For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூணாப்பு பொடியனுக்கு போட்டித்தேர்வு அவசியமா ? சிந்தியுங்கள் மக்களே!

Google Oneindia Tamil News

நீட்டை தடை செய்வது பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம். அதே அளவு முக்கியம் குழந்தைகளுக்கான தனியார் போட்டித் தேர்வுகளை பள்ளி வளாகத்திற்குள்ளேயே நடத்துவதை தடை செய்வது பற்றியும் விவாதிப்பது.

முதலில் எவை இந்தப் போட்டித் தேர்வுகள்? அறிவியலுக்காக ஒன்றும் ஆங்கில வார்த்தைகளை அதிகம் கற்றுக் கொள்ள ஒன்றும் கணிதத் தேர்வுக்காக ஒன்றும் பள்ளி அளவில் ஆரம்பித்து மாவட்டம் மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு விருதுகளும் அங்கீகாரமும் அளிக்கப்படுகின்றது. இது நல்ல விடயம் தானே என்கிறீர்களா? நிறைய கற்றுக்கொள்வது என்றுமே நல்ல விடயம்தான். ஆனால் இதை பள்ளியின் வாயிலாக போட்டித் தேர்வு என்ற பெயரில் நடத்துவது மிகவும் அபத்தமானது.

Do we need competitive exams for kids?

இதன் தாக்கம் உங்களுக்கு புரிய முதலில் கணிதத்திற்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை உற்று நோக்குங்கள். ஒரு மூன்றாவது படிக்கின்ற குழந்தை தன்னுடைய சமச்சீர் அல்லது சிபிஎஸ்இ அல்லது இதர அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் மூலமாக அந்த வருடம் பெருக்கல் வரை மட்டும் கற்றால் போதுமானது என்று இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த மூன்றாம் வகுப்புக்கான கணித போட்டித்தேர்வு பாடத்திட்டத்தில் வகுத்தல் கொடுக்கப்பட்டிருக்கும்.

வீட்டில் பெற்றோரின் துணையுடனோ அல்லது டியூஷன் டீச்சரின் துணையுடனோ இந்தக் குழந்தை வகுத்தலை கற்றுக் கொண்டுவிடும். திரும்ப பள்ளி வகுப்பில் அந்தக் குழந்தை ஏனைய குழந்தைகளோடு அமரும்பொழுது வகுத்தல் பற்றிய கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லும். அதிகமான குழந்தைகள் இந்த போட்டித் தேர்வை எழுதி இருக்கும் பட்சத்தில் அதிகமான குழந்தைகள் பதில் சொல்லும். போட்டித் தேர்வு எழுதாத குழந்தைகளுக்கு இங்கு பிரச்சனை ஆரம்பமாகிறது.

சில போட்டித் தேர்வர்கள் இல்லை இல்லை அந்தந்த வகுப்புக்கான பாடத்திட்டத்தை ஒட்டியே கேள்விகள் கேட்கின்றோம் என்று வாதிடவும் செய்வார்கள். நமது கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை குழந்தைகளை கற்றுக்கொள்ள அனுமதிக்கின்றது. ஆனால் போட்டித்தேர்வுகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதனால் அவர்கள் கிட்டத்தட்ட செப்டம்பர்-அக்டோபரிலேயே போட்டித் தேர்வில் முதல் நிலையை நடத்தி விடுகின்றார்கள்.

அதாவது அந்த வருடத்திற்கான முழு பாடத்திட்டத்தையும் அந்த குழந்தை செப்டம்பரில் அல்லது டிசம்பரில் கற்று முடித்திருக்க வேண்டும். இது குழந்தை மீது ஏற்றப்படும் சுமை அல்லவா? இதனாலும் போட்டித் தேர்வு எழுதிய எழுதாத குழந்தைகளுக்கு இடையே பாகுபாடு வந்து விடுகிறது அல்லவா? வகுப்பறையில் ஆசிரியர் இந்த குழந்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்படுவார் என்ற உத்தரவாதம் யார் அளிப்பது?

இப்படி முன்கூட்டியே கற்றலை கட்டாயப்படுத்தும் இந்தப் போட்டித் தேர்வுகள் அவசியம் என்றால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிப்பாடத்திட்டத்தின் முக்கியத்துவம்தான் என்ன?

