Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா..பகல்பத்து உற்சவம் நாளை ஆரம்பம்..ஜன.2ல் சொர்க்கவாசல் திறப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

Vaikunta Ekadasi festival today begins with Tirunedunthangam at Srirangam temple

பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார்கள். பெருமாள் அவர்களைத் தடுத்து,பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன் என்றார். ஆனால் அசுரர்கள் அதை அலட்சியப்படுத்தியதோடு பெருமாளுக்கே வரம் தருவதாக கூறினர்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பெருமாள், நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும் என்றார். அசுரர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் முக்தி அடைய வேண்டும் என்றனர். அதே போல ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு தனது சக்தியில் இருந்து உதித்த ஏகாதசியினால் அவர்களை வதைத்தார் பெருமாள்.

இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தில் வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார். வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டவே, அதற்கு இறைவனும் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாகவே மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பெருமாள் கோவில்களில் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று மாலை தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை அதிகாலை தொடங்குகிறது.

பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் நம்பெருமாள் காலை 5.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார். காலை 7.15 மணி முதல் காலை 11.30 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல் பத்தின் முதல் நாளான நாளை மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10வது நாள் ஜனவரி 1ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஜனவரி 2ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 2ஆம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 8ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 9ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

ராப்பத்து ஏழாம் திருநாளான 8ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 11ஆம் தேதி தீர்த்தவாரியும், 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+