For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுத்து வெச்சவன்

By Staff
Google Oneindia Tamil News

சிறுவன் கலியன் பயந்து கொண்டே காவல் நிலையத்தில் நுழைந்தான்.

ண்"யார்ரா நீ? உனக்கு என்ன வேணும்?" என்ற இன்ஸ்பெக்டரின் குரல் அவனைக் கலக்கியது.

"எம்பேரு கலியன். கெராமத்துல குமரேசங்கிற பெரியவரை ஒரு வாரமா காணோம். முனிசீபு அய்யா உங்ககிட்டதகவல் சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டு போலாம்னு வந்தேன்"

"ஊர்ல நல்ல தேடிப் பாத்தீங்களா"

"பாத்தமே. எங்கியும் இஇல்ல"

"சரி. நா வந்து வெசாரிக்கரேன்

இவனுகளுக்கு வேற வேல இல்லை. அவனக் காணும் இவனக் காணும்னு புகார் பண்றது. ரெண்டு நாளு கழிச்சுஅங்க போயிருந்தான், இங்க இருந்தான் வந்துட்டான்னு..

இரண்டு நாள் கழித்து இன்ஸ்பெக்டர் கிராம அதிகாரி வீட்டுக்குப் போனார்.

"யாரு இங்க குமரேசங்கிறது?"

"வயசாளியுங்க. பொண்டாட்டி இல்ல தனியா இருக்கு. பொண்ணை பக்கத்து ஊர்ல குடுத்திருக்கு. போனவாரம்லாட்டிரில பணம் வந்துதுன்னுச்சு. மறு நாளுக்கு ஆளக்காணல"

"ஏன் உடனே எனக்கு தெரியப்படுத்தலே?"

"பொதுவா வேல செஞ்சு கையில காசு வந்தாக்க, காரைக்காலுக்கு ரயில்ல போயி ரெண்டு நாள் இருந்து குடிச்சிட்டுவந்திருவாங்க. இந்த ஆளு ஒரு வாரம்மா காணலே. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்னுதான் சேதிவிட்டேன்..."

"என்னிக்கு அவருக்கு பணம் வந்திச்சு?"

"திங்கக் கெழம"

"திங்கக்கெழம யாரு யாரு அவரப்பாத்தாங்க?"

"திங்கக் கெழம காலையில காத்தம்மா கெயவிய பாத்திருச்சுன்னாங்க"

காத்தம்மாவைத் தருவித்தார்.

"ஏம்மா குமரேசனப் பாத்தியா திங்கக் கெழம?"

"பாத்தனே. எதிர்க்க தோட்டத்துல வேலயில இருந்துது. என்னப்பாத்திட்டு இங்க வந்துது. லாட்டிரில ஆயிரம் ரூவவந்திச்சு நீ வெச்சுக்க. என் கையில இருந்தா கரைஞ்சிரும். அப்புறமா வாங்கிக்கறேன். யார்கிட்டயும் சொல்லாத.மாப்பிள்ளக்கி தெரியக் கூடாது. எம் பொண்ணுக்கு குடுக்கப்போறேன்னாரு"

" பணத்த வாங்கிட்டயா?"

"ஆமா"

"அப்புறம் எங்க போனாரு தெரியுமா?"

"திரும்பி தோட்டத்துக்கு போயிருச்சு"

" ஒனக்கு தெரிஞ்சு யாராச்சும் தோட்டத்துக்கு வந்தாங்களா, அங்க இருந்தாங்களா?"

"கன்னையன் இருந்தான்"

"அப்புறம்"

"நா பாக்கலே"

கன்னையன் வரவழைக்கப்பட்டான்.

"நீ குமரேசன எப்ப பார்த்த?"

"போன திங்க கெயமங்க. கொல்லயிலெ கொஞ்சம் வேல இருக்கு வந்து செய்ரான்னாரு"

"என்ன வேலை?"

" பாத்தி வெட்டி பூசணி விதை போடறது"

"எத்தினி நேரம் இங்க இருந்தாரு?"

"ஒரு மணி நேரம் இருக்கும். நீ போ, எனக்கு வயிறு சரியில்ல. சோடா குடிக்கப் போறேன்னுட்டு போனாரு"

"எங்கன்னு சொன்னாரா?"

"இல்ல. இங்க எங்க சோடா கெடக்கும்? மூலக்கடையிலதான இருக்கு?"

இன்குபெக்டர் மூலைக்கடைக்கு போனார்.

"என்னம்மா இங்க குமரேசன் எப்ப வந்தாரு?"

"போன திங்க கெயமங்க. ஒரு சோடா கேட்டாரு. ஒடச்சு குடுத்தேன். முண்டாசுலேருந்து ஒரு மாத்திரை எடுத்துபோட்டுகிட்டாரு."

"என்ன மாத்திரன்னு தெரியுமா?"

