கம்பம் கே.கே.பட்டி கருமாரியம்மன் திருவிழா...20 அடி நீள அலகு குத்தி பூக்குழி இறங்கிய பக்தர்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தேனி: கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில்தான் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இங்கு கருமாரியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். எனவே இந்தக் கோயிலுக்குத் தென் திருவேற்காடு என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு பிரசித்தம். இந்த வருட விழா கடந்த செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவின் பிரதான நாளான இன்று பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக, விரதம் இருந்த 150 பக்தர்களுக்கு, முல்லைப் பெரியாற்றின் கரையில் அர்ச்சகர் வெங்கடேசன் ராஜா அலகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளைஞர், இளம்பெண்கள், முதியோர் உட்பட 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாயில் வேல் குத்திக் கொண்டனர்.

5 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள அலகுகளை அவர்கள் குத்திக்கொண்டதைக் காண பக்தர்களுக்கு மெய்சிலிர்த்தது. அவர்களுடன் 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து முல்லைப் பெரியாற்றில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

கோயில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். 4 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பொங்கல், மாவிளக்கு மற்றும் பூந்தேர் பவனி வைபவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளன. இந்த விழாவில் கூடலூர் கம்பம் சின்னமனூர் உட்பட தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
