For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நன்றி, சங்கரா!

By Staff
Google Oneindia Tamil News

சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு!
சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!!
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!!
நன்றாகப் புரியவைத்த உனக்கு,
நன்றி சங்கரா நன்றி!

பெரியார் சொல்லை
எகத்தாளம் செய்தவர்கள்-
உன் செயல்களால்
தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்-
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லையென்று!
நன்றி சங்கரா நன்றி!

காவியைக் கழற்றி, தண்டத்தை உதறி,
ஏற்கெனவே நீ இருமுறை ஓடிப் போனாய்!
அது தண்டம் தான் என்று
அப்போதே புரிந்துகொள்ளாதவர்களும்
இப்போது புரிந்துகொண்டார்கள்!
காவியை வெளுத்துக் க(ா)ட்டிய உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

இசட்பூனைப் பாதுகாப்பு,
எல்லா இழிவுகளுக்குமா?"
இல்லை என்பதை-
எங்கள் சொல்லை விடவும்,
உன் செயலால் புரியவைத்தாய்!
நன்றி சங்கரா நன்றி!

உன்காலைத் தொட்டுவணங்க
அப்பாவி மக்களையும் நீ
அப்போது அனுமதிக்கவில்லை!
இப்போது புரிந்துவிட்டது-
உழைக்கும் மக்களைத் தொடக்கூட
உனக்குத்தான் தகுதியில்லை என்று,
அவர்களுக்கும் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

உன்காலில் விழுந்ததைப்
பெருமையோடு சொன்னவர்கள்,
இப்போது-
அவமானத்தோடு அமைதியாயிருக்கிறார்கள்!
பாவம்-
பாத்திரம் அறிந்து
பிச்சையிடத்தெரியாதவர்கள்!

குளித்துவிட்டுக்
கோவிலுக்குள் வரச்சொன்னாய்-
உன் குளத்தில் குளிக்க
எங்களை அனுமதிக்காமலே!
எந்தக் குளத்தில் விழுந்தாலும்
இந்த அழுக்கைக் கழுவ முடியாது
என்பதைப் புரியவைத்த உனக்கு
நன்றி சங்கரா நன்றி!

விவேகானந்தரும், திரு.வி.க.வும்,
அடிகளாரும் போன்றோர்
அணிந்தால் தவிர
காவியை நாங்கள்
கபட வேடம்என்றே கருதுகிறோம்.
எங்கள் கருத்து சரிதான் என்று
மீண்டும் புரியவைத்த உனக்கு
நன்றி, சங்கரா நன்றி!

சங்கராச்சாரி முன்
சனாதிபதியும் நிற்கிறாரே என
சாமானியர்கள் பயந்தார்கள்!
அதுதானே உன் சாம்ராச்சியம்!
இப்போது -
நீ நின்று விளக்கம்தர,
நீதிபதி உட்கார்ந்து தீர்ப்பளிக்க
ஜன சட்ட நீதி புரிந்தது!
நன்றி சங்கரா நன்றி!

காலையில் ஆசி வழங்கி
மாலையில் கைதான
லோக குருவே!
உன்னால் எது நடந்ததோ
அது நன்றாக நடக்கவில்லை என்பதால்
உனக்கு இப்போது
எது நடக்கின்றதோ
அது நன்றாகவே நடக்கின்றது!
மடச்சாமிகள் பற்றி
மக்கள் புரிந்துகொண்டு,
இனி நடக்கப் போவதாவது
நன்றாகவே நடக்கட்டும்!
நன்றி சங்கரா நன்றி!

- நா.முத்து நிலவன்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X