" இல்ல. நொந்து போயிருந்தாரு. இருந்த காசும் தங்கலே. வந்த காசும் ஒட்டப்போகுதா... மனுசன் விசம் குடிச்சுசெத்துடலாம்னாரு"

இன்ஸ்பெக்டர் குழம்பினார். தற்கொலையோ? அப்படியானால் உடல் எங்கே?

"அவருக்கு ஒட்டு ஒறவு யாராவது உண்டா?"

"பொண்ணு பக்கத்து ஊர்ல, பொன்னுபட்டில குடுத்திருக்காரு"

ஒருவேளை அங்கு போயிருக்கலாமோ? ஒரு ஆளை அனுப்பி விசாரிக்க ஏற்பாடு செய்துவிட்டு காவல்நிலையத்துக்கு திரும்பினார். இந்தக் கிராமத்தில் வன்முறை கிடையாது. சாராயம் குடித்துவிட்டு கண்டபடிகத்துவானுக. தெளிஞ்சா சரியாயிரும்.

லாட்டிரி பணத்தை கிழவியிடம் கொடுத்திருக்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு குடிக்கப் போகவில்லை. எங்கேபோயித் தொலைந்தார்? அடுத்த வாரம் கிராமத்துக்கு போனார். மறுபடியும் ஒருமுறை விசாரித்துவிட வேண்டும்என்ற திட்டத்துடன். பக்கத்துக்கு கிராமத்துக்கு போன ஆள் திரும்பிவிட்டான் தன் பெண் வீட்டுக்கு குமரேசன்போகவில்லை என்று. குமரேசனின் பெண்ணை வரவழைத்தார்.

என்னம்மா உங்க அப்பாவை நீ எப்ப பார்த்த கடைசியா ?"

"லாட்டிரில பணம் வந்திருக்குன்னு சேதி வந்துது. என் புருசன் போயி அப்பன்கிட்ட ரூவா முழுக்கவாங்கிட்டுவான்னாரு. நாத்திக்கெழமை வந்து கேட்டேன். பணம் இன்னும் கைக்கு வல்ல. வந்ததும் தரேனுச்சு.ஊருக்கு போயிட்டேன். இப்ப சேதி வந்துச்சு. அவரக் காணும்னு. அவருக்கு என்ன ஆச்சுங்க?" அவள் கண்களில்நீர் பனித்தது.

"அதான் தெரியல" என்றவர் "அவருக்கு யாராவது விரோதம் உண்டா?" என்றார்.

"இல்லீங்க. யார் வம்புக்கும் போகாது. அது உண்டு தோட்டம் உண்டுன்னு இருக்கும்"

"குடிப்பழக்கம் உண்டா?"

"உண்டு. எனக்குத் தெரியாம குடிக்கும். சாராயம் வாங்கி குடிச்சிட்டு படுத்து தூங்கும். என் புருசன் மாதிரிமொடாக்குடி இல்ல"

கிழவியிடம் ஆயிரம் ரூவாய் லாட்டிரியில் வந்தது என்று சொல்லி இருக்கிறார். ஒரு வேளை பத்தாயிரம்வந்திருக்குமோ ? அதை எடுத்துக் கொண்டு எங்காவது ஓடி விட்டாரோ?

"அவரு எங்க லாட்டிரி சீட்டு வாங்கினாரு தெரியுமா?"

"டவுன்ல சாயபு கடையில"

"எவ்வளவு பரிசு கெடச்சிது தெரியுமா?"

"இல்லீங்க. சாயபுதான் கடையிலேருந்து ஆளனுப்பி ஒனக்கு பரிசு கெடச்சிருக்கு. வாங்கித் தாரேன். வந்துவாங்கிட்டு போன்னாராம்"

டவுனுக்கு போய் சாயபு கடையில் விசாரித்த போது ஆயிரம் ரூபாய்தான் பரிசு கிடைத்தது என்பது உறுதியானது.அவர் காணாமல் போகுமுன் நான்கு பேர் அவரை பார்த்திருக்கிறார்கள்.

கத்தம்மா, கன்னையன், சோடாக்கடை பெண். அதற்கு முதல் நாள் அவருடைய பெண் பார்த்திருக்கிறாள்.

மறுபடியும் கிழவி கத்தம்மாவிடம் போனார்.

"கத்தம்மா. நல்ல நெனவு படுத்தி பாரு. குமரேசன் ஒங்கிட்ட ஏதாவது சொன்னாரா? வெளியூர்க்குப் போறது பத்தி."

"இல்லீங்க. போனா பொண்ணூ வீட்டுக்கு போவாரு. அதுவும் ஆடியில ஒரு நாளு அம்மாவாசல ஒருநாளுன்னு"

"ஒங்கிட்ட பணம் கொடுத்து பொண்ணுகிட்ட குடுக்கணும்ன்னாரே. அப்புறம் ஏதாச்சும் சொன்னாரா...நெனவுபடுத்திசொல்லு..."