இதை இப்படிக் கேட்க வேண்டும். ஏற்கனவே பல வல்லுனர் குழு கொண்டு அமைக்கப்பட்ட பள்ளி பாடத்திட்டம் அமலில் இருக்கும் பொழுது என்ன காரணத்திற்காக இந்த போட்டித் தேர்வுகளுக்கு என்று தனியாக அதிக சுமை கொண்ட பாடத்திட்டங்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன? ஆம் இந்த போட்டித் தேர்வுகளுக்கான தனியான பாடத் திட்டங்கள், போட்டித்தேர்வு வகுப்புகள், மாதிரி பரீட்சைகள் என்று ஒரு தனி உலகமே உள்ளது. பள்ளிப் பாடத்திட்டம், போட்டித் தேர்வு பாடத்திட்டங்கள் என்று இரு படகில் ஒரே நேரத்தில் குழந்தைகள் பயணிக்க வைக்கப்படுகிறார்கள்.

இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. நாளடைவில் இந்தப் பள்ளிகள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் சேவையில் ஒன்றாகவே சேர்த்துவிட்டனர். வேறு எதற்கு? பள்ளிக்கட்டணம் அதோடு சேர்த்து அந்த போட்டித்தேர்வுக்கான கட்டணம் மற்றும் அதை கற்பிக்க என்று தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கத்தான். குழந்தைகள் மீது படிப்படியாக கீழ்க்கண்டவாறு இந்த போட்டித் தேர்வுகள் திணிக்கப்படுகின்றன.

1. பள்ளிகள் குறிப்பிட்ட தேதியில் அந்த போட்டித்தேர்வுக்கான பள்ளி அளவிலான தேர்வு நடத்துவதாக அறிவிக்கின்றது

2. முதல் வருடத்தில் ஒரு சில குழந்தைகள் அதாவது விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றார்கள். அந்த குழந்தைகள் பெறும் பரிசையும் விருதையும் பார்த்து மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளையும் அதில் ஈடுபட வைக்கிறார்கள்.

3. ஓரிரு வருடங்களுக்குப் பிறகு பள்ளிக்கட்டணத்தோடு சேர்த்து இந்த போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணம் வசூலிப்பதாக பள்ளி சொல்ல, பெற்றோர்கள் அதை எதிர்க்க, பிறகு மீண்டும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர்.

4. நாளடைவில் பள்ளியானது இந்த போட்டித் தேர்வை மாணவர்கள் எழுதுவது கட்டாயம் என்று கூறுவதோடு அதற்கான கட்டணத்தையும் பள்ளி கட்டணம் வசூலிக்கும் போதே
சேர்த்து வசூலித்து விடுகின்றனர் .

சரி இதற்கு என்ன செய்வது? ஒரு குழந்தை அதிகமாக கற்பதை எந்த விதத்திலும் தடை செய்ய இயலாது. ஆனால் பள்ளி வளாகத்திற்குள் இதுபோன்ற போட்டித்தேர்வுகள் நடத்தப்படுவதை அரசு தலையிட்டு உடனடியாகத் தடுக்க வேண்டும்.

இன்றைய பெற்றோர் ஒரு போட்டித் தேர்வு என்றால் உடனே அதில் தன் குழந்தை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று யோசிக்கின்றனரே தவிர இப்படி ஒரு போட்டித் தேர்வு அவசியமா என்று எண்ணுவதில்லை. இம்மாதிரி போட்டித்தேர்வுகள் குழந்தைக்கு ஒரு போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் திறனை வளர்த்துக் கொள்ள உதவும் என்று தன்னையும் சுற்றி இருப்பவர்களையும் சமாதானப் படுத்திக் கொள்கின்றனர். யாரோ பணம் சம்பாதிக்க நம் குழந்தைகளின் மீது சுமையை ஏற்றுகின்றோம் என்ற எண்ணம் வருவதே இல்லை. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் அப்படியே நாம் ஏற்றுக்கொண்டு எதிர்காலத் தலைமுறையினர் மீது திணிப்பது தகுமா? பெற்றோரே நீங்களும் சிந்திப்பீர்.

- கெளசல்யா

English summary
Do we need competitive exams for kids?. An article about the threat of allowing competitive exams for kids in school campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X