத்தில் சூழலியல் இயக்கங்களால் பிரச்சினை பெரிய அளவுக்கு முன்னுக்கு வருகிறது. ஊடகங்களின் புலன் விசாரணை தொடங்குகிறது. குப்பையகற்றும் ஏற்பாட்டில் இருக்கிற ஒப்பந்ததாரர்கள்-ஆளுங்கட்சிக்காரர்கள்-அதிகாரிகள் என்ற உறவு அம்பலமாகிறது.எந்த அளவுக்கு நிலமும் நீரும் காற்றும் பாழ்படுத்தப்பட்டுவிட்டன என்ற அறிவியல் ஆய்வறிக்கை இதில் இணைகிறது.எதிர்க்கட்சிகளால் இது எடுத்துக்கொள்ளப்படுகிறது. போராட்ட இயக்கங்கள் பற்றிய செய்தி தொடர்கிறது.

வழக்கம்போல, அரசியலாக்குகிறார்கள் என்று சொல்லிவந்த ஆட்சியாளர்கள் இனி அப்படிக் கூறி நழுவ முடியாது என்று உணர்கிறார்கள்.அரசு எந்திரம் அசைகிறது.குப்பையைக் குளத்தில் கொட்டுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.நிரம்பியிருந்த குப்பைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டு, குளம் தூர்வாறப்படுகிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிற இயற்கை, சில நாட்களில் குளத்தை நல்ல நீரால் நிரப்புகிறது.குடிநீரும் பாசனநீரும் மறுபடியும் பாதுகாப்பாகக் கிடைப்பது உறுதியாகிறது.காற்றில் கலந்திருந்த நச்சு கரைகிறது.இவ்வாறு ஒரு இடத்தில் போடப்பட்ட குப்பைகள் முதல், இட ஒதுக்கீட்டு நியாயங்களுக்குப் போடப்பட்ட தடைக்கற்கள் வரையில் அரசியலாக்கப்பட்டதன் பலனாகவே அகற்றப்பட்டன.

தேர்தல் நெருங்குவதால் அரசு தலையிட்டது, தேர்தல் நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தின என்றெல்லாம் சொல்லலாம்தான்.தேர்தலில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கூட அரசியலாக்குவதன் நல்விளைவுதான்.வாக்கு அரசியலுக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்படுவது எப்போதுமே நடக்கும். அதை முறியடிக்க வேண்டுமென்றால் கூட, உண்மையான அக்கறையோடு அரசியலாக்கப்படுவதற்கு உரிய முறையில் எதிர்வினையாற்றுவதும் பிரச்சினைக்கு நியாயத் தீர்வு வழங்குவதுமே வழி. அரசியலாக்கப்படுவதாகத் தாங்களும் சேர்ந்து விமர்சிக்கிற ஊடகங்கள், அதை விட்டுவிட்டு, அரசியலாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை முன்வைக்க வேண்டும். அவ்வகையில் 'தி வயர்' இணையத்தள ஏட்டில் தில்லி வழக்குரைஞர் வினீத் பல்லா எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது.எப்போதாவதுதான் இது போன்ற எழுத்துகள் வருகின்றன.பிரச்சினைகள் அரசியலாக்கப்படுவதற்கு ஆதரவான இத்தகைய விவாதங்கள் விரிவாக மக்களிடையே கொண்டுசெல்லப்படுவது ஒரு ஜனநாயகத் தேவை.

அரசியலாக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு சரியாகச் செயல்படுவது ஒரு வகையில் அரசுக்கு நற்பெயரையும் பெற்றுத்தரும்.குடியாட்சியில் அரசின் செயல் என்பது அதிகாரத்தில் இருப்போரின் செயல் மட்டுமே அல்ல. எதிர்க் கட்சிகள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் அதில் கடமைப் பங்கிருக்கிறது.அந்தப் பங்களிப்பை வளப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் அரசியலாக்குவது தொடரட்டும்.

English summary
Here is Writer Kumaresan article on politicisation of Issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X