சொந்த வீடு இருந்தும் குடி போக தடையா? சிறுவாபுரி முருகனை வணங்குங்க!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டாலே அனேகமாக சொந்தவீடு அமைந்துவிடும்.

சென்னை: பெரும் வசதி படைத்தவர், லட்ச ரூபாய் வாடகை வீட்டில் இருப்பார். மாதம் குறைந்த வருமானம் சம்பாதிப்பவரோ சொந்த பிளாட் வாங்கி அமோகமாக இருப்பார். இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை.

Siruvapuri Murugan Temple to bless with own house

வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு பழமொழி உண்டு. வீடு கட்டுவது என்பது நம் ஒவ்வொருவரின் கனவும் கூட. மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது சாதாரண விஷயமா?

ஜோதிட ரீதியாக யாருக்கு சொந்த வீடு அமைகிறது என்று பார்த்தால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-ம் ஸ்தானம் யாருக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறதோ, அவர்களுக்கு எதிர்பாராமல் சொந்த வீடு மனை யோகம் அமைகிறது.

சிலரோ நிலம் வாங்க வேண்டும் என்று பணத்தை பையில் எடுத்துக் கொண்டு போல் அலைவார்கள். ஒரு அங்குலம் நிலம் கூட சரியாக அமையாது. பிறகு ஏதாவது ஒரு செலவில் கையில் இருந்த காசும் பனிக்கட்டி போல கரைந்து போகும். இன்னும் சிலரோ வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணமோ பொருள் வசதியோ இருக்காது, ஆனால் எப்படியாவது கடனை வாங்கியாவது இடத்தை வாங்கி கட்டியும் விடுவார்கள்.

இதே நிலைதான் சொந்த வீடு தேடுபவர்களுக்கும். பெரும் வசதி படைத்தவர், லட்ச ரூபாய் வாடகை வீட்டில் இருப்பார். மாதம் குறைந்த வருமானம் சம்பாதிப்பவரோ சொந்த பிளாட் வாங்கி அமோகமாக இருப்பார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பணத்தில் கோடிஸ்வரராக புரளுபவர் சொந்த வீடு இல்லாமல் இருப்பார். அவரிடம் வேலை பார்க்கும் குமஸ்தாவோ சொற்ப சம்பளத்தையே இறுக்கி பிடித்து சேர்த்து வைத்து, எப்படியோ சொந்த வீட்டை வாங்கி விடுவார்.

நிலம் வாங்கியவர்களை, பிளாட் வாங்கியவர்களை கேட்டு பாருங்கள். அவர்கள் போட்ட குட்டிகரணம் எவ்வளவு என்று. "அப்பாடா, நொந்து நூடுல்ஸ் ஆகி எப்படியோ பிளாட் வாங்கிவிட்டேன்." என்பார்கள். வீடு அமைவது சாதாரண விஷயம் இல்லை.

Siruvapuri Murugan Temple to bless with own house

ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும், கடன் வாங்கி வீடு வாங்கினாலும், மூதாதையர் சொத்து மூலம் வீடு கிடைக்கும் அமைப்பு இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் வேண்டும். ஏனென்றால் எத்தனையோ பேர் சொந்த வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலையில் உள்ளனர்.

அதுபோன்று கடன் வாங்கி வீடு கட்டினாலும் அந்த வீட்டை கடன் பிரச்னை தாங்காமல் விற்று விடும் நிலைமையில் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பூர்வீக சொத்தின் அடிப்படையில் வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர். காரணம் கோர்ட், கேஸ் போன்றவைகள்.

சொந்த வீடு யோகம் தரும் கிரக அமைப்புகள்:

1.சொந்த வீட்டுமனை அமைய ஜாதக ரீதியாக நான்காம்பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டாலே அனேகமாக சொந்தவீடு அமைந்துவிடும்.

2.ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம்அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் இடத்து அதிபகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும்,திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

3. நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அது போல பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக 4ல் அல்லது 4 ம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4.மேலும் கால புருஷனுக்கு நான்காம் பாவாதிபதியான சந்திரனும் செவ்வாயும் இணைந்து சந்திர மங்கள யோகம் பெற்றாலும் ஜெனன ஜாதக நான்காம் பாவாதிபதியும் செவ்வாயும் இணைவு பெற்றுவிட்டாலும் சொந்த வீடு அமைந்துவிடுகிறது.

5 ஜெனன ஜாதகத்தில் நான்காம் வீட்டில் எத்தனை பலமான சுப கிரகங்கள் அமைகின்றதோ, நான்காம் வீட்டு அதிபதியுடன் எத்தனை பலமான சுப கிரகங்கள் சேர்க்கைபெறுகின்றதோ, நான்காம் வீட்டை எத்தனை பலமான சுப கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.

Siruvapuri Murugan Temple to bless with own house

6. ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எந்த பாவாதிபதியானாலும் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ருசக யோகத்தை அடைந்தால் அவர்களுக்கு அரண்மணை போன்ற வீடுகள் அமைந்துவிடும். என்றாலும் செவ்வாய் அசுப தொடர்பு பெற்று விட்டால் அந்த வீடே அவர்களுக்கு பிரச்சனையாக அமையும்.

7. ஜெனன ஜாதகத்தில் புதன், குரு, சனி, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் நான்காம் பாவாதிபதிகளாகி முறையே பத்ர யோகம், ஹம்ச யோகம், சச. யோகம், மாளவியா யோகம் ஆகிய பஞ்சமகா புருஷ யோகங்களை (ஏதாவது ஒன்று) பெற்றுவிட்டால் அவர்களுக்கு அரண்மணை போன்ற வீடுகளும் ராஜ வாழ்க்கையும் அமைந்துவிடும்.

8. ஜெனன ஜாதகத்தில் அழகிய சொகுசு வீடுகளுக்கு காரகனான சுக்கிரன் சூரியனை கடந்து நின்று சுப வெசியோகம் பெற்றுவிட்டாலும் மிக அழகான சொகுசு மிக்க வீடு அமைந்துவிடும்.

9. ஜெய்மினி விதிப்படி செவ்வாய் ஆத்மகாரகனாக அமைந்து காரகாம்சத்தில் சந்திரன் மற்றும் சுக்கிரன் நிற்பது மற்றும் காரகாம்சத்திற்கு நான்கில் சுப கிரகங்கள் நிற்பது வசதியான வீடு அமையும் என்கிறது.

ஜாதகத்தில் மேலே கண்ட அமைப்பு இருந்தும் சொந்த வீடு கனவு நிறைவேறவில்லையா? அப்படியென்றால் நீங்கள் சிறுவாபுரி முருகனைதான் வணங்கவேண்டும்.

சிறுவாபுரி எங்குள்ளது?

Siruvapuri Murugan Temple to bless with own house

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்தலபுராணம்:

அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.

ஸ்தல சிறப்புகள்:

Siruvapuri Murugan Temple to bless with own house

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை! மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.

இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

Siruvapuri Murugan Temple to bless with own house

பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும்.

தை மாதத்தில் கிரஹப்பிரவேசத்திற்க்கு நாள் குறித்துவிட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரி செல்லுங்கள். சொந்த வீட்டில் குடியேறுவது நிச்சயம்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Wining a house no longer a dream with the blessings of Siruvapuri Murugan Siruvapuri is located about 40 kms from Chennai on Chennai Kolkata highway. The temple is located about 3 km off the highway. Lord Muruga here is believed to grant wishes for those intend to buy or construct a house. Many people who wish to buy a house visit Lord Muruga here for blessings to fulfill their wish.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற