For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அற்புத குருபெயர்ச்சி இதோ வருகிறது!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில்

தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி வருகின்ற ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குருபெயர்ச்சி யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் விமரிசையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நவகிரஹங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாகவும், கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குருபகவனின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரங்களாகும். வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும்.

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். குரு ஒன்பது கோள் தேவதைகளில் ஐந்தாம் இடத்தை பிடித்ததோடு ஐந்தாம் பாவமான புத்திரகாரகன் என்ற அந்தஸ்தை பெருபவர் குருபகவான் ஆகும். குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதை பிரம்மதேவன்.

தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். மங்கலமே வடிவானவர்.சர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலானவர்களின் வழிபாட்டிற்கு உரியவர். திருமால் முதலானவர்களால் புகழ் பெறுபவர், வஜ்ராயுதம் கொண்டவர், கற்பகம் போல வேண்டியவற்றை அருள்பவர்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும்.

பிரம்மனின் புத்திர்ர்களில் ஒருவரான ஆங்கீரஸ மகரிஷிக்குப் பிறந்தவரே குரு. இவர் சகல விதமான சாஸ்திரங்கள் கலைகள், வேதங்கள் ஆகியவற்றை முறையோடு பயின்று பூர்ண தேர்ச்சி பெற்று தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கினார். இவர் மனைவி தாரை இவர்களுக்கு கச்சன் என்ற புத்திரன் உண்டு.

தேவர்கள், முனிவர்களுக்கு நல்லறிவு, ஆன்மீக ஞானத்தை வழங்கும் ஞானகுருவான வியாழ பகவானுக்கு "பிரஹஸ்பதி" என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவருடைய ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் குருபகவானின் பார்வையினால் விலகுகிறது. அதனாலேயே 'குரு பார்க்க கோடி நன்மை' என்று ஜோதிட சாஸ்திரத்தில் சிறப்பாக கூறப்படுகிறது.

jupiter transit an overview

வாக்கிற்கும், அறிவுக்கும் அதி தேவதையான குரு ஆறு, எட்டு, பன்னிரெண்டு வீடுகளின் தொடர்பு இன்றி உச்ச வீடாகிய கடகராசியில் இருக்கப் பிறந்த ஜாதகன் என்றுமே சுகமான வாழ்வு வாழ்வான் என்கிறது ஜோதிடசாத்திரம்.

ஒரு சமயம், இந்திரன் துர்வாசரின் சாபத்தால்( அனைத்துச் செல்வங்களையும் இழந்தான். துயர வசப்பட்ட அவன், தேவ குருவான வியாழ பகவானைத் தேடி ஓடினான். அப்போது வியாழ பகவான் கங்கைக் கரையில், கிழக்கு நோக்கி சூரியனைப் பார்த்து நின்றபடி, ஜபம் செய்து கொண்டிருந்தார். மெய்சிலிர்த்துப் போய்ப் பரமானந்த நிலையில் முகத்தில் ஒரு பெருமிதம் ததும்பத் தவம் செய்து கொண்டிருந்த அந்த உத்தமசீலரின் திருவடிகளில் போய் இந்திரன் விழுந்து வணங்கினான். தன் துயரையெல்லாம் சொல்லி அழுதான்.

அதைக்கேட்ட தேவகுருவான பிரஹஸ்பதி அவனுக்கு ஆறுதல் சொல்லி உபதேசமும் செய்தார். ''தேவேந்திரா! ஏன் அழுகிறாய்? விவரம் அறிந்தவன், நீதி அறிந்தவன் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்ட காலத்திலும் பயப்பட மாட்டான். ஏனென்றால், செல்வங்களும் இப்போது உனக்கு நேர்ந்ததைப் போன்ற பிரச்னைகளும் நிரந்தரமானவை அல்ல! அனைத்தும் முற்பிறப்புகளில் செய்யப்பட்ட செயல்களின் விளைவாகவே உண்டாகின்றன. வாழ்வில் மேடும் பள்ளமும் வரத்தான் செய்யும். வண்டிச் சக்கரம் உருளும்போது, கீழே இருந்த பகுதி மேலே போவதும் மேலே இருந்த பகுதி கீழே வருவதுமாக இருக்கிறது அல்லவா?

அதைப்போல, நன்மைகளால் உயர்வு அடைவதும் தீமைகளால் கீழ்நிலை அடைவதும் மாறி மாறி வரத்தான் செய்யும். அப்படி இருக்கும்போது, நீ ஏன் அழுகிறாய்? நல்லதோ, கெட்டதோ எவ்வளவு காலமானாலும் சரி! அவற்றை அனுபவிக்காமல் தப்ப முடியாது. யாராக இருந்தாலும், தாங்கள் செய்த செயல்களின் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று சாமவேதத்தில் பரமாத்மா பிரம்மனுக்கு உபதேசித்திருக்கிறார்'' என்று வியாழ பகவான் இந்திரனுக்குக் கூறினார்.

அத்துடன் தானம் செய்வதின் மகிமை, அவற்றின் பலன்கள் அதிகரிக்கும் விதம், இடத்திற்குத் தகுந்தபடி தானப் பலன்கள் அதிகரிப்பது எனப் பல வகைகளிலும் இந்திரனுக்கு உபதேசம் செய்த குருபகவான், இந்திரன் துயரத்தில் இருந்து விடுபட்டுப் பழைய நிலையை அடைய வழியும் காட்டினார். இந்திரனும் அப்படியே செய்து, பழையபடியே சொர்க்கலோக வாழ்வைப் பெற்றான்.

ஒருமுறை குருபகவான் காசிக்குச் சென்று, ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட்டார். அந்த வழிபாடு, பதினாயிரம் தேவ வருடங்கள் நடந்தது. முடிவில் சிவபெருமான் அங்கே தரிசனம் தந்து குரு பகவானிடம், ''அரும்பெரும் தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தியானத்திலேயே நிறுத்தியதால் உன்னை 'ஜீவகாரகன்' என்று உலகத்தவர் வழங்குவார்கள். உன்னுடைய குணங்களாலும் நம்முடைய திருவருளாலும் நீ இந்திரனுக்கு குருவாக விளங்குவாயாக!'' என்று சொல்லி வரமளித்தார் எனக் காசிகாண்டம் எனும் நூல் கூறுகிறது.

கால புருஷனுக்கு தர்மகர்மாதிபதியான குருபகவான் தங்க நிறம் கொண்ட திருமேனி படைத்தவர். நான்கு திருக்கரங்களைக் கொண்டவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலை, யோக தண்டம், அபயம் என ஏந்தி இருப்பார். சாந்தமான வடிவத்தோடு, சதுரமான பீடத்தில் இருப்பார். கிழக்கு நோக்கி, தலையில் மகுடம் தாங்கி வீற்றிருப்பார். பொன்னிறத் திருமேனி கொண்ட இவர் பொன்னிறச் சந்தனம் பூசி, பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாடை, பொற்குடை, பொன்னிறக்கொடி, பொன் தேர் ஆகியவற்றைக் கொண்டவர்.

தனுர் ராசியையும் மீன ராசியையும் ஆட்சி வீடாக கொண்ட குருபகவானுக்கு உரியவை:

தானியம் - கடலை,

ரத்தினம்- கனகபுஷ்பராகம்,

மலர்-முல்லை,

சமித்து-அரசு,

சுவை-இனிப்பு,

உலோகம்-தங்கம்,

மிருகம்-மான்,

பட்சி-கௌதாரி,

அன்னம்-தயிர்சாதம்,

திசை-வடக்கு,

தேவதை-பிரம்மா,

பிரத்யதி தேவதை-இந்திரன்.

வாகனம்- யானை/அன்னம

தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் கெளரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர் புத்திரகாரகன், பீதாம்பரர், பிரஹஸ்பதி, வியாழ பகவான் என போற்றப்படும் குருபகவானின் பெயற்சியை வரவேற்க்க தயாராவோமாக!

குறிப்பு: குருவின் சிறப்புகள் கட்டுரையாக குருப்பெயர்ச்சிவரை தொடர்ந்து வரும்.

English summary
Jupiter transit in Libra 2017 will commence on September 12, 2017 as per Thirukkanitha panchang. This significant celestial development is going to trigger several important astrological changes in the lives of people. Everyone is likely to be impacted by this astrological transition, depending on the Moon Sign to which he or she belongs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X