திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்- பக்தர்கள் குவிந்தனர்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: சூரசம்ஹாரத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதேபோல சென்னை வடபழனி உள்ளிட்ட கோவில்களிலும் இன்று சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிக முக்கியமானதாக மகா கந்த சஷ்டி விரதம் அமைந்து உள்ளது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு சூரனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடும் வகையில், ஐப்பசி மாதம் வளர்பிறையில் முருக பக்தர்கள் மகா கந்த சஷ்டி விரதத்தை தொடங்குகிறார்கள்.

கடந்த 18-ந் தேதி கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூரில் 6 நாட்கள் தங்கி கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் உள்பட முருகப்பெருமான் பாடல்களை பாராயணம் செய்து கடும் விரதம் மேற்கொள்கிறார்கள்.

திருச்செந்தூரில்...

இந்த ஆண்டு திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி உள்ளனர்.

கடல் அலைக்கு இணையாக பக்தர்கள் அலை எழுந்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் முருக சரணம் எழுப்பியவாறு பக்தர்களை காண முடிகிறது.

அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கிறது.

இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பாரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரனை வதம் செய்து ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சூரசம்ஹார விழா நடக்கிறது.

விழாவில் 6 நாட்களும் கடும் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் நீராடி பானகம் அருந்தி விரதத்தை நிறைவு செய்கின்றனர். இரவு 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூர் செல்ல முடியாத பக்தர்கள் அவரவர் வசிக்கும் ஊர்களிலேயே சஷ்டி விரதம் இருந்து முருகன் கோவில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுகிறார்கள். சூரசம்ஹாரம் முடிந்த பின் விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.

திருச்செந்தூர் முருகன் கோவிலையொட்டிய கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த விழாவின் முழு நிகழ்ச்சிகளையும் பொதிகை மற்றும் டிடி 1 தொலைக்காட்சிகளில் இன்று மாலை 4.15 மணியில் இருந்தும், வசந்த் டி.வி.யில் இன்று பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

பழனியில் ...

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக கருதப்படும் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இந்த விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று மாலையில் பழனி கோவில் கிரி வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பும், விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு முருகருக்கு சிறப்பு படையல் நைவேத்தியம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் அதைத்தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறுகின்றன.

பகல் 2.45 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு சன்னதி திருக்காப்பிடுதலும் (நடை சாத்துதல்), 5 மணிக்கு சுவாமி திருஆவினன்குடி கோவில் சென்று விசேஷ பூஜையும், 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் என்னும் யானை முக சூரன் வதமும், தொடர்ந்து கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்குகிரி வீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை சம்ஹாரம் செய்தலும் நடைபெறும்.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், பூங்கா நகர் கந்தகோட்டம் கந்தசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...