For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டிற்கு உள்ளேயும் சமூக வெளியிலும் ஊட்டப்படும் தாழ்வு மனப்பான்மை- அ. குமரேசன்

Google Oneindia Tamil News

வெறித்தனமாக நடந்துகொண்ட ஒருவன் கட்டுப்படுத்தப்பட்டு, அவன் அமைதியான பிறகு பேசியதிலிருந்து, அவன் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையிலிருந்தே அவ்வாறு செய்தான் என்று தெரியவந்தது. அதே போல, யாரோடும் பேசாமல் எப்போதும் ஒதுங்கியே இருந்த ஒருத்தி, ஏன் அவ்வாறு இருந்தாள் என்று தெரியவந்தது. இவ்வாறு தாழ்வு மனப்பான்மை என்ற பதம் ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் செயல்பாடுகள் பல விதமாக இருக்கின்றன. நம் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், வேலை செய்யும் இடங்களில் என எங்கும் இப்படிப்பட்டவர்களைப் பார்க்கலாம். ஏன், நமக்கே கூட அதன் தாக்கம் இருக்கலாம்.

ஒருவர் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கிறார் என்றால் அது அவரை மட்டுமே பாதிப்பதில்லை, சமூகமும் பாதிக்கப்படுகிறது. அவருடைய மட்டுமீறிய செயல்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு, அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை சமுதாயம் இழக்கிற சூழலும் ஏற்படுகிறது. அண்மையில், கல்லூரி மாணவர்களோடு இது பற்றி உரையாடுகிற வாய்ப்புக் கிடைத்தது. அது சில புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிற வாய்ப்பாகவும் அமைந்தது.

Writer Kumaresan article on politics of inferiority complex

புதைந்திருக்கும் மையக்கூறு

தாழ்வு மனப்பான்மை என்றால் என்ன? என்னால் முடியாது, மற்றவர்களைப் போல சாதிக்க முடியாது, நான் தாழ்ந்த ஆள்தான் என்று தன் மனதுக்குள் ஆழமாகப் புதைந்து போகிற உணர்வும் எண்ணமுமே தாழ்வு மனப்பான்மையின் மையக்கூறு. இது அவரவர் உடலமைப்பு, உடல்நல நிலை ஆகியவற்றில் தொடங்கி, குடும்பச் சூழல், பள்ளியில் கற்றல் திறன், வேலைகளில் போட்டித்திறன் என்று தொடர்ந்து, சமூக வெளியில் தாழ்நிலை குறித்த மனக்குமைச்சல்கள் வரையில் விரிகிறது.

"உன்னுடைய தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம் வேறு யாரோ அல்ல. நீயேதான். உன்னிலிருந்தேதான் உன்னுடைய இந்த மனநிலை உருவாகிறது. அதிலிருந்து வெளியே வா...." என்பதான அறிவுரைகளும் மனநல ஆலோசனைகளும் தாராளமாக வழங்கப்படுகின்றன. இப்படி, தானேதான் காரணம் என்று சொல்லப்படுகிறபோது, அது ஏற்கெனவே இருக்கிற தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட உதவுகிறதா அல்லது அதன் பிடியில் மேலும் சிக்கவைக்கிறதா? என்னுடைய கருத்து, அது மேலும் சிக்கவைக்கிறது என்பதே.

உள்ளேயிருந்து வருவதா?

உண்மையில் இது தனக்கு உள்ளேயிருந்து தானாக வருவதல்ல, வெளியே இருந்து புகுத்தப்படுவதே. அந்த "வெளியே" என்பதற்குள் குடும்பம், கல்விக்கூடம், பணித்தலம், சமூகம், அரசியல் எல்லாமே அடங்கும். ஏன், மனம் விரும்பிச் செயல்படுகிற இயக்கங்கள் அல்லது அமைப்புகள் கூட இதில் அடங்கும்.

உடல் அமைப்பின் அடிப்படையில் எப்படியெல்லாம் ஒருவர் தன்னால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று தள்ளிவைக்கப்படுவார் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. பார்வைத்திறன் குறைந்தோர், செவித்திறன் இழந்தோர், கை-கால் ஊனமுற்றோர் இவர்களுக்கெல்லாம் சூட்டப்பட்டிருக்கிற கேலியும் வக்கிரமுமான பட்டப்பெயர்களே சமூகம் எப்படியெல்லாம் தாழ்வுணர்வைத் தூவுகிறது என்பதற்கான சான்றுகள்தான். அதே போல, நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருக்கிறவர்கள், அதனால் உடல் மெலிந்து போனவர்கள், அல்லது பருமனாகிப் போனவர்கள் எப்படியெல்லாம் குறிப்பிடப்படுகிறார்கள் என்பது மற்றொரு சான்று.

