• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்சிப் பிழைகள்

By Staff
|
(சுனாமிக்கு முன்னால் எழுதியது)

காலை நான்கு மணிக்கு ஏர்போர்ட் சவாரி ஆரம்பித்து கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டிருந்தது. எங்காவது ஓரமாக ஒதுங்கி டீகுடிக்கலாமென்றாலும் முடியவில்லை. எப்போதோ பிய்த்துப் போட்ட இட்லி சீரணமாகி வயிறு கரபுரவென்று சத்தம் போட ஆரம்பித்தது.

இன்று யார் முகத்தில் முழித்தேன்? ஓய்வின்றி சவாரிகள்தான். பெரம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு முதிய தம்பதியை இறக்கி விட்டவுடன், இன்றைக்குஇதுவே கடைசி சவாரியென்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன்

.ஆனாலும் லட்சுமி தேவி என்னை விடுவதாகத் தெரியவில்லை. ஒரு இளம்பெண்ணும், வாலிபனும் கைகாட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்கள்.அவர்களது சைகை ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தோன்றியது. நிறுத்துவது போல் வேகம் பிடிக்கும் பல்லவனைப் போல தப்பிக்க மனம்சொன்னாலும், முடியாமல் ஆட்டோவை நிறுத்தினேன்.

"மெரினா பீச் போகணும்", வாலிபன்தான் பேசினான். அடச்சே இதுதான் அவசரமா? ஏன் பஸ்ஸுல போகக்கூடாதா?

"மீட்டர் சார்ஜ்தான். பரவாயில்லையா?", வேண்டா வெறுப்பாய்ச் சொன்னேன். சென்னைவாசிகள் பெரும்பாலும் பேசிக்கலாம்ப்பா என்றுதான்சொல்வார்கள். அப்படிச் சொன்னால் ஜீட் விடலாமென்று நினைத்தேன்.

"பரவாயில்லை. போகலாம்." வாலிபனின் பதில் ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டார்கள். சென்னையில் கொஞ்சம்காசு அதிகமாக உள்ளவர்கள் இப்போதெல்லாம் கால் டாக்ஸியைத்தான் கூப்பிடுகின்றார்கள். என்னைப் போல் சூடு வைக்காமல் நியாயமாய்ஆட்டோ ஓட்டுபவர்களையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றார்கள்.

மதுரையில் பட்டப் படிப்பு படித்து, சென்னையில் வேலை கிடைக்காமல் அலையும்போது, நந்தாலால் சேட்டின் புத்திமதி மற்றும் கருணையோடு இப்போதுஆட்டோ ஓட்டுகின்றேன்.

நேர்மையால் நன்மை கிட்டாமல் இல்லை. ஷேர்டு வேனில் இடம் கிடைக்காதோர், பள்ளிக் குழந்தைகளென்று ரெகுலர் சவாரி கிடைப்பதால் கையைக்கடிக்காமல் நாள் ஓடுகின்றது. உள்ளூர ஓடிய சிந்தனைகளை பின்சீட்டில் நடந்த உரையாடல் கலைத்தது. ஓட்டும்போது பொதுவாக ஒட்டுகேட்கும்வழக்கம் எனக்கில்லை.

யாராவது வலிய பேச்சுக் கொடுத்தாலொழிய பதில் பேசாமல் பெரும்பாலும் போக்குவரத்திலேயே என் கவனம் இருக்கும். இருப்பினும்ஆரம்பத்தில் முணுமுணுப்பாய் பேசியவர்கள் நடு நடுவே உரத்தும் பேச ஆரம்பித்தார்கள். என்னையும் மீறி அந்த ஜோடியின் உரையாடலில் ஆர்வம் கூடியது.

ரியர் வியூ கண்ணாடியை லேசாக நகர்த்தி அவர்களை மேலோட்டமாக நோட்டமிட்டேன். அவர்களோ தமது பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள்.வழக்கமாக மெரீனா செல்லும் ஜோடிகள் போலின்றி அவர்கள் இருவரும் நெருங்கி கைகோர்த்து அமர்ந்திருக்கவில்லை. இந்தப் பெண்ணோ தன் கைகளைமுன்னே கோர்த்து, தலையைக் கவிழ்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். இளைஞனோ சற்றே அவள் பக்கம் திரும்பி கிசுகிசுப்பாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

"... ஒரு வழியாய் நிச்சயம் முடிஞ்சாச்சு...", பெண் கூறினாள்.

"... இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நானும் நம்பலே பிரியா..."

எப்படித்தான் அவர்கள் பேச்சில் மூழ்கினேனோ தெரியாது. ஓவர்டேக் செய்ய முயன்ற வெள்ளை அம்பாசடரை சைடு கொடுக்காமல் ஏறத்தாழஇடித்திருப்பேன்.

