For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மட்டும் தமிழ் இருக்கை போதுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மட்டும், தமிழ் இருக்கை அமைத்தால் மட்டும் போதுமா, ஆற்ற வேண்டிய பிற அவசர பணிகள் என்ன என்பது குறித்து, பெங்களூரை சேர்ந்த 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர் கவிநன்னன் எழுதியுள்ள ஒரு திறந்த மடல் இதோ:

உலகில் வாழும் 700 கோடி மக்களில், 10 கோடி பேரின் தாய்மொழி-தமிழ். உலகின் மூத்தமொழியும், திராவிடமொழிகளின் தாய்மொழியுமான தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்கூற ஏராளமான சிறப்பியல்புகள் உள்ளன.

Will it is enough to set up a Tamil chair in harvard university?

உலக மாந்தன் முதலில் பேசியமொழி தமிழ்மொழி. உலகின் தொன்மைமொழிகளில், செம்மொழிகளில் ஒன்றுதமிழ்மொழி. ஆதிமொழியாகிய தமிழ்மொழி, உலகமொழிகளில் ஒன்றி பிணைந்திருக்கிறது என்பதை அண்மைகால மொழியியல் ஆய்வுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் தொன்மைகாலம் தொட்டே தமிழர்கள் உலகெங்கும் பரவிவாழ்ந்து வந்துள்ளதை சான்றுகளுடன் அறியமுடிகிறது.

மனிதன் வெளிப்படுத்த விரும்பும் உணர்வொலிகள் தானே மொழி என்பதற்கேற்ப, மனிதனின் உணர்வலைகளை இயல்பாக எடுத்தாளக்கூடிய ஒலியியல் மொழியாகும் தமிழ்மொழி என்பதை அனைவரும் ஏற்க தொடங்கியுள்ளனர். அதனால் தான் உலகம் தோன்றியபோது மனிதனால் பேசியது தமிழ்மொழி என்கிறோம். உலக மக்கள் பேசக்கூடிய 6 ஆயிரம் மொழிகளில் தமிழ்மொழிக்கு இருக்கும் சிறப்பு அது தானாக தோன்றிய இயல்பான மொழி என்பதாகும்.

இந்நிலையில், தமிழ்மொழிக்கும் உலகில் பேசப்படும் இதர மொழிகளுக்கும் இடையே காணப்படும் ஒத்தியல்புகளை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தமிழ்மொழியின் தொன்மை, வன்மை, திண்மை, பொருண்மை, சான்றாண்மை ஆகியவற்றை நிறுவி இருந்தாலும், தமிழ்மொழிக்கும் உலகமொழிகளுக்கும் இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கான அடித்தளத்தை பாவாணர் போன்ற மொழி பேரறிஞர்கள் இட்டு சென்றிருந்தாலும், அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசென்று தமிழ்மொழிக்கும் உலகமொழிகளுக்கும் இடையிலான‌ ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய காலக்கட்டம் உருவெடுத்துள்ளது.

உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளை சார்ந்து வாழும் உலகில், எல்லா மக்களையும் ஒரே மொழியால் இணைக்கும் முயற்சி கண்ணுக்கு தெரியாமல் நடந்துவருகிறது. இதனால், இன்று உயிர்ப்போடும் துடிப்போடும் இருக்கும் பலமொழிகள் பலவீனமடைந்து, காலப்போக்கில் கரைந்து காணாமல் போகலாம். அப்படிப்பட்ட ஒரு சூழல் தமிழ்மொழிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்றால், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களை தமிழால் ஒன்றிணைக்க வேண்டும்.

தமிழர்கள் தமிழை மறக்காமல் இருப்பதற்கு, ஆங்காங்கே தமிழ் கல்வி நிலையங்கள் அமைத்து தமிழை கற்றுத்தருவது அத்தியாவசியமாகும். அதேபோல, உலக பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ் இருக்கைகளை நிறுவி, தமிழ்விளக்கின் ஒளிவீச்சை அணையாமல் பார்த்துக்கொளல் கட்டாயமாகும். உலக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைத்து தமிழ்மொழிக்கும் உள்ளூர்மொழிக்கும், தமிழ்மொழிக்கும் உள்ளூர் மக்களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலக மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

உலக அளவில் தொன்மை வாய்ந்த, புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழ்மொழி மீதுள்ள பற்று காரணமாக மருத்துவர்கள் ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் தீவிரமுயற்சியில் இறங்கியுள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை கட்டமைக்க இந்திய மதிப்பில் ரூ.40 கோடி தேவைப்படுகிறது. அதில் ரூ.6 கோடியை இருவரும் கொடையாக வழங்கவிருப்பதாகவும், மீதமுள்ள ரூ.34 கோடியை கொடையுள்ளம் படைத்த நல் உள்ளங்களிடம் இருந்து எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க உலக அளவில் பல தமிழ்நெஞ்சங்கள் நன்கொடைகளை வாரி வழங்கியிருந்தாலும், தமிழக அரசும் தன் பங்காக ரூ.10 கோடி தொகையை வழங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதாகும்.

உலக அளவில் சிகாகோ, கொலம்பியா, டெக்சாஸ், போலந்தில் ஜாகிலோனியன், வார்சா, பெர்க்லி, லண்டன், டொரண்டோ, பெண்டிடிகன், சிங்கப்பூர், மலாயா, யேல், மிச்சிகன், சிங்கப்பூரின் எஸ்ஐஎம், பென்னில்வேனியா உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழர்களின் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு உலகின் 205 நாடுகளில் உள்ள 9369 பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மொழிக்கு இருக்கைகள் இல்லை என்பது வேதனையான உண்மையாகும்.

ஹார்வர்டில் மட்டும் தமிழ் இருக்கை தொடங்கிவிட்டால் போதுமென்று நினைக்கக்கூடாது. மாறாக, உலகில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை தொடங்குவது அவசியமாகும். தமிழ்மொழிக்கு இருக்கை அமைத்தால், தமிழ்மொழியின் இலக்கிய,மொழிவளம் வாழையடிவாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கரம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை கவனிக்க தவறக்கூடாது.

உலகில் வாழும் பணக்கார தமிழர்கள், தமிழக அரசு, உள்ளூர் அரசுகள் மனது வைத்தால் உலக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையை அமைப்பது எளிதில் சாத்தியமாகும். "செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?" என்று ஈராண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த‌ வி.இராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கேட்டுள்ளதை நினைவில் கொள்வதோடு, அவர்கள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை செயல்படுத்த முனைப்புக்காட்ட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது போல,"மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்".

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகளை தமிழக அரசு முதல்கட்டமாக உருவாக்கலாம். இது தமிழ்மொழிக்கு ஆற்றும் மிகப்பெரிய பங்களிப்பாக அமையும். இந்தியா தவிர வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 10 பல்கலைக்கழகங்கள் வீதம் தமிழ் இருக்கைகளை அமைக்க தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும" என்ற புதுமைக்கவிஞன் பாரதியின் எண்ணக்கிடக்கை நனவாகும்.

English summary
Will it is enough to set up a Tamil chair in harvard university? no, says our reader Kavinannan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X