தோல் நிறத்தை வைத்துப் பேசப்படுகிற வக்கிரங்கள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. கறுப்பு நிறமானால், அதுவும் பெண்ணின் நிறமாக இருக்குமானால், அதை மாற்றிக்கொள்வதற்குக் கூறப்படும் மருந்து ஆலோசனைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இதுவும் தாழ்வு மனப்பான்மையை ஊட்டுவதுதான். "பொண்ணு கலரா இருக்கும்னு சொன்னீங்க? ஆனா கறுப்பா இருக்கே?" "ஆமா, கறுப்புக் கலர்." -இப்படியொரு கற்பனைத் துணுக்கை முன்பு எனது முகநூல் தகவலாகப் பதிவிட்டதும், அது வெறும் நகைச்சுவைத் துணுக்கு அல்ல என்று புரிந்துகொண்டவர்கள் வரவேற்றதும் நினைவுக்கு வருகிறது.

வீடுகளில் சரியாகப் புரிந்துகொள்ளாத குழந்தைக்கு, மேலும் சரியாகப் புரியாகப் புரியவைப்பது பற்றி யோசிக்காமல் "மக்கு" என்று அடைமொழி கொடுப்பது, பள்ளி வளாகங்களுக்குள்ளேயும் எதிரொலிக்கிறதே! "ஒரு குழந்தையை (அப்படி) வையாதே பாப்பா" என்று பாரதி சொன்னது தங்களுக்கும்தான் என்ற புரிதலோடு இத்தகைய பிள்ளைகளைக் கையாளுகிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எல்லா ஆசிரியர்களும் அப்படித்தான் என்ற நிலை எப்போது வரும்? ஆசிரியர்களை அப்படியெல்லாம் சிந்திக்கவிடாததாக அல்லவா பள்ளித் தேர்வு முறைகள் இருக்கின்றன? குழந்தைகளைத் தேர்ச்சி நிலைக்கு வளர்க்காமல், தேர்ச்சி பெறும் நிலையில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டுவருகிற வடிகட்டல் ஏற்பாடுதானே கல்வி முறையிலேயே இருக்கிறது? வடிகட்டியின் துளைகளை மேலும் நுண்ணியதாக்குகிற வகையில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறதென்ற கவலை தோய்ந்த விமர்சனத்தை கல்வியுரிமைக் களச்செயல்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்களே? இதுவெல்லாம் சேர்ந்து எப்படிப்பட்ட மனப்பான்மையைப் பதியமிடும்?

உதாசீனப்படுத்தப்படும் உழைப்பு

அலுவலகங்களில் உழைப்புக்கு மரியாதை இருக்கிறதா? துப்புரவுத் தொழிலாளர்களின் பங்களிப்பால் பளபளவென்றும், சுகாதாரமாகவும் இருக்கும் தொழில் வளாகங்களில், இருப்பதிலேயே மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறவர்களாகத்தான் அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற ஊழியர்களுக்கும் பதவிப் படிநிலை அடிப்படையில் ஊதியம், அந்த அளவுப்படி மரியாதை என்றுதான் வழக்கப்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் அடித்தளமான சமூகக்களத்தில், உயர்ந்தது-தாழ்ந்தது என்ற சாதியம், பெரும்பான்மை-சிறுபான்மை என்ற மதவாதம் ஆகிய இரண்டும் கூட்டுச் சேர்ந்து தாழ்வுமனப்பான்மையை ஒரு கட்டாயத் திணிப்பாக்குகின்றன. தாழ்த்தி ஒதுக்கப்பட்டவர்களின் மனங்களில் நம்மால் இதை மாற்ற முடியாது என்ற எண்ணத்தையும், பிரித்து ஓரங்கப்பட்டவர்களின் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்வையும் வலுவாக ஏற்படுத்துகின்றன.

எந்தச் சாதியானாலும் எந்த மதமானாலும் ஒத்துப்போகிற இடம், பெண்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது. பெண்ணின் உடல் இயக்கம் சார்ந்த மாதாந்திர நிலையைக் காட்டி, அது புனிதமற்றதெனக் கூறி, ஆணுக்குப் பணிவிடை செய்வதே பெண்ணின் மகத்தான பெருமை என்று கதைகளையாக்கி, தாய்மைப் புகழ்ச்சியின் பெயரால் குடும்பத்தலைவி எனும் மாயக்கிரீடம் சூட்டி என்னென்னவோ வழிகளில் பெண்ணின் உரிமைகள் புதைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த வழிகளின் நோக்கம், ஆணுக்குப் பெண் இளைத்தவள்தான் காண் என்று போதிப்பதே அல்லவா? வீட்டில் வளரும் பெண் குழந்தைகளிடம் "உன்னால் இதைச் செய்ய முடியாது, அண்ணன் அல்லது தம்பி செய்யட்டும்", "உனக்கு மாதவிலக்கு ஆரம்பமாகிவிட்டதை ஆண்கள் இருக்கிறபோது சத்தமாகச் சொல்லாதே", "பொண்ணுன்னா பொண்ணு மாதிரி நடந்துக்க"... என்று வரிசையாக, பெண்ணின் தன்னம்பிக்கையைத் துடைத்துப்போடுகிற அறிவுரைகள்தான் எத்தனை எத்தனை!