"ஒண்ணும் சொல்லல. பொன்னாங்கண்ணி விதை உணர்த்தி வச்சிருந்தேன். போற போக்குல அதைப் பாத்தாரு. ஒருகை எடுத்துக்கவான்னாரு. எடுத்துங்கன்னேன். ஒரு பிடி எடுத்து மடியில கட்டிக்கிட்டாரு. போயிட்டாரு"

"எங்க?"

"அவர் தோட்டத்துக்குதன்"

"எங்க இருக்கு அது"

"இதோ எதிர்க்கால பாருங்க. அங்கிட்டுதான்."

அங்கே போனார். கிழவியும் பின் தொடர்ந்தாள்.

தோட்டத்தின் ஒரு பகுதி புல் நீக்கப்பட்டு பூசணிப்பாத்திகளில் சிறு செடிகள் துளிர்த்திருந்தன. ஒரு ஓரத்தில்கத்தையாக பொன்னாக்கண்ணி செடிகள் வளர்ந்திருந்தன. அதைக்கண்டதும் கிழவிக்கு கண்ணில் நீர் துளிர்த்தது.

Old lady பூசணியும் பாத்தியில் பூத்திருக்க
பொன்னாங்கண்ணியும் முளைச்சிருக்க
பார்க்கக் கொடுப்பினை இல்லாம
பறந்து போனியோ என் ராசாவே

என்று குரலெடுத்து பிலாக்கணம் பாடினாள்.

இன்ஸ்பெக்டருக்கு சுருக்கென்றது.

"கத்தம்மா. பூசணிக்கு பாத்தி கட்டிருக்கு. பொன்னாங்கண்ணிக்கு ஏன் பாத்தி கட்டல?" என்றார்.

"பாத்தி கட்டறதும் கட்டாததும் அவங்க இஷ்டம். மண்ல போட்டா மொளச்சிரும். சும்மா தூவறதுதான். பூசணிமாதிரி கொம்புல படரவிடவேண்டாம்" என்றாள்.

இன்ஸ்பெக்டருக்குப் பொறி தட்டியது. போலீசுக்காரரை அழைத்து அந்த பொன்னாங்கண்ணி பாத்தியை தோண்டச்சொன்னார். இரண்டடி தோண்டியதும் ஒரு கால் தெரிந்தது. பிண நாற்றம் அடித்தது. முழுவதும் தோண்டியதும்குமரேசனின் உடல் கிடைத்தது. தலையில் ஒரு ரத்த காயம். இரத்தம் தோய்ந்த ஒரு மண்வெட்டியும் அருகில்இருந்தது.

"கன்னையனை அழைச்சிட்டு வா, விசாரிக்கணும்" என்றார்.

கன்னையன் வந்தான். குமரேசன் உடலைக் கண்டவுடன் தலை குனிந்தான்.

"நீதானே இவரை கொல செஞ்சே?"

"ஆமாங்க. ஒரு வேகத்துல நடந்திட்டுது. லாட்டிரில பணம் வந்துதாமேன்னு கேட்டேன். நா குடுத்து வெச்சதுஇவ்ளோதான்னு மடியக்காட்டினாரு. அதுல ரூவா வெச்சிருக்காருன்னு நெனச்சேன். அவரு மயங்கற மாதிரி ஒருஅடி வெச்சு பணத்தை எடுத்திட்டு போலாம்னு தோணிச்சு. பாத்தி கட்டி முடிச்சு விதைபோட்ட அப்புறம் அவருகுனியறச்சே தலையில மம்புட்டியால ஒன்ணு வெச்சேன். படாத எடத்துல பட்டுதோ என்னவோ, பொட்டுனுபோயிட்டாரு, மடியப்பிரிச்சுப் பார்த்தா பொன்னாங்கண்ணி விதை. சட்டுனு பக்கத்துல குழிவெட்டி

பொதச்சிட்டேன்.அந்தபொன்னாங்கண்ணி இப்படி ஏடாகூடமா மொளச்சு என்னைக் காட்டிக் குடுக்கும்னு தெரியல"

"நா கேட்டப்ப அவரு உன்னை போகச்சொன்னாரு. வயிறு சரியில்லன்னு சோடா குடிக்கப்போனாருன்னுசொன்னியே. பொய்தானே"

"ஆமாங்க. வயிறு சரியில்ல, வயித்து வலி மாத்திர வெச்சிருக்கேன், சோடா குடிச்சிட்டு வரேன்னு போனாரு,குடிச்சுட்டு திரும்பிட்டாரு, அப்பதான் என் புத்தி கெட்டுருச்சி"

கன்னையன் கைது செய்யப்பட்டான். குமரேசன் உடல் முறையாக அடக்கம் செய்யப்பட்டது.

குடுத்து வெச்ச ராசாவே
குடுத்தவெச்ச பணத்த
திருப்பி வாங்காமலே
தோட்டத்து மண்ணுக்குள் போனீரே

என்ற கத்தம்மாவின் ஒப்பாரி உரக்க கேட்டது.

--டாக்டர் N. சுவாமிநாதன்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X