"ஏய்... கஸ்மாலம் ரோட்டைப் பாத்து ஓட்டுமே", அம்பாசடர் டிரைவர் தலையை நீட்டி திட்டியதும் அவமானமாயிருந்தது. ஜோடி கேட்டிருக்குமோவெனமீண்டும் கண்ணாடியை நோக்கினேன். இச்சம்பவத்தில் பின்சீட்டுக்காரர்கள் அதிக அக்கறை காட்டியது மாதிரி தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகுதமது பேச்சைத் தொடர்ந்தார்கள்.

மாலை வேளையானதால் வெளியே போக்குவரத்து அதிகமாகிவிட்டிருந்தது. இரண்டு சக்கர வாகனங்கள் விட்டால் ஆட்டோ உள்ளேயே வந்துவிடுவார்கள் போல் உரசியபடி சென்றார்கள்.

"பத்திரிக்கையெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா?"

"ஆமாம் செல்வா."

"கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட தனியா பேசவே முடியாதோன்னு நினைச்சேன்"

"இனிமே இப்படி சந்திக்க முடியுமென்று எனக்கும் தோணல"

இப்போது அவர்களது பேச்சின் உள்ளர்த்தம் ஓரளவு புரிய ஆரம்பித்தது. அடப் பாவிங்களா... என்ன பட்டணம் வாழ்வுடா இது? நிச்சயமான பொண்ணஎவனோ ஒருத்தன் பீச்சுக்குத் தள்ளிட்டுப் போறான். இந்தப் பொம்பளையும் கூடப் போகுதே?

உள்ளுணர்வு நமக்கெதுக்கு வம்புபென்று எச்சரித்தது. கடைசி சவாரி இப்படியா முடியவேண்டும்? எரிச்சல் படர்ந்தது.

ஒருவழியாய் பீச் வந்தாயிற்று. ஒழியுங்கள் சனியன்களா என்று மனதில் சபித்தபடி மீட்டர் காசு வாங்கினேன்.

"இந்தாப்பா...இதை வச்சுக்க", என்று மேலும் ஐந்து ரூபாயை என் கையில் திணித்தான். மனக்குரங்கை அதற்கு மேல் அடக்க முடியவில்லை.

"மீட்டருக்கு மேல வேண்டாம் சார். நிச்சயமான ஒரு பொண்ணை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்களே... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?ஏம்மா இது உன்னோட வாழ்க்கைப் பிரச்சினை இல்லே? உனக்கெதுக்குடா இதெல்லாம்...பொத்திக்கிட்டு போன்னு வேணாலும் சொல்லுங்க. சீய்இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்றபடி ஆட்டோவினுள் நுழையும் போது இளைஞனின் குரல் தடுத்தது.

"நீங்க எங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போலிருக்கு. நாங்கதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவசர அவசரமா நிச்சயம் நடந்ததாலஎங்களுக்குள்ள பேசிக்க அதிக நேரமில்லை. அதான் கல்யாணத்துக்கு முன்னாடி பீச்சுல சந்திக்கலாம்னு முடிவு செஞ்சோம். வர பதினைஞ்சு வடபழனியில எங்ககல்யாணம். முடிஞ்சா நீங்க கண்டிப்பா வரணும்."

செருப்பாலடித்த மாதிரியிருந்தது. "மன்னிச்சுக்குங்க சார். அம்மா நீங்களும் தான். தப்பா புரிஞ்சுக்கிட்டேன்", திக்கித் திணறி பேசி, திரும்பிப் பார்க்காமல்ஆட்டோவைக் கிளப்பி அவசரமாய் இடத்தைக் காலி பண்ணினேன்.

பீச்சில் இளஞ்சூட்டு மணலை கிளறியபடி செல்வா பேசினான், "இனிமே உங்க அப்பாவிடம் பேசி புண்ணியமில்லை. வர்ற பதினைஞ்சாம் தேதி காலை பத்துமணிக்கு பிரண்ட்ஸோட வடபழனி வந்துடறேன். நீயும் கரெக்டா வந்துடு. தாலி கட்டிய கையோட ரெஜிஸ்டர் ஆபீஸ் போயிடலாம். ஏற்கெனவே எல்லாஏற்பாடும் பண்ணிட்டேன். இதுதான் நம்ம காதல் பிழைக்க ஒரே வழி. சரியா பிரியா?"

- வந்தியத்தேவன்(t_sambandam@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:1. அக்கரைப் பச்சை2. அக்னி நட்சத்திரம்3. விதியும் சதியும்4. DRDO வெள்ளை யானையா?5. நாலுபேர்6. மயான வைராக்கியம்7. சபாஷ் ஞாநி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  • P. Santhana Krishnan
    பி சந்தான கிருஷ்ணன்
    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
  • R Mohanraj
    ஆர். மோகன்ராஜ்
    தேசிய முற்போற்கு திராவிட கழகம்

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more