மாறுபாலினத்தவர்கள் பிரச்சினை இன்னும் கொடுமை. அவர்கள் ஏன் தங்களின் சுயமரியாதையை விட்டு ரயில்களிலும் கடைத்தெருக்களிலும் கைதட்டுகிறார்கள், பிறகு கையேந்துகிறார்கள் என்பதன் பின்னால் அவர்களை சக மனிதர்களாக மதிக்கத் தயாரில்லாத, பாலின அடையாளம் பற்றிய குதர்க்கமான பார்வையே உள்ள சமூகக் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணையும் ஆணையும் போல திருநர்களும் இயற்கையின் படைப்புகளே என்ற அறிவியல் உண்மை எந்த அளவுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது?

கயிறாட்ட அரசியல்

இந்தக் கயிறுகள் எல்லாவற்றையும் பிடித்திருக்கிற அரசியலின் பங்கு நுட்பமானது, பரவலானது, வலிமையானது. அரசமைப்புச் சட்டப்படி சாதி, மத, பாலின, பொருளாதாரப் பாகுபாடுகள் இல்லை என்றாலும் நடைமுறையில் இந்தப் பாகுபாடுகள் உலர்ந்துவிடாமல் வைத்துக்கொண்டிருப்பது அரசியல் சதுரங்க விளையாட்டுகள்தான். ஆகவேதான் அமைப்புகளுக்கு உள்ளேயும், முட்டிமோதிக்கொண்டு இருக்கக்கூடியவர்களின் பங்களிப்புகளை எளிதில் அங்கீரிப்பதில்லை, வாய்ப்புகளைப் பரவலாக்குவதில்லை என்ற மனப்பான்மை ஊறிக்கிடக்கிறது.

இப்படியாகவெல்லாம், இன்னும் பலவகையாகவெல்லாம் ஊன்றப்படுகிற தாழ்வு மனப்பான்மையின் விளைவுகள் மோசமானவை. பாதுகாப்பற்ற உணர்வு, அங்கீகாரத்திற்கான ஏக்கம், மற்றவர்கள் மீது வெறுப்பு, எல்லோரைப் பற்றியும் புகார், விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத மனச்சுருக்கம், உற்சாக மனநிலை இழப்பு, ஒதுங்கித் தனித்திருக்கும் போக்கு, நம்மால் முடியாது என்ற கழிவிரக்கம் என்று தனி மனித அளவிலான பாதக விளைவுகளைப் பட்டியலிடுகிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். இது படிப்படியாகத் தற்கொலை நாட்டமாகவும், சில நேரங்களில் கொலைவெறியாகவும் உருவெடுக்கக்கூடும் என்கிறார்கள்.

இவ்வளவு கொடூரமான தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி? "உன் மனதில் உயர்வு மனப்பான்மைமையை வளர்த்துக்கொள்," என்று பொதுவாக அறிவுறுத்தப்படுவதுண்டு. "தற்சார்பு உணர்வை ஏற்படுத்திக்கொள்," என்று வழிகாட்டப்படுவதுண்டு. மற்றவர்களது உயர்வு மனப்பான்மைதான் இதற்கு முக்கியமான காரணம் என்பதை ஒப்புக்கொள்வோமானால், அதே மனப்பான்மை இதற்கு சிகிச்சையாகாது என்பதையும் புரிந்துகொள்ளலாம். உயர்வு மனப்பான்மை என்று வந்தாலே, நம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்று யாரையாவது தேடச் சொல்லுமே. சாதியம் இங்கே அப்படித்தான் கட்டப்பட்டிருக்கிறது. தான் மேலே இருந்து காலால் மிதிக்கப்படுகிற கோபத்தைவிட, தனக்குக் கீழே தனது காலில் மிதிபடுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற குரூரமான மனநிறைவு புகட்டப்பட்டதால் அல்லவா சாதியப் படிகள் தகராமல் இருக்கின்றன?

ஆகவே, தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதற்கான வழி உயர்வு மனப்பான்மை அல்ல, சமத்துவ மனப்பான்மைதான். நம்மை விட உயர்ந்தவர்கள் இல்லை என்ற என்ற எண்ணம் வேரூன்றிவிட்டால், நம்மை விடத் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற உணர்வும் முளைத்து ஓங்கும். அடுத்து, தற்சார்பு என்ற பெயரில் மறுபடியும் ஒதுங்கிவிடக்கூடாது. யாரும் தன்னை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம், அவர்கள் நம்மைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக்கொண்டு, இணைந்து செயல்படுகிற கூட்டுச் செயல்பாடுதான் நிலையான, நம்பகமான தீர்வு.

அந்தத் தீர்வை நோக்கித் தன்னம்பிக்கையோடு பயணிக்க, எல்லாவற்றுக்கும் முதலாவதாக, "வெளியே இருந்து என் மேல் திணிக்கப்பட்ட எண்ணத்துக்கு நான் ஏன் அடிமையாக வேண்டும்" என்ற தெளிவு பிறக்கும். பாகுபடுத்தும் ஒடுக்கல்களை எதிர்த்து நிற்கிற தன்னம்பிக்கை சுரக்கும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

English summary
Here is an article written by Writer Kumaresan on the politics of inferiority complex
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X